"கங்குலி அரசியலுக்கு வந்தால்.." அடங்கிய யூகங்களை மீண்டும் பற்ற வைத்த கங்குலி மனைவி! பரபர தகவல்
கொல்கத்தா: அமித் ஷா உடனான கங்குலியின் சந்திப்பு பல்வேறு யூகங்களை எழுப்பி உள்ள நிலையில், கங்குலியின் மனைவி இப்போது கூறிய சில கருத்துகள் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை பிசிசிஐ தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான தாதா கங்குலியின் வீடுற்கு சென்ற மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா அங்கேயே இரவு உணவு அருந்தினார். இதன் காரணமாக அங்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
கடந்த சில ஆண்டுகளாகவே கங்குலி அரசியலில் குதிக்கலாம் என்று கூறப்பட்டு வரும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

அமைச்சர் அமித் ஷா
கொல்கத்தாவிற்குச் சுற்றுப்பயணம் சென்றுள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலியின் வீட்டில் இன்று இரவு உணவு சாப்பிட்டார். மத்திய அமைச்சரின் மகன் ஜெய் ஷா, பிசிசிஐயில் உள்ள நிலையில், கங்குலி வீட்டில் அமித் ஷா உணவு சாப்பிட்டுள்ளார். இருப்பினும், இந்த சந்திப்பு அரசியல் ரீதியானது இல்லை என்றும் கடந்த 10 ஆண்டுகளில் தான் பல முறை அமித் ஷாவை சந்தித்து உள்ளேன் என்றும் கங்குலி கூறி இருந்தார்.

டோனா கங்குலி
இதனிடையே கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையின் தொடக்க விழா ஒன்றில் கங்குலியும் அவரது மனைவி டோனாவும் கலந்து கொண்டனர். அப்போது கங்குலி அரசியலில் களமிறங்க வாய்ப்புள்ளதாக என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்த கங்குலி மனைவி டோனா, "இது போன்ற யூகங்கள் கிளம்பிக் கொண்டு தான் இருக்கும். நீங்கள் கூறுவது போல எதாவது நடந்தால் அது அனைவருக்குமே தெரியும்.

சிறப்பாகச் செயல்படுவார்
நான் சொல்ல வருவது என்னவென்றால், கங்குலி அரசியலில் நுழைந்தால் அவர் சிறப்பாகச் செயல்படுவார். மக்கள் நலனுக்காக முடிந்த வரை பாடுபடுவார். மற்றொன்றையும் நான் சொல்ல விரும்புகிறேன். அமித் ஷா உடனான டின்னர் சமயத்தில் அரசியல் ரீதியாக எதுவும் ஆலோசிக்கப்படவில்லை. அவர் மட்டுமில்லை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எங்கள் குடும்பத்துடன் மிகவும் நெருக்கமானவர் தான்" என்று கூறியுள்ளார்.

பாஜக தலைவர்கள்
கங்குலி வீட்டில் இரவு விருந்து சமயத்தில் அமித் ஷா உடன் பாஜக எம்பி சுகந்தா மஜூம்டர், மேற்கு வங்க எதிர்க்கட்சி தலைவர் சுவேந்தி அதிகாரி ஆகியோரும் சென்று இருந்தனர். அப்போதே செய்தியாளர்களிடம் பேசிய கங்குலி, இது அரசியல் ரீதியிலான சந்திப்பு இல்லை என்றும் தனக்கு அரசியலில் நுழைய ஆர்வம் இல்லை என்றும் திட்டவட்டமாகக் கூறி இருந்தார். இந்தச் சூழலில் அவரது மனைவியின் இந்த கருத்து முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

அனைவருக்கும் பிடித்த நபர்
அரசியல் கட்சிகளைத் தாண்டி, பல்வேறு அரசியல் தலைவர்களின் ஃபேவரைட்டாக கங்குலி உள்ளார். திரிணாமுல் மற்றும் பாஜக தலைவர்கள் உடன் அவர் நல்ல உறவிலேயே உள்ளார். இவர்களைத் தவிர அங்குள்ள இடதுசாரி தலைவர்கள் உடனும் கங்குலிக்குச் சுமுகமான உறவே உள்ளது. முன்னதாக, கடந்த 2021 மேற்கு வங்க சட்டசபைத் தேர்தல் சமயத்திலேயே அவர் பாஜகவின் முதல்வர் வேட்பாளராகக் களமிறங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது. இருப்பினும், அவர் அது நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications