சீன ராணுவ குவிப்புக்கு சிவப்பு கம்பளம் தந்த இலங்கை குஜராத் பாதுகாப்பு கண்காட்சியில் பங்கேற்பு!
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் நடைபெற்று வரும் 12-வது பாதுகாப்பு தளவாட கண்காட்சியில் இலங்கை பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் பங்கேற்றார். மேலும் இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகானுடன் தென்னகோன் இருதரப்பு பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
குஜராத்தின் காந்திநகரில் 12-வது பாதுகாப்பு தளவாட கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை மட்டுமே பயன்படுத்தி இந்திய நிறுவனங்கள் மட்டுமே கலந்து கொள்ளும் முதல் கண்காட்சியாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. இந்திய தொழில்துறை, இந்திய தொழில்துறையுடன் சம்பந்தப்பட்ட சில கூட்டு ஸ்தாபனங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் உட்பட சுமார் 1300 கண்காட்சியாளர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். முதன் முறையாக 450-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், உடன்படிக்கைகளும் கையெழுத்தாகின்றன என்றார்.

பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு
மேலும் இந்திய கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு அமைச்சர்களின் உச்சிமாநாடு, இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாகும். 46 நட்பு நாடுகள் இதில் கலந்து கொள்கின்றன. இன்று, சர்வதேச பாதுகாப்பு முதல் உலகளாவிய வர்த்தகம் வரை கடல்சார் பாதுகாப்பு உலகளாவிய முன்னுரிமையாக வளர்ச்சி பெற்றுள்ளது. தீசா விமான நிலையத்தின் கட்டமைப்பு, நாட்டின் பாதுகாப்பிற்கும், பகுதியின் வளர்ச்சிக்கும் குறிப்பிடத்தக்க சாதனையாகும் என்றார் பிரதமர் மோடி.

ராஜ்நாத்சிங் பேச்சு
பாதுகாப்புத்துறை முதலீடு தொடர்பான கருத்தரங்கில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், 2025-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் பாதுகாப்பு தளவாட உற்பத்தியை தற்போதுள்ள 12 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 22 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போர் விமானம், விமானம் தாங்கி கப்பல், பெரிய பீரங்கிகள், தாக்கும் ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றின் மூலம் உள்நாட்டுத் தொழிற்துறை அதன் திறமைகளை நிரூபித்துள்ளது. இந்த அனுபவங்கள் எதிர்கால சந்ததியினருக்கான பாதுகாப்பு ஆயுதங்கள், அமைப்புகளை உருவாக்கவும், ஆதரிக்கவும், மேம்படுத்தவும் உதவும் என்றார்.

இலங்கை அமைச்சர் பங்கேற்பு
இந்த கண்காட்சியில் இலங்கை பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் பங்கேற்றார். மேலும் இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகானுடன் இருதரப்பு பாதுகாப்பு உறவு தொடர்பாகவும் தென்னகோன் ஆலோசனை நடத்தினார். அதேபோல் மத்திய இணை அமைச்சர் அஜய் பட், பாதுகாப்பு செயலாளர் அஜய் குமார் ஆகியோரையும் தென்னகோன் சந்தித்து பேசினார்.

சீனாவுக்கு செங்கம்பளம்
இலங்கையானது சீன ராணுவத்துக்கு சிவப்புக் கம்பளம் விரித்து விட்டிருக்கிறது. இலங்கையின் தெற்கு, வடக்கு, கிழக்கு மாகாணங்களி மக்களோடு மக்களாக சீன ராணுவம் ஊடுருவி இருக்கிறது. இதனால் தென்னிந்திய பகுதிகளை சீனா உளவு பார்க்கிறது என அண்மையில் மத்திய உளவு அமைப்புகள் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தன. இலங்கையின் பல பகுதிகள் சீனாவுக்கு தாரை வார்க்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவின் பாதுகாப்பு தளவாட கண்காட்சியில் இலங்கை பாதுகாப்புத்துறை இணை அமைச்சரின் பங்கேற்பு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications