"18 மாத குழந்தை.." தெரு நாய்கள் கடித்து குதறியதில் பலி.. நாய்கள் கடித்தால் என்ன செய்ய வேண்டும்
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் வெறும் 18 மாதங்களே ஆன குழந்தை ஒன்று எதிர்பாராத விதமாக நாய்கள் கடித்ததால் உயிரிழந்த ஒரு மிக மோசமான சம்பவம் நடந்துள்ளது.
இந்தியாவில் சமீப காலங்களில் தெரு நாய்கள் பிரச்சினை மிகப் பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது. ஆங்காங்கே தெரு நாய்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கொடூரமாகத் தாக்கி வருகிறது.
குறிப்பாகச் சாலைகளில் அல்லது பூங்காக்களில் இருக்கும் குழந்தைகளை நாய்கள் தாக்குவதும் இதனால் உயிரிழப்புகளும் கூட ஏற்படும் நிகழ்வுகளும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
நாய்கள்: இதனிடையே அப்படியொரு மோசமான சம்பவம் தான் இப்போது ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள மேட்டவலசா கிராமத்தில் 18 மாத குழந்தை ஒன்று தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்தது. அப்போது அங்கே இருந்த தெரு நாய்கள் சேர்ந்து அந்த குழந்தையைக் கொடூரமாகத் தாக்கியுள்ளது. இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை நடந்துள்ளது.

இதில் அந்த குழந்தை படுகாயமடைந்த நிலையில், அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கே அந்த குழந்தைக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தது. இந்த கொடூர சம்பவம் நேற்றிரவு மேட்டவலசா கிராமத்தில் நடந்துள்ளது. இதில் உயிரிழந்த அந்த குழந்தை சாத்விகா என அடையாளம் காணப்பட்டுள்ளது.
18 மாத குழந்தை: வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் குழந்தை தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அங்கே வந்து 5 தெருநாய்கள் திடீரென குழந்தையைக் கடிக்கத் தொடங்கியுள்ளது. அந்த குழந்தையின் உடலில் சுமார் 10க்கும் மேற்பட்ட நாய்க் கடி மார்க்குகள் இருந்துள்ளன.
நாய் கடித்ததால் மகள் அலறிய நிலையில், அலறல் சத்தம் கேட்டு சிறுமியின் பெற்றோர் விரைந்து வந்து சிறுமியை மீட்டனர். இதையடுத்து விஜயநகரம் மாவட்டம் ராஜாமில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சிறுமி அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எச்சரிக்கை: சமீப காலங்களாகவே இதுபோல நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்தே வருகிறது. இதனால் குழந்தைகளை ஜாக்கிரதையாகப் பாதுகாக்கும்படி வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர். குறிப்பாகத் தெருநாய்கள் அருகே குழந்தைகளைச் செல்ல அனுமதிக்க வேண்டாம்.

அதைத் தாண்டியும் நாய்கள் கடித்துவிட்டால், ரத்தக் கசிவு எதுவும் இல்லாமல், சிறிய அளவிலான கடி, சிராய்ப்புகள் மட்டும் இருந்தால் கடிபட்ட இடத்தை 15 நிமிடம் நன்கு நீரில் கழுவ வேண்டும். அதன் பிறகு உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று வேக்சின் போட்டுக் கொள்ளுங்கள்.
அதேநேரம் ஒன்றுக்கும் மேற்பட்ட நாய்கள் கடித்திருந்தாலோ, அல்லது ரத்தம் அதிகம் கசியும் அளவுக்குக் கடித்திருந்தாலோ அது ஆபத்து. மேலும், கண், மூக்கு, வாய் போன்ற இடங்களில் உமிழ்நீர் பட்டிருந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். தடுப்பூசி செலுத்த வேண்டும். அத்துடன் வெறிநாய் கடி எதிர்ப்பு புரதமான immunoglobulin செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
நாய்கள் கடித்தால், அதன் வாயில் இருக்கும் வைரஸ்கள் நமது உடலில் நரம்புகள் மூலம் மூளையைச் சென்றடையும் ஆபத்து உள்ளது.












Click it and Unblock the Notifications