இன்று ரயில்வே பட்ஜெட்: கட்டணங்கள் உயருமா?
டெல்லி: நாடாளுமன்றத்தில் இந்த ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. நிதி நெருக்கடியால் தவிக்கும் ரயில்வேயை மீட்க, கட்டணங்கள் உயர்த்தப்படுமா என்று இன்று தெரிய வரும்.
கடந்த மே மாதம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு பதவி ஏற்றது. அதைத் தொடர்ந்து 2014-15 நிதி ஆண்டின் ஒரு பகுதிக்கான (2014 ஆகஸ்டு முதல் 2015 மார்ச் வரையிலானது) பட்ஜெட்டை அப்போதைய ரயில்வே மந்திரி டி.வி.சதானந்த கவுடா தாக்கல் செய்தார்.
ஏற்கனவே ஜூன் 25-ந் தேதி முதல் பயணிகள் கட்டணம் 14.2 சதவீதமும், சரக்கு கட்டணம் 6.5 சதவீதமும் உயர்த்தப்பட்டதால், அந்த ரயில்வே பட்ஜெட்டில் கட்டண உயர்வு செய்யப்படவில்லை.

இந்த நிலையில், 2015-16 நிதி ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை, அந்த துறைக்கான மந்திரி சுரேஷ் பிரபு பாராளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்கிறார்.
இதுதான் பாரதீய ஜனதா கூட்டணி அரசின் முதல் முழுமையான ரயில்வே பட்ஜெட் என்பதும், சுரேஷ் பிரபு தாக்கல் செய்யும் முதல் ரயில்வே பட்ஜெட் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரயில்வே துறை கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிற நிலையில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
ரயில்வே திட்டங்களை நிறைவேற்றுவதற்கு பெருமளவு நிதி ஆதாரம் தேவைப்படுவதால், பயணிகள் கட்டணத்தையும், சரக்கு கட்டணத்தையும் உயர்த்துவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதே நேரத்தில் டீசல் விலை குறைந்துள்ளதால், சுமார் ரூ.15 ஆயிரம் கோடி வரை சேமிக்க முடியும். இதன் காரணமாக கட்டண குறைப்புக்கு வாய்ப்பு உண்டா என்றும் கேள்வி எழுந்துள்ளது.
ஆனால், மின்கட்டண உயர்வு, நிர்வாக செலவினங்கள் அதிகரிப்பு போன்றவற்றின் காரணமாக கட்டண குறைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
தற்போது சரக்கு கட்டணத்திலிருந்துதான் பயணிகள் கட்டண இழப்பு சமாளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சரக்கு கட்டணத்தில் இருந்து பயணிகள் கட்டண இழப்பை சரிக்கட்டுவதற்கு வழங்கப்படுகிற மானியத்தின் அளவு ரூ.24 ஆயிரம் கோடியாக உள்ளது. இதை குறைப்பதற்கான வழிமுறைகள் ரயில்வே பட்ஜெட்டில் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications