முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்ய தமிழக அதிகாரிகளுக்கு அனுமதி மறுப்பு: கேரளம் அடாவடி
கேரளா: முல்லைப்பெரியாறு அணையை ஆய்வு செய்ய சென்ற தமிழக அதிகாரிகளுக்கு கேரள வனத்துறை அதிகாரிகள் நேற்று தடை விதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகளையும் அனுமதிக்க மறுத்த கேரள வனத்துறையினர், அணைக்கு செல்வதற்கான காரணம் குறித்த விளக்க கடிதம் கொடுத்த பிறகே அனுமதிக்க முடியும் என்று கூறியதால் அவர்கள் திரும்பி வந்தனர்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 142 அடியாக உயர்த்தப்பட்டது. இதற்கு கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் முல்லைப்பெரியாறு அணையை தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தினசரி சென்று ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

நேற்று காலை 10 மணியளவில் தமிழக பொதுப்பணித்துறை உதவி கோட்ட பொறியாளர் சவுந்தரம் மற்றும் 5 ஊழியர்கள் முல்லைப்பெரியாறு அணைக்கு வழக்கம் போல் ஆய்வுக்கு சென்றனர். அப்போது தேக்கடியில் உள்ள கேரள வனத்துறை அதிகாரிகள் அங்குள்ள வருகை பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு செல்லுமாறு கூறியுள்ளனர். மேலும் ‘அணைக்கு செல்வதற்கான காரணம் குறித்து விளக்க கடிதம் தர வேண்டும். அவ்வாறு தந்தால் மட்டுமே அனுமதிக்க முடியும்' என அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இதேபோன்று தினசரி ஆய்வு பணிக்கு சென்ற தமிழக அதிகாரிகளை கேரள வனத்துறையினர் தடுத்து நிறுத்திய போது, கேரள வனத்துறை உயர் அதிகாரிகளிடம் தமிழக அதிகாரிகள் முறையிட்டனர்.
அப்போது அன்றாட பணிக்கு செல்லும் அதிகாரிகளிடம் விளக்க கடிதம் கேட்க தேவை இல்லை என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். இந்த நிகழ்வை தமிழக அதிகாரிகள் நேற்று சுட்டிக்காட்டினர். ஆனால் விளக்க கடிதம் கொடுத்தால் மட்டுமே அணைக்கு செல்ல அனுமதிக்க முடியும் என்று கேரள வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதனால் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும், கேரள வனத்துறை அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து தமிழக அதிகாரிகள் அணைக்கு செல்லாமல் திரும்பி வந்து விட்டனர். அணைப்பகுதிக்கு பாதுகாப்பு சென்ற தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கும் கேரளா வனத்துறையினர் அனுமதி மறுத்தனர்.
இதுகுறித்து தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘முல்லைப்பெரியாறு அணைக்கு வெளியில் இருந்து யாரேனும் ஆய்வுக்கு வந்தால் அவர்களிடம் விளக்க கடிதம் கேட்டால் அது நியாயம். அன்றாட ஆய்வுப்பணிக்கு செல்லும் தமிழக அதிகாரிகளுக்கு விளக்க கடிதம் கேட்பது எந்த வகையில் நியாயம்.
தினமும் ஒரே விதமான பணிக்கு தான் செல்கிறோம். ஒவ்வொரு நாளும், ஒரே மாதிரியான விளக்க கடிதம் கொடுத்து கொண்டே இருக்க முடியுமா? இந்த பிரச்சினை குறித்து சென்னையில் உள்ள தமிழக பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் செய்யப்படும்' என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications