நிதி ஆயோக் நிலையான வளர்ச்சிக் குறியீட்டில் தமிழகம் 3-வது இடம்! டாப் 2 இடங்களில் உத்தரகாண்ட், கேரளா!
டெல்லி: நிதி ஆயோக் 2023-24-ம் ஆண்டுக்கான நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீட்டை வெளியிட்டுள்ளது. இதில் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில் நாட்டில் ஏற்பட்டுள்ள சிறந்த முன்னேற்றங்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு இந்தக் குறியீட்டில் முன்னோடி மாநிலமாக உருவெடுத்துள்ளது. இதர மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாடு 3-வது இடத்தில் உள்ளது.
நிதி ஆயோக் வெளியிட்ட நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீட்டில் 79 மதிப்பீடுகளுடன் உத்தரகாண்ட், கேரளா முதலிடத்தில் உள்ளன. 3-வது இடத்தில் தமிழ்நாடு 78 மதிப்பீடுகளுடன் உள்ளது. 4-வது இடத்தில் கோவா, 77 மதிப்பீடுகளுடன் உள்ளது.

தமிழ்நாடு தொடர்பாக நிதி ஆயோக் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டின் கூட்டு மதிப்பீடு தற்போதைய வெளியீட்டின் படி 78 ஆக உயர்ந்துள்ளது. இது 2018-ல் 66 ஆக இருந்தது. இந்த முன்னேற்றம் தமிழ்நாட்டின் வளர்ச்சிப்பாதையை எடுத்துரைக்கிறது. சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்கிறது. சமூக சமத்துவம், பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகியவற்றில் தமிழ்நாட்டின் மிகச்சிறந்த உறுதிப்பாட்டை இது சுட்டிக்காட்டுகிறது.
கண்ணியமான வேலை, பொருளாதார வளர்ச்சி: பொருளாதார வாய்ப்புகளை மேம்படுத்துதல், நிலையான வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் போன்ற பயனுள்ள கொள்கைகளை செயல்படுத்துவதன் மூலம் வர்த்தகம், தொழில் துறைகளில் தமிழ்நாடு தனது முன்னிலையை நிலைநிறுத்தியுள்ளது. மாநில அரசு பல்வேறு திறன் மேம்பாட்டு திட்டங்களைத் தொடங்கியுள்ளது.
நல்ல ஆரோக்கியம், நல்வாழ்வு): மாநிலத்தின் சுகாதார முன் முயற்சிகள் கணிசமான முன்னேற்றத்தைக் காட்டுகின்றன. 2023-24-ம் ஆண்டில் 97.18 சதவீத பிரசவம் முறையான மருத்துவமனைகளில் நடைபெற்றுள்ளன. அனைத்து மக்களுக்கும் தரமான சுகாதாரப் பராமரிப்பை உறுதி செய்யும் சமூக சுகாதார திட்டங்களே இந்த சாதனைக்கு காரணம்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: தமிழ்நாடு அதன் புவியியல் பரப்பளவில் கிட்டத்தட்ட 25 சதவீதத்தை வனப்பகுதியாக கொண்டுள்ளதால், சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு முன்னுரிமை அளித்துள்ளது. இந்த முயற்சி பல்லுயிர் பாதுகாப்பிற்கு பங்களிப்பது மட்டுமல்லாமல், பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
நிலையான வளர்ச்சி இலக்குகளின் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல முன்னோடி முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது.
2023-24 -ம் ஆண்டுக்கான நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீட்டில் தமிழ்நாடு முன்னணியில் இருப்பது (3-வது இடம்) தெரியவந்துள்ளது. இந்த வெற்றி நிலையான வளர்ச்சியை நோக்கிய மாநிலத்தின் ஒருங்கிணைந்த அணுகுமுறையை பிரதிபலிக்கிறது.
நீடித்த வளர்ச்சி இலக்குகளை உள்ளூர்மயமாக்கலுடன் இணைத்து செயல்படுத்துவதில் நித்தி ஆயோக்குடனான ஒத்துழைப்பை வலுப்படுத்தி தமிழ்நாடு அரசு செயல்படும். இவ்வாறு நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.
மேலும் 57 மதிப்பீடுகளுடன் பீகார் கடைசி இடத்தில் உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் 62 மதிப்பீடுகளையும் நாகாலாந்து 63 மதிப்பீடுகளையும் பெற்று மோசமான மாநிலங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
யூனியன் பிரதேசங்களில் சண்டிகர், ஜம்மு காஷ்மீர், புதுச்சேரி, அந்தமான் நிக்கோபர் தீவுகள் மற்றும் டெல்லி ஆகியவை முதல் 5 இடத்தில் உள்ளன.












Click it and Unblock the Notifications