தமிழக சட்டமன்றம் முதல் மேற்கு வங்க கலவரம் வரை - இன்று காலையில் கவனிக்க வேண்டிய செய்திகள்
இன்று காலை நாளிதழ்களிலும், செய்தி இணையதளங்களிலும் வெளியான செய்திகளில் கவனிக்க வேண்டிய சிலவற்றை சுருக்கமாக காணலாம்.
நடிகர் சிம்புவின் கார் மோதி முதியவர் பலியானதாக தினத்தந்தி இணைய பக்கத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
சென்னை தேனாம்பேட்டை இளங்கோவன் தெருவில், கடந்த 18ஆம் தேதி சாலையை கடக்க முயன்ற முதியவர் ஒருவர் மீது அந்த வழியாக வந்த கார் ஒன்று மோதியது. இதில் படுகாயம் அடைந்த முதியவர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்த முதியவர் தாமஸ் சாலை பகுதியை சேர்ந்த முனுசாமி (வயது 70) என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், முதியவர் மீது மோதிய கார் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த கார் நடிகர் சிம்புவின் கார் என்றும், சம்பவம் நடந்த அன்று, காரில் சிம்புவின் தந்தை நடிகர் டி.ராஜேந்தர் தனது குடும்பத்தினருடன் சென்ற போது விபத்து ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
தற்போது அந்த காரை ஓட்டி சென்ற தாமஸ் சாலை பகுதியை சேர்ந்த டிரைவர் செல்வம் (29) என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 மாதங்களில் 208 வாக்குறுதிகள்
ஆட்சிக்கு வந்த 10 மாதங்களில் 208 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம் என தமிழ்நாடு மாநில முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டுப் பேசிய மு.க.ஸ்டாலின், ஆளுநர் உரையில் தொடங்கி, நிதியமைச்சரின் பட்ஜெட் அறிவிப்புகள் வரை என பட்டியலிட்டு இதுவரை 208 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், இவை அனைத்துக்கும் முறையான அரசாணைகள் வெளியிடப்பட்டு, அவை முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்றும் அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்றும் முதல்வர் பேசியுள்ளார் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
'சென்னை ஐஐடி-யில் மான்களுக்கு ஆந்தராக்ஸ் இல்லை'
சென்னை ஐ ஐ டி வளாகத்தில் மான்கள் தொடர்ந்து இறந்து வந்த நிலையில், அவை ஆந்த்ராக்ஸ் நோய் பாதிப்பால் இறப்பதாக சொல்லப்படும் கூற்று உண்மையில்லை என்று தமிழ்நாடு கால்நடை மற்றும் உயிரின அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS) தெரிவித்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னை ஐஐடி வளாகத்தில், மான்கள் தொடர்ந்து இறந்து வரும் நிலையில், அதற்கு ஆந்த்ராக்ஸ் நோய் பாதிப்பு காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்பட்டது.எனவே, அந்த இறந்த மான்களை உடற்கூராய்வுக்கு அனுப்பாமல் 6-8 அடி குழியில் புதைக்க உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் மான்களின் உடலிலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வு செய்ததில், ஆந்த்ராக்ஸ் பாதிப்புக்கான தடயங்கள் ஏதும் இல்லை என்று தெரியவந்ததாக, இன்று வெளியான செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு பட்ஜெட் 2022: டெல்டாவில் முன் கூட்டியே தூர் வாரும் பணிகள் - விவசாயிகள் என்ன சொல்கிறார்கள்?
- காலநிலை நெருக்கடி குறித்த அறிக்கை சென்னையை எச்சரிப்பது ஏன்?
இந்த மான்கள் இறப்பு விவகாரம் தொடர்பாக, பிபிசி தமிழ் முன்பே விரிவாக செய்தி வெளியிட்டிருந்தது. அதில், மான்களின் இறப்புக்கான காரணங்களில் ஒன்றாக நாய்களால் வேட்டையாடப்படுவதும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆந்த்ராக்ஸ் தொடர்பாகவும் வல்லுநர்கள் பதிலளித்திருந்தனர். செய்தியைப் படிக்க
ஆதாரங்களை அழிக்கவே மமதா போகிறார்
மேற்கு வங்க வன்முறை தொடர்பாக, கள நிலைமையை ஆராய பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி தலைமையில் அமைக்கப்பட்ட குழு, சம்பவம் நடந்த இடத்துக்கு செல்வது, தடுக்கப்பட்டதாக டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய சுவேந்து அதிகாரி, எங்களைப் போகவிடாமல் தடுத்துவிட்டு மமதா மட்டும் போகிறார். அங்கு போய் ஆதாரங்களை அழிக்கப்போகிறார் என்றும் குற்றம்சாட்டினார்.
சம்பவம் என்ன?
மேற்குவங்க மாநிலம் பீர்பம் மாவட்டம், ராம்புராட் பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உள்ளூர் தலைவர் பாது ஷேய்க், இரு தினங்களுக்கு முன் கொலை செய்யப்பட்டார். இவரது கொலையால் ஆத்திரமடைந்த கும்பல் ஒன்று, நேற்று, செவ்வாய்க்கிழமை போக்டுய் கிராமத்தில் வீடுகளுக்குத் தீ வைத்ததில், 8 பேர் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டனர். இது மாநிலத்தில் பரபரப்பான பேசுபொருளாக மாறியுள்ளது.
தேசியக் கல்விக் கொள்கையை நுழைய விடமாட்டோம்: அமைச்சர் பொன்முடி
மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க மார்ச் இறுதிக்குள் குழு அமைப்போம் என்றும் தேசியக் கல்விக் கொள்கையை தமிழகத்தில் நுழைய விடமாட்டோம் என்றும் சட்டமன்றத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்த்தாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
தேசியக் கல்விக்கொள்கை தொடர்பாக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துப் பேசிய உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, " திமுக நிச்சயமாக தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கும். தேசிய கல்விக்கொள்கை தமிழகத்தில் நுழைய முதல்வர் விடமாட்டார்.கல்வித்துறையும் விடவே விடாது" என்று பதிலளித்ததாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













Click it and Unblock the Notifications