அலாவுதீன் அற்புத விளக்குக்கே டஃப் கொடுத்த மந்திரப் பெட்டி! ஆந்திராவை அலறவிட்ட மோசடி.. மக்களே உஷார்
அமராவதி: அள்ள அள்ள குறையாத செல்வங்களை வழங்கும் அதிசய பெட்டி என, பழங்கால பொருளை ஏமாற்றி விற்பனை செய்ய முயன்ற நபர்களை ஆந்திரப் பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர்.
அலிபாபா குகையிலிருந்து எடுக்கப்பட்ட அற்புத விளக்கை தேய்த்தால், பூதம் வரும் என்றும், அது மனிதன் கேட்கும் அனைத்து செல்வங்களையும் கொடுக்கும் என்றும் கற்பனை கதைகளில் சொல்லப்படுவதுண்டு. அதே பாணியில் பழங்கால பொருள் ஒன்றை ஏமாற்றி ரூ.50 கோடிக்கு விற்க முயன்றுள்ள சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம், நாகர் கர்னூல் மாவட்டம், முன்னனூர் கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் சங்கர், நாராயன்பேட்டை மாவட்டம், சங்கம்பண்டாவை சேர்ந்த சிக்கன் வியாபாரி காசிம், விகாராபாத் மாவட்டம், தண்டூரை சேர்ந்த எலக்ட்ரீஷியன் அசார், நல்கொண்டா மாவட்டம், திண்டிதேவதல்லி தாண்டாவை சேர்ந்த காசிராம் ஆகியோர் ஐதராபாத் ஹயத் நகர் பஞ்சாரா காலனியில் வசித்து வருகின்றனர். இவர்கள் நேற்றிரவு ஆட்டோவில் வரங்கல் நோக்கி சென்றுக்கொண்டிருந்திருக்கின்றனர்.
அப்போது ஜனகாமா மாவட்டம், பெம்பர்ட்டி ஒய் சந்திப்பில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்ததை பார்த்த நால்வரும் ஆட்டோவை யு டர்ன் செய்திருக்கின்றனர். இதை பார்த்து சந்தேகமடைந்த போலீசார், ஆட்டோவை விரட்டி சென்று பிடித்திருக்கின்றனர். எங்களை பார்த்தவுடன் ஏன் திரும்பி சென்றீர்கள் என்று போலீசார் கேட்டதற்கு நால்வரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர்.
இதனையடுத்து, ஆட்டோவில் சோதனையிட்டபோது பழங்கால பெட்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. பின்னர் நால்வரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன. அதாவது, சாதாரண வேலை செய்து வந்த நால்வரும், விரைவாக பணக்காரர்களாக மாற நீண்ட நாட்களாக திட்டம் தீட்டி வந்திருக்கின்றனர். இந்த திட்டத்தை செயல்படுத்த ஆங்கிலேயர் கால பெட்டியை பழைய பொருட்கள் விற்பனை செய்யும் கடையிலிருந்து வாங்கியிருக்கிறார்கள்.
பின்னர் இதுகுறித்து உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறியிருக்கிறார்கள். சமீபத்தில் பெய்த கனமழையில், வானத்திலிருந்து எரிகல் ஒன்று விழுந்ததாகவும், அது விழுந்த இடத்தில் சென்று பார்த்தபோது இந்த பெட்டி கிடைத்ததாகவும் அக்கம் பக்கத்தினரை நம்ப வைத்திருக்கின்றனர். மட்டுமல்லாது இந்த பெட்டியை வைத்திருப்பவர்கள் வீட்டில் பணம் கொட்டும் என்றும் கூறியுள்ளனர். இந்த விஷயம் காட்டுத்தீ போல பரவ, பெட்டியை வாங்க போட்டி ஏற்பட்டிருக்கிறது.
இப்படியாகத்தான் வரங்கல்லில் ஒருவர் ரூ.50 கோடிக்கு பெட்டியை வாங்குவதாக கேட்டிருக்கிறார். அவருக்கு பெட்டியை காட்ட 4 பேரும் ஆட்டோவில் செல்லும் போது போலீசிடம் சிக்கியுள்ளனர். இதனையடுத்து 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இவர்கள் விற்பனை செய்ய வைத்திருந்த பெட்டி, ஆங்கிலேயர் காலத்தை சேர்ந்தது என்று தெரிய வந்திருக்கிறது. சாதாரண பழங்கால பொருட்கள் விற்பனை கடைகளிலேயே இது போன்ற பொருட்கள் கிடைக்கும் என்றும், எனவே பேராசையை தூண்டி பணம் பறிப்பவர்களை நம்ப வேண்டாம் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications