ஜனவரி முழுவதும் வெதுவெதுப்பான குளிர்காலம் தொடரும்... இந்திய வானிலை ஆய்வு மையம்
டெல்லி: நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவிவரும் வெப்பநிலை, முந்தைய ஆண்டுகளில் இதே காலகட்டத்தில் நிலவிய வெப்பநிலையைக் காட்டிலும் அதிகமாக உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குளிர்கால மாதங்களில் ஒன்றான ஜனவரி மாதத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவிவரும் வெப்பநிலை, இதற்கு முந்தைய ஆண்டுகளில் இதே காலகட்டத்தில் நிலவிய வெப்பநிலையைக் காட்டிலும் அதிகமாக உள்ளது என்றும் இது வருகிற நாட்களிலும் தொடரும் என்றும் டெல்லி வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

இது குறித்து இந்திய வானிலை ஆய்வுத்துறை இயக்குனர் லட்சுமண் சிங் ரத்தோர் கூறியதாவது:
வரலாற்றிலேயே மிக வெப்பமான ஆண்டாக 2015-ம் ஆண்டு பதிவாகியுள்ளது. அதன்படி, கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நிலவிய வெப்பநிலையின் அளவு முந்தைய ஆண்டுகளில் அதே காலத்தில் நிலவிய வெப்ப அளவை விட அதிகமாக பதிவாகியுள்ளது. இது இந்த மாதமும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி ஜனவரி முழுவதும் வெதுவெதுப்பான குளிர்காலமாக இருக்கும்' என்றார். மேலும், பசிபிக் பெருங்கடலில் வெப்பநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்பட்ட எல்-நினோவின் பாதிப்பு, இந்த ஆண்டு குளிர்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக லட்சுமண் சிங் ரத்தோர் கூறியுள்ளார்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கடும் குளிரும், பனிமூட்டமும் நிலவி வருகிறது. கடந்த சில நாட்களாக டெல்லி முழுவதும் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. காலை 9 மணிக்கு கூட 50 மீட்டர் தொலைவில் உள்ள எதையும் மக்களால் பார்க்க முடியவில்லை.












Click it and Unblock the Notifications