தாலிபான் பாணியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்.. மேற்கு வங்கத்தில் தொடரும் குற்றங்கள்! ஷாக்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்ததாக கூறி தாலிபான் ஸ்டைலில் பெண்கள் மீது பொது வெளியில் தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட பெண் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்துள்ளார்.
தாலிபான் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் பெண்கள் மீது பொது வெளியில் தாக்குதல் நடத்தப்படுவது குறித்து செய்திகள் வருவதுண்டு. திருமணமான பெண் வேறு ஒரு ஆணுடன் திருமணத்திற்கு புறம்பான உறவில் இருந்ததாக கூறி இந்த தாக்குதல்கள் நடத்தப்படும். ஆனால் இதுபோன்ற தாக்குதல்கள் தற்போது மேற்கு வங்கத்தில் அதிகரிக்க தொடங்கியுள்ளன.

இரு நாட்களுக்கு முன்னர் மேற்கு வங்க மாநிலம் உத்தர் தினாஜ்பூர் மாவட்டம் சோப்ராவில் பொது வெளியில் இளம்பெண் மீது சிலர் கொடூரமான தாக்குதலை நடத்தியிருந்தனர். தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட இளம்பெண் திருமணத்திற்கு மீறிய உறவை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தார். எனவே இந்த விவகாரம் தொடர்பாக பஞ்சாயத்து கூட்டப்பட்டது. பஞ்சாயத்தில் ஆவேசமடைந்த உள்ளூர் மக்கள் சிலர் திடீரென இளம்பெண்ணை தாக்க தொடங்கினர்.
இதில் சோகம் என்னவெனில், கிராம மக்கள் தாக்குதலை தடுக்காமல் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டும், தாக்குதலை செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டும் இருந்துள்ளனர். இந்த வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் ஷேராகி பெரும் விவாதங்களை கிளப்பியிருந்த நிலையில், தாக்குதல் நடத்தியவர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் தாஜேமுல் என்று அம்மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்த விவாதங்கள் அடங்குவதற்குள் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது ஜல்பைகுரி மாவட்டத்தின் புல்பாரி பகுதியில் இளம் தம்பதியினர் வசித்து வந்திருக்கின்றனர். சில நாட்களுக்கு முன்னர் மனைவி திடீரென காணவில்லை என கணவர் போலீசில் புகார் அளித்திருக்கிறார். புகார் கொடுக்கப்பட்ட ஓரிரு நாட்களுக்கு பின்னர் மனைவி திரும்பி வந்திருக்கிறார். இது குறித்து இருவருக்கு இடையேயும் சிறு சண்டை நடந்தாலும், பின்னர் சமாதானமாகியுள்ளனர்.
ஆனால், இது இத்துடன் நிற்கவில்லை. இப்பெண் குறித்து கிராம மக்கள் கடும் சந்தேகங்களை கிளப்பியுள்ளனர். வேறு ஒரு நபருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததால்தான் அவர் ஓடிவிட்டார் என்று ஊர் மக்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர். விவகாரம் பஞ்சாயத்து தலைவரான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நிர்வாகி மாலதி ராய்-யிடம் சென்றிருக்கிறது. கணவன்-மனைவி இருவரையும் மாலதி அழைத்திருக்கிறார்.
இருவரும் அவரது வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். அங்கு வைத்து இருவர் மீதும் மாலதியின் ஆதரவாளர்கள் கும்பலாக தாக்குதல் நடத்தியுள்ளனர். ஏற்கெனவே ஊர்கார்களின் குற்றச்சாட்டு, அதனை தொடர்ந்து நடந்த கும்பல் தாக்குதல் கணவன்-மனைவி இருவருக்கும் மனதளவிலும், உடல் அளவிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, மனைவி தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்திருக்கிறார்.
இது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் அளித்திருக்கிறார். வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவில் இலக்கியத்துறையில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த மாநிலம்தான் மேற்கு வங்கம். அவ்வளவு அறிவுஜீவிகள் இருந்த மாநிலத்திலா? தாலிபான் ஸ்டைல் கொடூரங்கள் அரங்கேறி வருகிறது? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications