முஸ்லிம்களை படுகொலை செய்ய வேண்டும் என சாமியார்கள் சர்ச்சை பேச்சு- போலீசில் திரிணாமுல் காங். புகார்
ஹரித்வார்: இந்தியாவில் முஸ்லிம்களை படுகொலை செய்ய வேண்டும் என்று ஹரித்வார் கூட்டத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய இந்துத்துவா சாமியார்கள் மீது திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலே போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் டிசம்பர் 17 முதல் டிசம்பர் 19 வரை இந்து சாமியார்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சாமியார்கள் வன்முறையை தூண்டும் வகையில் பேசினர்.

முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதங்கள்
இந்து மதத்தைக் காக்க இந்துக்கள் ஆயுதங்களை கையில் எடுக்க வேண்டும்; முஸ்லிம்களை படுகொலை செய்து மக்கள் தொகையை குறைக்க வேண்டும்; மியான்மரைப் போல இனச்சுத்திகரிப்பு செய்ய வேண்டும். இந்து மதத்தைக் காக்க இந்து பிரபாகரன் ஒருவர் உருவாக வேண்டும் என பகிரங்கமாகவே சாமியார்கள் பேசினர்.

மன்மோகன்சிங்குக்கு எதிரான பேச்சு
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், சிறுபான்மையினருக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் பேசினார். நான் மட்டும் எம்.பி.யாக இருந்திருந்தால் நாதுராம் கோட்சே போல என் கையில் துப்பாக்கியை எடுத்து 6 தோட்டாக்களாள் மன்மோகன்சிங்கை படுகொலை செய்திருப்பேன் என்றும் ஒரு சாமியார் பேசினார். இத்தகைய பேச்சுகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டும் வருகிறது.

திரிணாமுல் காங். புகார்
இத்தகைய வன்முறை பேச்சுகள் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வன்முறையையும் மத மோதலையும் தூண்டும் வகையில் பேசிய சாமியார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஹரித்வார் போலீசில் திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலே புகார் கொடுத்துள்ளார். மேலும் சாமியார்கள் மீது 24 மணிநேரத்தில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்துக்குப் போவோம் என்றும் சாகேத் கோகலே தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

போலீஸ் விளக்கம்
இது தொடர்பாக ஹரித்வார் காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்வதந்திர குமார் கூறுகையில், இதுவரை வழக்குப் பதிவு செய்யவில்லை. நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்றார். மேலும் உத்தரகாண்ட் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அம்மநைல போலீசார் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் தாங்கள் பேசியது சரிதான் என்கிற வகையில் சாமியார்கள் ஊடகங்களிடம் விளக்கம் அளித்தும் வருகின்றனர்.












Click it and Unblock the Notifications