கோடிக்கணக்கில் ஆபரணங்கள்.. 46 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்படும் புரி ஜெகன்நாதர் கோவில் பொக்கிஷ அறை!
புவனேஸ்வர்: ஒடிசா புரி ஜெகன்நாதர் கோயிலின் பொக்கிஷ அறை வரும் 14 ஆம் தேதி திறக்கப்படுகிறது. இந்த அறையில் விலைமதிப்பு மிக்க நகைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த பொக்கிஷ அறையின் சாவி, தமிழ்நாட்டில் இருப்பதாக பாஜக குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பண்டைய காலங்களில் கோயில்களில் பொக்கிஷங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. நாடு முழுவதும் உள்ள கோயில்களில் இன்னும் திறக்கப்படாத பல பொக்கிஷ அறைகள் இருக்கின்றன. இவைகள் சமீப காலமாக திறக்கப்பட்டு வருகின்றன. கேரளாவின் திருவனந்தபுரம் கோயிலில் இருந்த பொக்கிஷ அறை சில ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது, ஒடிசா மாநிலத்தில் உள்ள புரி ஜெகன்நாதர் கோயிலின் பொக்கிஷ அறை விரைவில் திறக்கப்பட இருக்கிறது.

கடந்த 46 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பொக்கிஷ அறை திறக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் வரும் 14ம் தேதி இந்த அறை திறக்கப்பட இருக்கிறது. இந்த அறையில் உள்ள விலைமதிப்புமிக்க பொருட்களைக் கணக்கிடுவதற்காக கோயில் நிர்வாகத்தால் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த குழுவின் தலைவராக முன்னாள் ஒடிசா உயர் நீதிமன்ற நீதிபதி பிஸ்வநாத் ராத் இருக்கிறார். இவர்தான் இந்த கோயிலின் பொக்கிஷ அறை திறப்பது குறித்து தெரிவித்திருக்கிறார்.
"ஒடிசாவின் பாஜக அரசு, திட்டமிட்டதைப்போல அனைத்தையும் நடத்தினால் கோயிலின் பொக்கிஷ அறை ஜூலை 14ம் தேதி திறக்கப்படும். இது குறித்த யோசனை மாநில அரசிடம் வைக்கப்படும். பொக்கிஷ அறையை திறப்பது குறித்து ஒரு நிலையான செயல்பாட்டு நடைமுறையை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். இதையும் அரசாங்கத்திடம் சமர்பிப்போம்" என்று கூறியுள்ளார்.
இதற்கு முன்னர் கடந்த 2018ம் ஆண்டு கோயிலின் பொக்கிஷ அறையை திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், திறக்க முடியவில்லை. இந்த அறை திறக்கப்படும்போது பொக்கிஷங்களை பாதுகாப்பது, அறையை புனரமைப்பது, அறையின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்துவது என பல முக்கிய பணிகள் மேற்கொள்ளப்படும்.
முன்னதாக இந்த அறையின் சாவி தமிழ்நாட்டுக்கு சென்றுவிட்டதாக பாஜக குற்றம்சாட்டியிருந்தது. அண்மையில் ஒடிசா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளத்தை எதிர்த்து பாஜக தீவிர பிரசாரத்தை மேற்கொண்டிருந்தது. குறிப்பாக, அப்போதைய முதல்வராக இருந்த நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசாக கருதப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த வி.கே.பாண்டியனை குறி வைத்து பாஜக பிரசாரத்தை கட்டவிழ்த்துவிட்டிருந்தது.
பாண்டியன் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்றும் எனவே, புரி கோயிலின் பொக்கிஷ அறையின் சாவி தமிழ்நாட்டுக்கு சென்றுவிட்டது என்றும் பாஜக குற்றம்சாட்டியிருந்தது. ஒடிசா சட்டப்பேரவை தேர்தலில் பிஜூ ஜனதா தளம் கடும் தோல்வியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications