முத்தலாக் செய்தால் 3 வருட சிறை.. 'ராஜ்யசபாவை மீறி' அவசர சட்டம் பிறப்பித்த மோடி அரசு!
Recommended Video

டெல்லி: முத்தலாக் கூறுவதை குற்றச் செயல் என வரையறுக்கும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கி உள்ளது.
மூன்று முறை தலாக் என கூறி கணவன் மனைவியைப் பிரித்து வைக்கும் நடைமுறை இஸ்லாமிய சமூகத்தின் சில பிரிவுகளில் கடைபிடிக்கப்படுகிறது. இதனால் பல பெண்கள் பாதிக்கப்படுவதாக இஸ்லாமியப் பெண்கள் தரப்பில் கோப குரல்கள் எழுந்தன.
இந்த நிலையில் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறையில் ஈடுபடும் ஆண்களுக்கு அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் வகையிலான சட்ட மசோதாவை லோக்சபாவில் தாக்கல் செய்து குரல் வாக்கெடுப்பில் நிறைவேற்றியது பாஜக அரசு.

ராஜ்யசபாவில் எதிர்ப்பு
ராஜ்யசபாவில் சட்ட மசோதா விவாதத்திற்கு வந்தபோது, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவில் குறைபாடுகள் உள்ளதாக கூறி எதிர்த்தன. பரிந்துரை குழுவிற்கு மசோதாவை அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறியதால் மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை.

அவசர சட்டம்
இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், அவசர சட்டம் மூலமாக முத்தலாக்கை குற்றச் செயல் என வரையறுக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த அவசர சட்டம் உடனடியாக அமலுக்கு வந்துள்ள போதிலும், அடுத்ததாக ராஜ்யசபாவில் சட்டத்தை நிறைவேற்ற வேண்டியது கட்டாயமாகும்.

கால மாற்றம்
ஸ்கைப் அல்லது வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் மூலமாகக்கூட முத்தலாக் கூறி விட்டு பெண்களை விவாகரத்து செய்து வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவசர சட்டத்திற்கு கணிசமான இஸ்லாமிய பெண்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்த சட்டத்தில் பெண்களுக்கு மேலும் பிரச்சனைகள் தான் ஏற்படும் என்றும் ஒரு சாரார் கருத்து தெரிவிக்கின்றனர்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முத்தலாக் தொடர்பான வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், முத்தலாக் என்பது சட்டவிரோதம் என்றும் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் தீர்ப்பு வழங்கியிருந்தது. இதையடுத்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் தலைமையில் பிரதமர் ஒரு குழுவை அமைத்து முத்தலாக்கிற்கு எதிராக சட்ட வரைவை தயார் செய்யும் பணியை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications