2014: இந்தியாவிலேயே அதிகம் ரீ டிவிட் ஆன டிவிட் எது தெரியுமா?
டெல்லி: இந்தியாவில் அதிகமாக ரீ டிவிட் ஆனது 'இந்தியா வெற்றி பெற்றுவிட்டது' என்று பிரதமர் நரேந்திரமோடி வெளியிட்ட டிவிட்தானாம்.
2014ம் ஆண்டு நிறைவுபெறப்போகும் நிலையில் டிவிட்டர் தனது தளத்தில் நிகழ்ந்த சுவாரசிய தகவல்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளது. அதில் அதிகம் ரீ டிவிட் ஆனது, டிரெண்ட் ஆனது, அதிக ஃபாலோவர்களை யார் வைத்துள்ளார்கள், அதிகம் விவாதிக்கப்பட்ட விஷயம் எது என்பது உள்ளிட்ட விவரங்கள் அதில் இடம் பெற்றுள்ளது.

மோடி நம்பர்-1
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. அந்த வெற்றி செய்தி வெளியானதும் நரேந்திரமோடி ஒரு டிவிட் வெளியிட்டார். அதில் "இந்தியா வெற்றி பெற்றுவிட்டது" என்று கூறியிருந்தார். இந்த டிவிட்டை 70,500 பேர் ரீ டிவிட் செய்தனர். 46,500 பேர் ஃபேவரைட் செய்தனர். இவ்வாண்டில் இந்தியாவில் அதிகமாக ரீடிவிட் ஆனது இதுதானாம்.

அங்க இவங்க டாப்
உலக அளவில் பார்த்தால் ஆஸ்கார் தொகுப்பாளர் எல்லன் டிஜெனர்ஸ், முன்னணி நடிகர், நடிகைகளுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி படம்தான் அதிக ரீடிவிட் ஆகியுள்ளது. அந்த படத்தில் ஹாலிவுட் பிரபலங்கள் பிராட்லி கூப்பர், மெரில் ஸ்ட்ரீப், ஜெனிபர் லாரன்ஸ், கெவின் ஸ்பேசி, ஏஞ்சலினா ஜூலி மற்றும் பிராட் பிட் ஆகியோர் இருந்தனர். இந்த டிவிட் 3.36 மில்லியன் முறை ரீடிவிட் ஆகியுள்ளது.

ரஜினியை முந்திய ரோகித்
டிரெண்ட்டிங் பொறுத்தளவில் இலங்கைக்கு எதிராக ரோகித் ஷர்மா விளாசிய 264 ரன்கள் அதிகம் விவாதிக்கப்பட்டுள்ளது. டிவிட்டரில் ரஜினிகாந்த் சேர்ந்தது இதற்கு அடுத்தபடியாக வருகிறது.

மின்னல்வேக டாப்பிக்குகள்
மிகவேகமாக டிரெண்ட் செய்யப்பட்ட டாபிக் #WorldCup2014 (பிரேசிலில் நடந்த கால்பந்து உலக கோப்பை). இதற்கு அடுத்தபடியாக, #MH370 (மலேசிய விமானம் மார்ச் 8ல் மாயமானது) மற்றும் #MufflerMan (அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஆதரவாக ஆம் ஆத்மியினர் சமீபத்தில் நடத்திய இணையதள போராட்டம்) ஆகியவை அதிகமாக டிரெண்ட் ஆகியுள்ளன.

அமிதாப் ஜி குரோர்பதி
அதிக ஃபாலோவர்களை வைத்துள்ள இந்திய பிரபலம் ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன். அவருக்கு 11.8 மில்லியன் ஃபாலோவர்கள் உள்ளனர். அவருக்கு அடுத்தபடியாக 10.2 மில்லியன் பேருடன் ஷாருக் 2வது இடத்திலும், 9.8 மில்லியன் பேருடன் அமீர்கான் 3வது இடத்திலும் உள்ளனர். டாப்-10 பட்டியலில் மோடி மட்டுமே சினிமா பிரபலம் கிடையாது. அவர் 8.4 மில்லியன் ஃபாலோவர்களுடன் உள்ளார்.

இதுவும் ஒரு சாதனை
இந்திய அளவில் ஒரே ஆண்டில் அதிக ஃபாலோவர்களை பெற்றதில் மோடிக்கு முதலிடம். இவ்வாண்டு அவர் 4.6 மில்லியன் ஃபாலோவர்களை புதிதாக பெற்றுள்ளார்.


Click it and Unblock the Notifications
