ராஜஸ்தானில் ஆய்வாளர் பெரியபாண்டியன் கொல்லப்பட்ட இடத்தில் இரு துப்பாக்கிகள் கண்டெடுப்பு
ராஜஸ்தானில் ஆய்வாளர் பெரியபாண்டியன் கொலை செய்யப்பட்ட இடத்தில்இரு துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஜோத்பூர் : ராஜஸ்தானில் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் இரண்டு கைத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டு அவை ஆய்வுக்கு அனுப்பப்பட்டு இருப்பதாக போலீஸார் தெரிவித்து உள்ளனர்.
கடந்த மாதம் சென்னையை அடுத்த கொளத்தூரில் உள்ள நகைக்கடை ஒன்றில் 3.5 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த நகைகளை கொள்ளையடித்தவர்கள் ராஜஸ்தானில் பதுங்கி இருப்பதாக தகவல் அறிந்த தனிப்படை போலீஸார் அவர்களை கைது செய்ய அங்கு சென்றனர்.

இதில் இரு தினங்களுக்கு முன்பு கொள்ளையர்கள் இருக்கும் இடத்தை தமிழக தனிப்படை போலீஸார் சுற்றி வளைத்த போது கொள்ளையர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் போலீஸாரின் துப்பாக்கியை எடுத்து கொள்ளையர்கள் சுட்டதில் ஆய்வாளர் பெரிய பாண்டியன் சம்பவ இடத்திலேயே பலியானார். இவரது உடல் பிரதேச பரிசோதனைக்கு பிறகு தமிழகம் கொண்டுவரப்பட்டு அரசு மரியாதையோடு அடக்கம் செய்யப்பட்டது. இன்னொரு ஆய்வாளர் முனிசேகரன் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் சென்னை மேற்கு மண்டல இணை ஆணையர் சந்தோஷ் குமார் உடனடியா ராஜஸ்தான் விரைந்தார். அங்கு அவர் ராஜஸ்தான் மாநில போலீஸாரோடு கொள்ளையர்களை பிடிப்பது குறித்து ஆலோசனை நடத்தி உள்ளார்.
இந்நிலையில், ஆய்வாளர் பெரியபாண்டியன் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதில் தற்போது பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் இருந்து இரண்டு கைத்துப்பாக்கிகளை போலீஸார் கைப்பற்றி உள்ளனர். தற்போது இந்த துப்பாக்கிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. மேலும், இந்த சம்பவத்தில் காயமடைந்த போலீஸார் அனைவரும் விசாரணை முடியும் வரை ராஜஸ்தானிலேயே இருப்பார்கள் என்றும் காவல்துறை தெரிவித்து உள்ளது.












Click it and Unblock the Notifications