மத்திய பொது பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் #Budget2017
பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி மாதம் தொடங்கும் என்றும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லி: மத்திய பொது பட்ஜெட் 2017 பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளன. இதனால் அதற்கு இடையில் பட்ஜெட்டை அறிவிக்க முடியாது என்பதால் மத்திய அரசு முன்கூட்டியே பட்ஜெட்டை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 21ம் தேதி கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் பட்ஜெட்டை முன்கூட்டியே அறிவிப்பதற்கான யோசனைக்கு முதற்கட்ட ஒப்புதல் அளிக்கப் பட்டது. வழக்கமாக பிப்ரவரி மாத இறுதி வேலைநாளில் தாக்கல் செய்யப்பட்டு வந்த பட்ஜெட்டை முன்கூட்டியே அறிவிப்பதன் மூலம், பட்ஜெட் டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை அடுத்த நிதியாண்டு தொடக்கத்திலேயே நடை முறைக்கு கொண்டு வர முடியும்.
ஜனவரி மாதம் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் என்றும் பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்டால் அதன் மீதான விவாதங்களை மார்ச் 24ம் தேதிக்குள் முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நடைமுறையை மாற்றிய பாஜக அரசு
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து மத்திய பட்ஜெட், மாலை வேளையில் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. நாடு சுதந்திரம் அடைந்தபோதும் இந்நிலையே நீடித்தது. இந்நிலையில், கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சிக்கு வந்த பாஜக கூட்டணி அரசு, காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும் முறையை அறிமுகம் செய்தது.
மோடி பிரதமராக உள்ள பாஜக ஆட்சிக்காலத்திலும், பட்ஜெட் தாக்கல் செய்வதில் மேலும் சில திருத்தங்கள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதன்படி, ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட் என தனித்தனியே தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையை மாற்றி, இரண்டையும் ஒரேநாளில் தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டது.
மேலும், பட்ஜெட் அறிக்கையை பிப்ரவரி மாதத்தின் இறுதியில் ஆண்டுதோறும் தாக்கல் செய்யப்படும் நிகழ்வையும் மாற்றி, அதனை பிப்ரவரி மாத தொடக்கத்திலேயே தாக்கல் செய்யும் வழக்கத்தை கொண்டுவரவும் ஆலோசிக்கப்பட்டு வந்தது.
இதன்படி, 2017ம் ஆண்டு முதலாக, ஆண்டுதோறும் பிப்ரவரி 1ம் தேதியே மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என, தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பட்ஜெட் கூட்டத் தொடர் இனி ஜனவரி மாதம் தொடங்கும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.ரயில்வே பட்ஜெட் கிடையாது என்றாலும், பொது பட்ஜெட்டிலேயே ரயில்வே சார்ந்த அறிவிப்புகளுக்கு, முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
500, 1000 ரூபாய் நோட்டுக்களுக்கு தடையால் சில்லறை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது குளிர்கால கூட்டத் தொடரிலும், பட்ஜெட் கூட்டத் தொடரிலும் கடும் சூட்டை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications