ஏழைகள் அரசின் நலத்திட்டங்கள் மூலம் பாதுகாக்கப்படுகின்றனர்! உ.பி துணை முதல்வர் மவுரியா பெருமிதம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சமீபத்தில் அறிவித்த ரூ.52 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை, துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா இன்று தொடங்கி வைத்திருக்கிறார்.
ஊரக வளர்ச்சித் துறை சார்பாக, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் 30 குடும்பங்களுக்கும், நகர்ப்புறங்களில் 20 குடும்பங்களுக்கும் இலவசமாக வீடு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் குடும்பத்தினருக்கு சாவியை ஒப்படைத்த பின்னர் பேசிய மவுரியா, "பிரதமர் மோடியும், முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் ஏழைகளின் துன்பங்களை புரிந்து கொண்டு அவர்களின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர்.

ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஒவ்வொரு நலத்திட்டங்கள் மூலம் பாதுகாக்கப்படுகின்றனர். இவர்களுக்கு இந்த அரசு வீடுகள், கழிப்பறைகள், எரிவாயு மற்றும் மின்சார இணைப்புகள், ஆயுஷ்மான் அட்டை மூலம் ₹5 லட்சம் வரை இலவச சிகிச்சை என பல்வேறு வசதிகளை செய்து கொடுத்திருக்கிறது. இதன் மூலம் உத்தரப் பிரதேச ஏழைகளின் வாழ்க்கை மேம்படும். அவர்கள் மற்றவர்களுடன் மைய நீரோட்டத்தில் இணைவதன் மூலம், மாநிலத்தின் வளர்ச்சி அதிகரிக்கும்.
பெண்களை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றுவதில் மத்திய, மாநில அரசுகள் உறுதியாக இருக்கின்றன. அதேபோல மாநிலம் முழுவதும் கிராமப்புறங்களுக்கு அதிக அளவில் முக்கியத்தவம் கொடுக்கப்பட்டுள்ளது. அம்ரித் சரோவர் யோஜனா திட்டத்தின் மூலம், கிராமங்கள் தோறும் குளங்கள் புதுப்பிக்கப்பட்டு, அழகுபடுத்தப்பட்டு, மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு துளி நீரும் மிகவும் விலைமதிப்பற்றது என்பதை நாங்கள் அறிந்திருப்பதால் இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கிறோம்" என்று கூறியுள்ளார். பிரயாக்ராஜில் உள்ள பரேட் மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications