பலாத்கார வழக்கில் ‘ரகசிய வாக்குமூலம்’ வாங்குவதாக கூறி சிறுமி பலாத்காரம்- நீதிபதி மீது புகார்
அசம்கார்: வேலியே பயிரை மேய்ந்த கதையாக, உத்திரப்பிரதேசத்தில் கடத்திப் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியிடம் ரகசிய வாக்குமூலம் வாங்குகையில், ஜுடீசியல் மாஜிஸ்திரேட்டே பாதிக்கப்பட்ட அச்சிறுமியை மீண்டும் பலாத்காரம் செய்ததாக பரபரப்பு புகார் கூறப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அசம்காரில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு சிறுமி தன்னை சிலர் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக போலீசில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பான வழக்கு அசம்கார் கூடுதல் தலைமை ஜுடீசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாஜிஸ்திரேட்டு அந்த சிறுமியிடம் ரகசிய வாக்குமூலம் பெறுவதற்கும், அதனை கேமராவில் பதிவு செய்யவும் முடிவு செய்தார்.
இதனைத் தொடர்ந்து அந்த சிறுமியும் அவருக்கு துணையாக அந்த பெண்ணின் சகோதரரும், ஒரு பெண் போலீஸ்காரரும் மாஜிஸ்திரேட்டு சேம்பருக்கு வந்தனர். மாஜிஸ்திரேட்டு சிறுமியின் சகோதரரையும், பெண் போலீசையும் சேம்பரை விட்டு வெளியே இருக்குமாறுக் கூறிவிட்டு, சிறுமியை மட்டும் தனிமையில் அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர், அச்சிறுமியை அவர் பலாத்காரம் செய்ததாகவும், அதை வெளியே கூறினால் சிறைக்கு அனுப்பி விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக அச்சிறுமி போலீசில் புகார் செய்தார்.
இந்நிலையில், இப்பிரச்சினையை தற்போது அசம்கார் வழக்கறிஞர்கள் சங்கம் கையில் எடுத்துள்ளது. வக்கீல் சங்கம் சிறுமியின் புகாருடன் மாவட்ட நீதிபதிக்கு, சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டு மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து அசம்கார் வழக்கறிஞர் சங்க தலைவர் விஜய் பகதூர் கூறும்போது, ‘‘அந்த புகாரின் அடிப்படையில் மாஜிஸ்திரேட்டு மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்காக புகாரின் நகலை மாவட்ட நீதிபதி ஐகோர்ட்டுக்கு அனுப்பியுள்ளார். என்ன நடந்தாலும் இந்த பாதக செயலை செய்த மாஜிஸ்திரேட்டு மீதும், அவர் மீது வழக்கு பதிவு செய்ய மறுத்த போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்காமல் நாங்கள் ஓயமாட்டோம்'' எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications