வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மாநில உரிமைகளையும் பறிக்கிறது- ராஜ்யசபாவில் வைகோ ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா, ஜனநாயகத்தின் ஆணிவேர் மீதான தாக்குதல்; வக்பு வாரியங்கள் மீதான மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் செயல் என்று ராஜ்யசபாவில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி கடுமையாக எதிர்த்தார்.

ராஜ்யசபாவில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மீது வைகோ பேசியதாவது:

இந்திய கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான, ஜனநாயக விரோத, மதச்சார்பற்ற இந்த அருவெறுக்கத் தக்க மசோதாவை நாங்கள் எதிர்க்கிறோம். இந்த மசோதா திரும்பப் பெற வேண்டும் என்பதே இந்தியா முழுமைக்கும் உள்ள மக்களின் கருத்தாக உள்ளது.

இஸ்லாமியருக்கு அச்சுறுத்தல்

இந்தியா முழுவதும் உள்ள முஸ்லிம் சமூகம் அச்சத்தில் உறைந்து போய்யுள்ளனர். இந்த ஆட்சியில் ஏற்கனவே பல நிகழ்வுகள் அவர்களுக்கு எதிராக நடந்து இருப்பதால் அவர்கள் மன அழுத்தத்தில் உள்ளனர். தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக உணருகின்றனர்.

அடுத்தடுத்த படுகொலைகள்

மதச்சார்பின்மையின் நாயகனாக விளங்கிய நரேந்திர தபோல்கர் இந்துத்துவ சக்திகளால் கொல்லப்பட்டது உண்மையல்லவா? பேராசிரியர் எம்.எம். கல்புர்கி அதே சக்திகளால் படுகொலை செய்யப்பட்டது உண்மையல்லவா?

மற்றொரு சிந்தனையாளர் கோவிந்த் பன்சாரே படுகொலை செய்யப்பட்டார் என்பது உண்மையல்லவா? பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் பெங்களூரில் கொல்லப்பட்டது உண்மையல்லவா?

ஜனநாயகத்தின் வேரின் மீதான தாக்குதல்

வக்ஃப் (திருத்த) மசோதா 2025, கடுமையான எதிர்ப்பு மற்றும் போராட்டங்களுக்கு இடையில் நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா, இந்தியாவில் உள்ள வக்ஃப் நிர்வாகம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளில் பெரிய மாற்றத்தையும், வக்ஃப் சட்டம் 1995 இல் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த வழி வகுக்கின்றது. இது ஜனநாயகத்தின் வேரையே தாக்குதலுக்கு உள்ளாக்குகின்ற காரணத்தாலும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாகவும், சிறுபான்மையினருக்கு எதிராக பாகுபாடுகளை ஏற்படுத்தும் வகையிலும் இருப்பதால் எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்க்கின்றன.

மாநில அரசுகளிடம் இருந்து பறிக்கும் சதி

வக்ஃப் (திருத்த) மசோதா 2025, முஸ்லிம் மக்களுக்கு என்பது எல்லோரும் அறிந்த உண்மை. வக்ஃப் நிர்வாகத்தை மாநில அரசுகளிடமிருந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது மறைமுக திட்டமாகும். அது ஒவ்வொரு மாநில அரசுக்கும் எரிச்சலையூட்டும் செயலாகும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இது எல்லோரது கவனத்தையும் ஈர்க்கமால் விட்டுவிட்டது. இதுவரை வக்ஃப்கள் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை மாநில அரசுகளால் கண்காணிக்கப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

எந்தெந்த சரத்துகள் பறிபோகும்?

ஆனால் இப்போது முன்மொழியப்பட்ட திருத்தங்களின்படி, விதிகளை உருவாக்குதல், பதிவுகள் மற்றும் தரவுகளை நிர்வகித்தல் மற்றும் பதிவு செய்தல், அறிக்கைகளை வழங்குதல், சாதாரண படிவங்களை பரிந்துரைத்தல் போன்றவற்றை ஒன்றிய அரசு வழங்கும். இது மாநில அரசுகளை வக்ஃபிலிருந்து முற்றிலுமாக விலக்கும் செயலாகும்.

நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் வாய்ப்பு மறுப்பு

இந்த வக்ஃப் திருத்த மசோதா விரிவான விவாதங்களுக்காக நாடாளுமன்றத்தின் கூட்டுக் குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டது. அங்கும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க அனுமதிக்கப்படவில்லை. கூட்டுக்குழு முன் ஆஜரான சாட்சிகளிடம் வினாக்களைத் தொடுப்பதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டுக் குழு உறுப்பினர்கள் நடத்தப்பட்ட விதம் மற்றும் அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்ட விதம் மிகவும் மோசமானது. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்ள் இல்லாத நிலையில் வக்ஃப் திருத்த மசோதா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

1913 முதல் வக்புகள்

இந்தியாவில் உள்ள வக்ஃப்கள், 1913 முதல் இந்தியாவில் சட்டப்பூர்வமாக நிர்வகிக்கப் படுகின்றன. முஸ்லிம் வக்ஃப் சட்டம் 1913 இல் பிரிட்டிஷ் காலத்தில் இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் 1923 ஆம் ஆண்டு முசல்மான் வக்ஃப் சட்டத்தால் மாற்றப்பட்டது. பின்னர், இந்தியா விடுதலை பெற்ற பிறகு வக்ஃப் சட்டத்தில் பல்வேறு விதிகளை இணைத்து, சட்டம் வலுப்படுத்தப்பட்டது.

சிறுபான்மையினர் உரிமை பறிப்பு

இந்த மசோதா மூலம் தற்போதைய சட்டத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்து சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பறிக்க முயல்கிறீர்கள். வக்ஃப் சொத்தாகக் கருதப்படும் அரசு நிலத்தின் உரிமை குறித்து தகராறு இருப்பின், வக்ஃப் தீர்ப்பாயம் முடிவு செய்யும் என்று முந்தைய சட்டத்தில் உள்ளது. ஆனால் தற்போதைய மசோதாவில், மாநில அரசு அறிவிக்கையின் மூலம், கலெக்டர் பதவிக்கு மேலான தகுதியுடைய அதிகாரியை நியமித்து, அவர் அந்த சொத்து வக்ஃப்க்கு உரியதா? அல்லது அரசு நிலமா? என்பதை முடிவு செய்வார். அவர் எடுக்கும் முடிவே இறுதியானது.

வக்பு சொத்துகள் முடக்கம்

முதன்மைச் சட்டமான வக்ஃப் சட்டம் - 1995 இன்படி, வக்ஃப்பின் வாய்மொழி அங்கீகாரம் (அனுபவ பாத்தியதை) ஒரு சொத்தை வக்ஃப் ஆகக் கருத அனுமதிக்கப்படுகிறது. தற்போதைய மசோதாவில், இந்த விதி அகற்றப்படுகிறது. மேலும் மூல ஆவணங்கன், உரிய ஆவணங்கள் இல்லாத சொத்துக்கள் ஐயத்தித்திற்கு உரியதாகவோ அல்லது சர்ச்சைக்கு உரியதாகவோ கருதப்படும். மேலும் அச்சொத்து மாவட்ட ஆட்சியர் இறுதி முடிவு எடுக்கும் வரை முடக்கப்பட்டதாக இருக்கும்.

மத ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் முயற்சி

வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் அல்லாத உறுப்பினர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த மசோதா மாநில வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாத தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் குறைந்தது இரண்டு முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களை நியமிக்க வழிவகை செய்கிறது. இது மத அமைப்புகளின் ஒருமைப்பாட்டை சீர்குலைத்து விடும். மேலும் முஸ்லிம் அல்லாத உறுப்பினர்கள் இஸ்லாத்தின் கலாச்சார மற்றும் மத நடைமுறைகள் பற்றிய விரிவான புரிதலைக் கொண்டிருக்க மாட்டார்கள். இது முஸ்லிம் சமூகத்தின் மத உரிமைகளைப் பறிப்பதாகும்.

மத சுந்திரம் மீறல்

அரசியலமைப்பின் 25 ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள மத சுதந்திரத்தையும், முஸ்லிம் சமூகம் தங்கள் சொந்த மத விவகாரங்களை நிர்வகிக்கும் சுயாட்சியையும் இந்த மசோதா மீறுகிறது.

வக்ஃப் சொத்துக்கள் மீது முடிவு செய்ய வக்ஃப் தீர்ப்பாயம் சரியான மன்றமாக இருக்க முடியும். ஆனால் இந்த மசோதா அரசாங்கத்திற்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குகிறது. அதுமட்டுமல்லாமல், மாவட்ட ஆட்சியர் அல்லது மாநில அரசால் நியமிக்கப்படும் அதிகாரிகளின் அதிகாரத் தலையீடும் இருக்கும். மாவட்ட ஆட்சியர் அல்லது நியமிக்கப்படும் அதிகாரியை ஈடுபடுத்துவதன் மூலம், அது அதிகார மட்டத்தில் ஏற்படும் தாமதங்களுக்கும், மேல் முறையீடுகளுக்கு நீதித்துறையை அணுகவேண்டிய நிலையும் ஏற்படும்.

எனவே, வக்ஃப் திருத்த மசோதா 2025 என்பது அரசியலமைப்பு உரிமைகள் மற்றும் சமூக நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட வக்ஃப் சொத்துக்களின் புனிதத்தன்மையின் மீதான நேரடித் தாக்குதலாகும். இந்த அத்துமீறல் தடுக்கப்படாவிட்டால், அது ஆபத்தான முன்னுதாரணம் ஆகிவிடும். இந்தியா முழுவதும் உள்ள மத மற்றும் கலாச்சார சமூக சொத்து உரிமைகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.

அடிப்படை உரிமை பறிப்பு

இது வக்ஃப் பற்றியது மட்டுமல்ல, மத அறக்கட்டளைகளைப் பாதுகாப்பதற்கும், அரசியலமைப்பு உத்தரவாதங்களைப் பாதுகாப்பதற்கும், சமூக அறக்கட்டளைகளில் அரசு அத்துமீறலை எதிர்ப்பதற்கும் உள்ள அடிப்படை உரிமையைப் பற்றியது. எனவே, இந்த மசோதாவை கடுமையாக எதிர்க்கிறேன். இவ்வாறு வைகோ பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+