• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Exclusive: வாஜ்பாய் ஒரு ஞானக்குழந்தை.. சிலாகிக்கும் வைரமுத்து!

|

- ராஜாளி

தமிழை நேசித்த ஒரு இந்தி கவிஞர் வாஜ்பாய். அவர் தமிழை மட்டுமல்ல தமிழ் கவிஞரான வைரமுத்துவிடமும் நெருக்கம் காட்டியவர். வாஜ்பாயின் கவிதைகள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டபோது அதன் முதல் பிரதியை பெற்றவர் வைரமுத்து. வாஜ்பாய் மறைந்த இந்நேரத்தில் ஒன் இந்தியா தமிழுக்கு வைரமுத்து அளித்த சிறப்பு பேட்டி.,

வாஜ்பாய் ஒரு பிரதமராக ஒரு கவிஞராக எப்படி மிளிர்ந்தார்?

மிக நல்ல கேள்வி, அவர் வாழ்க்கையை நீங்கள் இரண்டாக வகுக்கின்றீர்கள். ஒன்று ஆட்சியாளனாக மற்றொன்று இலக்கியவாதியாக. ஆட்சியாளாராக வாஜ்பாய் அமர்ந்தவுடன் அரசியல்வாதி என்ற முகத்தை கழட்டி வைத்து விட்டு தேசியவாதி என்ற முகத்தை அணிந்து கொண்டார் என்றே எனக்கு சொல்லத் தோன்றுகிறது. அவருக்கென இருந்த அந்த நீண்ட கனவில் ஏழைகளும், விவசாயிகளும் முன்னிறுத்தப்பட்டார்கள். அவரது செயல்பாடுகளும், தொலைநோக்குத் திட்டங்களும் இந்தியாவை முன்னெடுத்துச் செல்வதில் அவர் முன்னோடியாக இருந்தவர்களுள் ஒருவராக திகழ்ந்தார்.

Vairamuthu on Vajpayee

நீங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்கள் முன்னுரிமை என்ன என்ற கேள்விக்கு, இரண்டாவது பசுமை புரட்சி மூலம் விவசாயத்தை மேம்படுத்துவது என்று பதிலளித்தார். தங்க நாற்கர சாலைகளால் இந்தியா இணைக்கப்பட்டது. பெரும் குற்றங்கள் எதுவும் அவர் ஆட்சி மீது கூறப்படவில்லை. அவர் ஒரு ஆனந்த துறவியாக வாழ்ந்தார். அவரது போக்ரான் அணுகுண்டு வெடிப்பை, இந்தியாவையும் அமெரிக்காவையும் திருப்பி பார்க்கவைத்த சத்தம் என்று அதை புகழ்ந்து நான் எழுதியிருந்தேன்.

கவிதை எங்களது குடும்ப சொத்து என்று காதலோடு குறிப்பிடுவார் வாஜ்பாய். அவரது தாத்தா ஒரு பண்டிதர், தந்தை ஒரு கவிஞர். கவிதைகளை கேட்டு கேட்டு வளர்ந்ததால் நானும் ஒரு கவிதைச் சிங்கமாக வளர்ந்தேன் என்று அவர் எழுதியிருந்தார். அவருடைய கவிதைகளில் ஆர்ப்பாட்டம் இல்லை ஒப்பனைகள் இல்லை ஆனால் உண்மையின் ஒளி இருந்தது, இதயத்தின் வலி இருந்தது. சமூகத்தின் தாகம் இருந்தது, ஏழைகளுக்கான சோகம் இருந்தது. அவருடைய கவிதைகள் வெளியீட்டு விழாவில் நானும் கலந்து கொண்டேன். அந்த விழாவில் பிரதமர், VIT விஸ்வநாதன், பாதுகாப்பு துறை அதிகாரி K.C பந்த் ஆகியோருடன் நானும் மேடையில் இருந்தேன். ஊடகத்தார் மட்டும் கலந்து கொண்ட அந்த விழாவில் இந்திய நாட்டின் உயரிய பிரதமர் பதவியில் இருந்த அவர் என்ன கவி சாம்ராட் என்று அழைத்தார்.

அவரது மோதிவிட்டேன் மரணத்தோடு என்ற கவிதை இப்போது மிகவும் பொருத்தமாக இருக்கிறது.

மோதிவிட்டேன் மரணத்தோடு
அதோடு மோத எனக்கு
எந்த எண்ணமும் இல்லை
தெருமுனையில் எதிர்கொள்வோம்
என்ற உடன்படும் இல்லை
தெருவை மறைத்துக் கொண்டு
அது வந்து நின்றது வாழ்க்கையை
விட பெரிதாக வியாபித்திருந்தது
"மரணத்தின் வயது என்ன?
இரண்டு கணம் கூட இல்லை.
வாழ்க்கையின் தொடர்ச்சிகள்
இன்று நேற்று வந்தவை அல்ல.

வேண்டிய அளவு வாழ்ந்தாயிற்று.
மனதைத் தொலைத்து விட்டு

என்று எழுதியிருக்கிறார். வேண்டிய அளவு வாழ்ந்தாயிற்று, மனதைத் தொலைத்து விட்டு என்ற வரி மிக மிக முக்கியமான வரி. மனிதன் சமூகத்தோடு வாழ்கிறான், பொருள்களோடு வாழ்கிறான், இப்படி பௌதீகத்தொடு வாழ்ந்த மனிதன் மனத்தோடு வாழ்ந்த கேள்வி மரணத்தில்தான் வருகிறது. இந்த கேள்வி இப்போது அனைவரும் கேட்கலாம் மனிதன் மனதோடு வாழ்ந்த கணங்கள் எவ்வளவு, உடலோடு வாழ்ந்த கணங்கள் எவ்வளவு என்ற கணக்குப் போட்டுப் பார்த்தால் பலருக்கு விரோதமான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு மரணத்தை சேர்ந்தவர்கள்தான் அதிகம் என்ற ஒரு தத்துவத்தை அழகாக உதிர்த்துவிட்டு போயிருக்கிறார். வாஜ்பாயின் மரணமும் செய்திதான் மரணம் பற்றிய கவிதையும் ஒரு செய்திதான்.

தமிழையும், உங்களையும் வாஜ்பாய்க்கு எவ்வளவு பிடிக்கும்?

என்னைப் பிடிக்கும் என்பதை விட தமிழை அவருக்கு மிகவும் பிடிக்கும். இந்தியில் மொழி பெயர்க்கப்பட்ட என்னுடைய கவிதைகளை அவருக்கு கொடுத்தபோது பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து அயோத்தி ராமன் அழுகிறான் என்ற கவிதை எழுதியிருந்தேன். அது அவரது நம்பிக்கைகளுக்கு மாறான, பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு எதிரான அந்தக் கவிதையை அவர் வாய்விட்டு வாசித்தார். ஒரு வரியிலிருந்து அடுத்த வரிக்கு தாவுவதற்கு சில நிமிடங்கள் எடுத்துக் கொண்டார். சில வரிகளை சிலாகித்து பாராட்டினார். அப்போது ஒரு ரசிகனை பார்த்த நான் தமிழைப் பற்றி உரையாடுகிறபோது திருவள்ளுவர் மீதும், பாரதி மீதும் அவருக்கு ஆழ்ந்த ஈடுபாடு இருந்ததை கவனித்தேன். தமிழ் மொழியை இலக்கியங்கள் வாயிலாக அளவிடக் கூடிய நற்பண்பு அவருக்கு வைத்திருந்தது.

அவரை இந்தி வெறியர் என்கிறார்கள். என்னையோ கருனாநிதியையோ தமிழ் வெறியர்கள் என்று சொன்னால் நாங்கள் கவலைப்பட போவதில்லை. தாய்மொழி மீது ஒருவர் பற்று கொண்டிருப்பதை வெறி என்று மற்றவர்கள் புரிந்து கொண்டால் நாம் அதற்க்கு பொறுப்பாக முடியாது. ஒரு மொழியை இன்னொரு மொழியின் மீது திணிப்பதுதான் அநியாயம். இந்தி அவருக்குப் பிடிக்கும் தமிழ் மீது அவருக்கு தனி மரியாதை இருந்தது. திருவள்ளுவரையும் பாரதியையும் நான் மதிக்கிறேன் என்று அவர் பதிவு செய்திருக்கிறார்.

அயோத்தி ராமன் அழுகிறான் என்ற கவிதையை வாசித்தப் பிறகு அவரது செயல்பாடுகள் எப்படி இருந்தது?

அதை நான் துல்லியமாக துப்பறியவில்லை. இலக்கிய அளவில் அவருக்கு உடன்பாடாகத்தான் இருந்தது. இல்லையெனில் என்னை அவர் கேள்வி கேட்டிருப்பார். நான் தண்டிக்கப்படும் தூரத்தில்தான் இருந்தேன் (சிரிக்கிறார்). வாஜ்பாய் அவர்களுக்கு மதவாதம் என்பதில் ஒரு கருத்து இருந்தபோதிலும் மத வெறி பிடித்தவர் அல்ல. இந்து மதத்திற்கு ஆதரவனவரே ஒழிய சிறுபான்மையினர் தாழ்வானவர்கள் என்ற கருத்து உடையவர் அல்ல.

கவிப்பேரரசசாக வாஜ்பாயைப் பற்றி என்னக் கூறுவீர்கள்?

அவர் ஒரு ஞானமுற்ற குழந்தை, வயது முதியவராக்கியது மனது குழந்தையாகவே வைத்திருந்தது. இந்நாட்டின் பிரதமர் என்ற கிரீடத்தை அவர் தலைக்கு உயர்த்திக் கொண்டவர் அல்லர். எல்லோரிடமும் எளிமையாகப் பழகியவர். ஒரு சராசரி குடும்பத்தில் வந்தவர். அவரது வாழ்வில் மறக்க முடியாது அந்த நாற்சந்தியில் இருந்த தேநீர் கடை என்று எழுதியிருக்கிறார். தேநீர்க்கடை நினைவுகளை ஒருவன் பகிர்ந்து கொள்கிறான் என்றாலே அவன் மக்களோடு இருக்க விரும்புகிறவன் என்று அர்த்தம். எனக்கும் அந்த உணர்வு உண்டு வடுகப்பட்டிக்கு போய் டீ கடையில் அமர்ந்து கொண்டு பழைய பத்திரிக்கைகள் வாங்கி கொண்டு எல்லோருடனும் பேசிக்கொண்டு மனதை மெல்ல தாலாட்டிக் கொள்ள முடியுமா என்ற எண்ணம் சோர்வு தட்டுகிறபோது தோன்றுகிறது. அந்தக் கவிதை உணர்வுதான் அவரிடமும் இருந்தது. இந்தக் கவிதை உணர்வு உள்ளவன் தன்னை பெரிதாக எப்போதும் கருதிக் கொள்ள மாட்டான். மிக உயர்ந்த இடத்தில் இருந்து பள்ளத்தில் வாழ்கிறோம் என்ற எண்ணத்தில் வாழ்ந்த மிக உயர்ந்த மனிதன் வாஜ்பாய் என்று கூறினார் வைரமுத்து

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Poet Vairamuthu has shared his comments on late Vajpayee in an exclusive interview with Oneindia Tamil.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more