காய்கறிக்காரர் கெட்டப்பில் வந்த "பாக் ஸ்பை".. பொக்ரான் ராணுவ தளத்தில் உளவு.. வளைத்து பிடித்த போலீஸ்
பொக்ரான்: ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் உள்ள இந்திய ராணுவ தளத்தில் உளவு பார்த்துக் கொண்டு இருந்த நபர் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து பல்வேறு பாதுகாப்பு ரகசியங்கள் அடங்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
ராஜஸ்தானின் பொக்ரான் பகுதியில் உள்ள இந்திய ராணுவ மையம் மிக முக்கியமான ராணுவ தளங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானுக்கு அருகில் இருப்பதாலும், எல்லை ரீதியாக இந்தியாவிற்கு கூடுதல் பலம் அளிக்க கூடியது என்பதாலும் பொக்ரான் ராணுவ தளம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
இங்கு எப்போதும் கூடுதல் பாதுகாப்பு, அதீத ரோந்து பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்த நிலையில்தான் கடந்த செவ்வாய்க்கிழமை பொக்ரானில் பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தள்ளுவண்டி
தள்ளுவண்டியில் காய்கறி விற்கும் கெட்டப்பில் இவர் பொக்ரான் ராணுவ தளம் அருகே கடந்த சில வருடங்களாக சுற்றி வந்து இருக்கிறார். ராணுவ தளத்திற்கு உள்ளே காய்கறி விற்கும் ஒப்பந்தத்தை பெற்று, அதிகாரிகளின் குடும்பங்களுக்கு நேரடியாக காய்கறி விற்று இருக்கிறார். இந்த நிலையில் இவர் உளவாளியாக இருக்கலாம் என்று டெல்லி போலீஸ் கிரைம் பிரிவிற்கு தகவல் சென்றுள்ளது.

கைது
இதையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை அந்த காய்கறிக்காரர் கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து இந்திய ராணுவத்தின் பல ரகசிய தகவல்கள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. 34 வயது கொண்ட இவரின் பெயர் ஹபீப் கான். இவர் ராஜஸ்தானின் பிக்கேந்தர் மாவட்டத்தை சேர்ந்தவர்.

ராணுவ அதிகாரி
ராணுவ அதிகாரி ஒருவரிடம் நட்பாகி அவர் மூலம் முக்கிய ராணுவ ஆவணங்களை பெற்று பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பிடம் இவர் கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்து இருக்கிறார். கடந்த சில நாட்களாக இதுபோல பல ஆவணங்களை ஐஎஸ்ஐ அமைப்பிற்கு இவர் கொடுத்துள்ளார். இவர் என்ன மாதிரியான தகவல்களை கசியவிட்டார் என்று விவரம் வெளியாகவில்லை.

உளவு தகவல்
இவருக்கு ஆவணங்களை கொடுத்தது யார் என்றும் விவரம் வெளியாகவில்லை. ஆனால் ராணுவ வீரர் ஒருவர்தான் பணம் வாங்கிக்கொண்டு இவரிடம் ஆவணங்களை கசியவிட்டுள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காய்கறிக்காரர் கெட்டப்பில் உளவு பார்த்த அந்த நபரை டெல்லி போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications