ராஜ்யசபாவில் வக்பு மசோதாவை எதிர்த்து ஓட்டுப் போட்ட அதிமுக.. பாஜகவுக்கு வலிக்காமல் பேசிய தம்பிதுரை!
டெல்லி: நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு தாக்கல் செய்த சர்ச்சைக்குரிய வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக அதிமுகவின் 4 எம்பிக்களும் வாக்களித்தனர். ஆனால் வாக்கெடுப்புக்கு முன்னதாக பேசிய அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை, வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மீதான அதிமுகவின் நிலைப்பாடு பற்றி எதுவுமே பேசாதது தற்போது விவாதத்துக்குரியதாகி இருக்கிறது.
மத்திய அரசின் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திமுகவைப் போலவே அதிமுகவும் கடுமையாக எதிர்த்து வருகிறது. பாஜகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையிலும் தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு அளித்தது.

லோக்சபாவில் நிறைவேறிய வக்பு மசோதா
இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நேற்று அதிகாலை நிறைவேற்றப்பட்டது. லோக்சபாவில் திமுக கூட்டணியின் 39 எம்பிக்களும் ஒருசேர வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர். லோக்சபாவில் வக்பு வாரிய மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும் எதிராக 232 வாக்குகளும் பதிவாகின. பெரும்பான்மை ஆதரவுடன் லோக்சபாவில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேறியது.
ராஜ்யசபாவில் வக்பு மசோதா
இதனைத் தொடர்ந்து ராஜ்யசபாவில் நேற்று பகலில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது விடிய விடிய விவாதம் நடைபெற்றது. இந்த விவாதங்களின் முடிவில் வாக்கெடுப்பு நடைபெற்றது.
ராஜ்யசபாவில் அதிமுக எதிர்ப்பு- தமாகா ஆதரவு- பாமக புறக்கணிப்பு
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மீதான ராஜ்யசபாவில் நடந்த வாக்கெடுப்பில் அதிமுகவின் 4 எம்பிக்களும் எதிர்த்து வாக்களித்தனர். பாஜக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஜிகே வாசன் எம்பி ஆதரவாக வாக்களித்தார். பாட்டாளி மக்களின் கட்சியின் தலைவரான அன்புமணி ராமதாஸ், இந்த வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தார். ராஜ்யசபாவில் வக்பு வாரிய மசோதாவுக்கு ஆதரவாக 128 வாக்குகளும் எதிராக 95 வாக்குகளும் பதிவாகின. ராஜ்யசபாவில் இன்று அதிகாலை நடைபெற்ற இந்த வாக்கெடுப்பிலும் ஆதரவுகளைப் பெற்று வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேறியது. நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் நிறைவேறிய வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்த பின்னர் சட்டமாகும்.
தம்பிதுரை பேசியதுதான் என்ன?
முன்னதாக ராஜ்யசபாவில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதவின் மீது அதிமுக எம்பி தம்பிதுரை பேசினார். அப்போது, சிறுபான்மை மக்களினது நலனில் அண்ணா திமுக எப்போதும் அக்கறை கொண்டிருக்கிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சிறுபான்மையினருக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கி இருக்கின்றனர். தமிழ்நாடு, புதுச்சேரியில் இஸ்லாமிய மக்கள் பெரும் எண்ணிக்கையில் வசிக்கின்றனர். ஆகையால் தற்போதைய மத்திய அரசு, அதிமுகவின் கோரிக்கைகளை கவனமுடன் பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.
பாஜக கோபப்படுமே...
அதாவது வக்பு வாரிய மசோதாவின் அம்சங்கள் மீதான அதிமுகவின் எந்த கருத்தையுமே தம்பிதுரை தெரிவிக்காமல், பொத்தாம் பொதுவாகவே பேசியதுதான் தற்போது விவாதப் பொருளாகி இருக்கிறது. தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களித்தாலும் சபையில் பேசும் போது பாஜக கோபப்படாமலேயே பார்த்துக் கொண்டது அதிமுக என்பதுதான் தம்பிதுரையின் பேச்சு வெளிப்படுத்துகிறது என்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள்.












Click it and Unblock the Notifications