பயங்கரவாதத்தை ஒருங்கிணைந்து முறியடிப்போம்... தெரசா மே, மோடி கூட்டாக அறிவிப்பு
பயங்கரவாதத்தை ஒருங்கிணைந்து எதிர்த்து முறியடிப்போம் என்று பிரிட்டன் பிரதமர் தெரசா மேவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கூட்டாக அறிவித்துள்ளனர்.
டெல்லி: ஐ.நா. பாதுகாப்பு குழுவில் இந்தியா நிரந்தர இடம் பெற பிரிட்டன் ஆதரவு தெரிவித்துள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இதனை தெரிவித்தார்.
பிரிட்டன் பிரதமர் தெரசா மே, 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் தங்கியுள்ள அவரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பாரம்பரிய வரவேற்பளித்தார். முதல் நிகழ்ச்சியாக, இன்று காலை டெல்லியில் இந்தியா-இங்கிலாந்து தொழில்நுட்ப மாநாட்டை தெரசா மே தொடங்கி தொடங்கி வைத்து பேசினார்.

இதனைத் தொடர்ந்து பிற்பகலில் பிரதமர் மோடியுடன் பிரிட்டன் பிரதமர் தெரசா மே, பேச்சுவார்த்தை நடத்தினார். நாட்டின் பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்தும் இரு நாட்டு உறவுகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இரு தரப்பு பேச்சு வார்த்தைக்குப் பின்னர் டெல்லியில் பிரதமர் மோடியும், இங்கிலாந்து பிரதமர் தெரசா மேயும் டெல்லியில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய மோடி, ஐ.நா. பாதுகாப்பு குழுவில் இந்தியா நிரந்தரம் இடம் பெற பிரிட்டன் ஆதரவு தெரிவித்துள்ளது என்றார். அணு சக்தி நாடுகள் குழுவில் இடம்பிடிக்கவும் பிரிட்டன் ஆதரவு தெரிவித்துள்ளது என்றும் கூறிய மோடி, இந்தியா - இங்கிலாந்து வர்த்தக ஒத்துழைப்பு குறித்து பேசியுள்ளதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய தெரசா மே, ஐ.நா பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா இடம்பெறுவதை ஆதரிப்பதாக கூறினார். இந்தியாவில் 12000 கோடி டாலர் முதலீடு செய்யப்படும் எனவும், பிரதமர் மோடியுடன் நடத்திய பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.
இணையதளக் குற்றங்களை இணைந்து சமாளிப்பது குறித்து பேசியுள்ளோம் என்று கூறிய தெரசா மே, இரண்டு வர்த்தக ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளதாக கூறினார்.
இந்திய முதலீடுகளால் இங்கிலாந்து பொருளாதாரம் மேம்படும் என்று கூறிய தெரசா மே, இங்கிலாந்தில் கல்வி கற்க இந்திய மாணவர்களை வரவேற்கிறோம் என்று அழைப்பு விடுத்தார். பயங்கரவாதத்தை முறியடிப்பது குறித்து ஆலோசித்தோம் என்று கூறிய தெரசா மே, வர்த்தக தடைகளை உடைக்க இருநாடுகளும் முயற்சி செய்யும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications