லீக்கான பிரசாந்த் கிஷோர் ஆடியோ.. செம ஹேப்பியில் பாஜக.. ஷாக்கான மம்தா.. மேற்கு வங்க அரசியல் டுவிஸ்ட்
கொல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களிடம் செல்வாக்கு இருப்பதாகவும், பாஜகவின் தேர்தல் களப்பணி அருமையாக இருப்பதாகவும், ஐபேக் நிறுவன தலைவர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ள ஆடியோ லீக்காகி மேற்கு வங்க சட்டசபை தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூகம் வகுப்பு பணிகளை செய்து வருகிறது.
கடந்த லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் 18 தொகுதிகளை பாஜக வென்று விஸ்வரூபம் எடுத்தது. இந்த நிலையில்தான் அங்கு 8 கட்டங்களாக தற்போது சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு இன்று 4-வது கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.

லீக் வீடியோ
இந்த சட்டசபை தேர்தலில் பாஜக சிங்கிள் டிஜிட் இடங்களை மட்டும் தான் வெற்றி பெற முடியும் என்று ஏற்கனவே பிரசாந்த் கிஷோர் ட்விட்டர் பதிவு வெளியிட்டு பாஜகவுக்கு நேரடி சவால் விடுத்திருந்தார். ஆனால் இப்போது பாஜக வெற்றி வாய்ப்பை சிறப்பாக இருப்பதாக பிரசாந்த் கிஷோர் தனக்கு நெருக்கமான பத்திரிகையாளர்களுடன் உரையாடிய ஒரு ஆடியோ ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது . பாஜகவின் சமூக வலைதள பிரிவு தலைவர் அமீத் மால்வியா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த ஆடியோவை வெளியிட்டு உள்ளார்.

கூட்டம் அதிகம்
அந்த ஆடியோவில், பிரசாந்த் கிஷோர் பேசுவதாக உள்ளது இதுதான்- பாஜக தொண்டர்கள் தேர்தல் களத்தில் தீவிரமாக வேலை பார்த்து வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடியின் பொதுக்கூட்டங்களுக்கு பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள்.

தலித், இந்தி பேசும் மக்கள்
நரேந்திர மோடி என்ற பெயருக்காக ஓட்டுப் போடுகிறார்கள், இந்து என்பதற்காக ஓட்டுப் போடுகிறார்கள், இதேபோல இந்தி பேசும் மக்களும் பாஜகவுக்கு ஓட்டுப் போடுகிறார்கள். மேற்கு வங்க மாநிலத்தில் 27% தலித் மக்கள் இருக்கிறார்கள். 1 கோடி இந்தி பேசும் மக்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் பாஜகவுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். நாங்கள் ஒரு சர்வே செய்தபோது பாஜக ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இருப்பதாக அதில் டேட்டா கிடைத்துள்ளது . இவ்வாறு பிரசாந்த் கிஷோர் பேசுவது போல அந்த ஆடியோ இருக்கிறது.

கடவுள் பிம்பம்
அது மட்டும் கிடையாது. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பு அலை மேற்குவங்கத்தில் இல்லை என்றும், 10 முதல் 15 சதவீதம் அல்லது 20 முதல் 25 சதவீதம் மக்கள் மோடியிடம் கடவுள் சக்தி இருப்பதாக நம்புகிறார்கள். அது, சரியா, தவறா என்பது வேறு விவாதம். ஆனால் இப்படி ஒரு பிம்பம் மக்கள் மத்தியில் அவருக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் இந்தி பேசும் மக்கள் இந்த நம்பிக்கையில் தீவிரமாக இருக்கிறார்கள். மோடி மற்றும் மமதா பானர்ஜி இருவருக்கும் மக்கள் மத்தியில் ஒரே மாதிரி செல்வாக்கு மேற்கு வங்க மாநிலத்தில் இருப்பது பெரிய விஷயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நேரத்தில் லீக்
பிரசாந்த் கிஷோரின் இந்த பேச்சின் மூலமாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார் என்று பாஜக பிரச்சாரத்தை முன்னெடுக்க தொடங்கியுள்ளது. இன்று நான்காவது கட்ட சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில், இந்த உரையாடல் லீக் செய்யப்பட்டுள்ளதால், அது தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

முழுமையாக வெளியிடுங்கள்
இந்த நிலையில்தான் பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதில் அளித்துள்ளார். அதில் அவர் பாஜகவினர் அவர்களது தலைவர்கள் பேசுவதை விடவும் எனது பேச்சுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் , நான் என்ன பேசினேன் என்ற முழு விவரத்தையும் அவர்கள் வெளியிடுவதற்கு தைரியம் இருக்க வேண்டும். அவர்களுக்கு விருப்பமான ஒரு சில வார்த்தைகளை மட்டும் எடுத்துக்கொண்டு அதை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள். நான் முன்பு கூறியதை இப்போதும் கூறுகிறேன். பாஜக 100 தொகுதிகளுக்கு மேல், மேற்குவங்காளத்தில் வெல்ல முடியாது. இவ்வாறு பிரசாந்த் கிஷோர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மறுக்காத பிரசாந்த் கிஷோர்
அதேநேரம் கடந்த டிசம்பர் மாதம் பிரசாந்த் கிஷோர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் பாஜக இரட்டை இலக்கத்துக்கு மேல் தொகுதிகளை வெல்ல முடியாது ,அவ்வாறு வென்றுவிட்டால், நான் டுவிட்டரை விட்டு வெளியேறி விடுவேன் என்று தெரிவித்திருந்தார். தற்போது, அவர், பாஜக 100 தொகுதிகளை தாண்ட முடியாது என்று குறிப்பிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த லீக் உரையாடலை அவர் பேசவில்லை என மறுக்கவும் இல்லை.












Click it and Unblock the Notifications