"ஒழுங்கீனம்!" 3 கண்டிஷன் போட்ட காங். எம்எல்ஏக்கள்.. கோபத்தில் டெல்லி தலைமை! ராஜஸ்தானில் அடுத்து என்ன
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இப்போது குழப்பமான சூழல் ஏற்பட்டு உள்ள நிலையில், கெடால் ஆதரவு எம்எல்ஏக்களின் நடவடிக்கையால் டெல்லி தலைமை கடும் அதிருப்தியில் உள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு இப்போது வரியாக பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது. இந்த முறை சுமார் 4 ஆண்டுகளாக அமைதியாக ஆட்சி நடைபெற்ற ராஜஸ்தானில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
ராஜஸ்தான் மாநில முதல்வராக அசோக் கெலாட் இருந்து வருகிறார். அவர் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட உள்ள நிலையில், சச்சின் பைலட்டை முதல்வராக நியமிக்க உள்ளதாகத் தகவல் வந்ததே இந்த முடிவுக்குக் காரணம்.

காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரைத் தேர்வுசெய்ய அடுத்த மாதம் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. நேரு குடும்பத்தில் இருந்து யாரும் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என்பதில் ராகுல் உறுதியாக உள்ள நிலையில், சோனியா காந்தியின் நம்பிக்கைக்குரிய நபர்களில் ஒருவரான அசோக் கெலாட் தலைவர் தேர்தலில் போட்டியிட உள்ளதாகக் கூறப்பட்டது. ஒருவருக்கு ஒரு பதவி என்பதால் இதனால் கெலாட் ராஜஸ்தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகக் கூறப்பட்டது.

போர்க்கொடி
இதனிடையே அசோக் கெலாட்டிற்கு பதிலாக சச்சின் பைலட் முதல்வராக நியமிக்கப்பட உள்ளதாகக் கூறப்பட்டது. இருப்பினும், இதற்கு கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சச்சின் பைலட்டை முதல்வராக நியமித்தால் தங்கள் எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக சுமார் 90க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் நேற்றிரவு போர்க்கொடி தூக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இரு தலைவர்கள்
இந்த விவகாரத்தைக் கையாள இரு தலைவர்களை நியமித்துள்ள டெல்லி தலைமை, ஒவ்வொரு எம்எல்ஏக்களும் இருவரையும் தனித்தனியாகச் சந்தித்து தங்கள் பிரச்சினைகளைத் தெரிவிக்கலாம் என்று அறிவித்தது. ஆனால், இதன் பின்னர் நிலைமை கட்டுக்குள் வரவில்லை. அதிருப்தி எம்எல்ஏக்கள் டெல்லி தலைமை நியமித்த தலைவர்களை இன்று காலை சந்திக்க மறுத்துள்ளது அக்கட்சிக்கு மற்றொரு தலைவலியைக் கொடுத்து உள்ளது.

மறுப்பு
நேற்று மாலை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கெலாட் போட்டியிடுவது குறித்தும் புதிய முதல்வர் பதவிக்கு குறித்தும் ஆலோசிக்க ராஜஸ்தான் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இருப்பினும், இதை ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்தனர். தனியாக ஒரு கூட்டத்தை நடத்திய எம்எல்ஏக்கள் அப்போது தான் மொத்தமாக ராஜினாமா செய்யப்போவதாக போர்க்கொடி தூக்கினர். அதன் பின்னர் இன்று காலை, அவர்கள் டெல்லி நியமித்த இரு தலைவர்களையும் சந்திக்க மறுத்துவிட்டனர்.

ஒழுங்கீனம்
இதன் காரணமாக அவர்கள் வேறுவழியின்றி டெல்லி திரும்பினர். இது தொடர்பாகக் காங்கிரஸின் அஜய் மக்கான், "இது முற்றிலும் ஒழுங்கீனமான நடவடிக்கை.. நானும் மல்லிகார்ஜுன் கார்கேவும் பார்வையாளர்களாக வந்தோம். நேற்று மாலை முதலமைச்சரின் அவரது வீட்டில் ஆலோசனைக் கூட்டம் நடத்த முடிவு செய்தோம். ஆனால், அதைப் புறக்கணித்துவிட்டு எம்எல்ஏக்கள் தனியாக ஒரு கூட்டத்தை நடத்தி உள்ளனர்,

3 எம்எல்ஏக்கள்
அனைவரிடம் இருந்தும் நாங்கள் கருத்துக் கேட்கத் தாயாராக இருந்தோம். ஆனால், மூன்று எம்எல்ஏக்கள் மட்டுமே வந்து மூன்று நிபந்தனைகளை வைத்தனர்.. ராஜஸ்தான் முதல்வர் யார் என்பது குறித்த ஆலோசனை அக்.19ஆம் தேதிக்குப் பின்னர் மட்டுமே நடத்த வேண்டும் என்றனர். அப்போது சிக்கல் வர வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் அப்போது, அசோக் கெலாட் தான் காங்கிரஸ் தலைவராக இருப்பார். அவர் தனது ஆதரவாளருக்கு முன்னுரிமை அளிக்கக் கூடும்.

மறுப்பு
மேலும், அவர்கள் தனித்தனியாக வர முடியாது என்றும் கூட்டமாக வந்து சந்திப்பதாகவும் தெரிவித்தனர். தனியாக வந்தால் தான் எவ்வித தயக்கமும் இல்லாமல் பேச முடியும் என்று நாங்கள் கூறியதை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். நாங்கள் அவர்கள் கூறியதைச் சோனியா காந்தியிடம் தெரிவிக்க உள்ளோம். அவர் தான் இறுதி முடிவை எடுப்பார். தங்களின் 3 நிபந்தனைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்பது அவரது கோரிக்கை. ஆனால் இதை முடிவு செய்ய வேண்டியது சோனியா காந்தி தான்" என்று அவர் தெரிவித்தார்.

கோரிக்கை
கடந்த 2020இல் கெலாட் அரசுக்கு எதிராக சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கிய போது, பக்க பலமாக இருந்து ஆட்சியைக் காப்பாற்ற உதவிய 102 எம்எல்ஏக்களில் இருந்து தான் புதிய முதல்வரைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கை. இந்த விவகாரத்தில் டெல்லி தலைமை அடுத்த என்ன முடிவு செய்யும் என்பது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications