"கிழிந்து கிடந்த டைரி.." கொல்கத்தா மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை.. தந்தை சொன்ன பகீர் தகவல்
கொல்கத்தா: கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே உயிரிழந்த பெண் மருத்துவரிடம் பெர்சனல் டைரி இருந்ததாக உயிரிழந்த பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார். மேலும், இந்த சம்பவம் குறித்து சில கூடுதல் தகவல்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தில் இதுவரை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும், இதில் உண்மையான குற்றவாளிகளை போலீசார் கைது செய்யவில்லை என்று சொல்லி போராட்டம் தொடர்ந்து வருகிறது.
தந்தை: இதற்கிடையே பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 31 வயதான முதுகலை பயிற்சி மருத்துவரின் தந்தை சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். அதாவது தனது மகள் தனிப்பட்ட டைரி ஒன்றை வைத்திருந்ததாகவும், அதிலிருந்து கிழித்த பக்கமும் தன்னிடம் இருப்பதாகவும் கூறி பரபரப்பைக் கிளப்பி இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "அவள் தனது பேக்கில் எப்போதும் ஒரு டைரியை வைத்திருப்பார். சில நேரம் அதை எடுத்துப் படித்துவிடுவோம் என்று கிண்டல் செய்வோம். ஆனால், அவரது தனிப்பட்ட டைரி என்பதால் அதைப் படித்தது இல்லை. அதேநேரம் அவர் எங்களிடம் வேலையில் இருக்கும் பிரச்சினைகள், படிப்பில் இருக்கும் சிக்கல் என்று அனைத்தையும் பகிர்ந்து கொள்வார்.
கிழிந்த டைரி பக்கம்: அதையும் தாண்டி பெர்சனலான விஷயங்களை அவர் டைரியில் தான் எழுதி வைத்திருந்தார். அந்த டைரியின் கிழிந்த ஒரு பக்கம் என்னிடம் இருக்கிறது" என்று அவரது தந்தை கூறினார். அதேநேரம் அதில் என்ன இருந்தது என்பது குறித்த தகவல்களை அவர் பகிர மறுத்துவிட்டார். சிபிஐ இது குறித்து வெளியே சொல்ல வேண்டாம் எனக் கூறியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் அவர் பேசுகையில், "எனது மகளுக்கு ஏற்பட்ட நிலை யாருக்கும் ஏற்படக் கூடாது. இது வேதனை தருவதாக இருக்கிறது. எங்கே என் மகள் வேலை செய்தாளோ.. எங்கே அவள் மக்களுக்குச் சேவை செய்தாளோ.. அந்த இடமே அவளைப் பாதுகாக்காதது மிகவும் வருத்தமளிக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.
போராட்டம்: மேற்கு வங்கத்தில் நடந்த இந்த கொடூரத்தைக் கண்டித்து நாடு முழுக்க போராட்டங்கள் வெடித்துள்ளன. மேற்கு வங்கம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள இளநிலை மருத்துவர்கள் இந்த சம்பவத்தில் நீதி கோரி வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொல்கத்தாவில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்தச் சூழலில் சுப்ரீம் கோர்ட்டும் இந்த வழக்கைத் தானாக விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. நாளை ஆகஸ்ட் 20-ம் தேதி இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர இருக்கிறது.
விசாரணை: இந்த வழக்கை முதலில் கொல்கத்தா போலீசார் விசாரித்தது. இருப்பினும், அவர்கள் இந்த வழக்கைக் கையாண்ட விதம் மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்து இந்த வழக்கு வழக்கை சிபிஐ விசாரணைக்குக் கொல்கத்தா ஐகோர்ட் மாற்றியது. இந்த குற்றம் நடந்த போது ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷிடம் சிபிஐ தொடர்ந்து மூன்று நாட்களாக விசாரணை நடத்தியது. குற்றம் நடந்த போது அவர் எங்கே இருந்தார்.. அவரது தொலைப்பேசி உரையாடல்கள் என்ன என்பது குறித்தும் ஆராய்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications