"உங்களை சும்மா விடமாட்டோம்.." CRPF வீரர்களை பார்த்து சிறுவன் சொன்ன வார்த்தை! அடுத்து நடந்த தாக்குதல்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்தில் 3 வீரர்கள் காயமடைந்தனர். இதற்கிடையே இந்த தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே அதே சோதனை சாவடிக்கு வந்த சிறுவன் ஒருவன், அங்கிருந்த வீரர்களை மிரட்டியதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அந்த சிறுவனை அடையாளம் கண்டு விசாரிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவித்து வருகிறது. இதனால் காஷ்மீரில் எப்போதும் பதற்றமான ஒரு சூழலே நிலவி வருகிறது. அங்கு அமைதியை நிலைநிறுத்த இந்திய ராணுவம் மிக தீவிரமாக தொடர்ந்து போராடி வருகிறது. இதற்கிடையே பாதுகாப்பு படையை குறிவைத்து இப்போது ஒரு தாக்குதல் நடந்துள்ளது.

என்ன நடந்தது
காஷ்மீரின் குல்காமில் உள்ள மிர் பஜார் அருகே அமைந்துள்ள சிஆர்பிஎஃப் சோதனை சாவடியில் புதன்கிழமை பிற்பகல் 2.15 மணியளவில் இந்த தாக்குதல் நடந்தது. அடர்ந்த மரங்கள் நிறைந்த பகுதியில் இருந்து வந்த இரண்டு ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள், அங்கிருந்த வீரர்களை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளனர். இதில் மூன்று வீரர்கள் காயமடைந்தனர். அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.
அந்த சிறுவன்!
இதற்கிடையே எல்லையில் நடந்த சில விஷயங்கள் குறித்து இப்போது சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது இந்த தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, அதாவது திங்கள்கிழமை, 10ம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் அதே சோதனை சாவடிக்கு வந்துள்ளான். அங்கிருந்த சிஆர்பிஎஃப் வீரர்களிடம், "நாங்கள் உங்களை சும்மா விடமாட்டோம்" என்று மிரட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், அப்போது வீரர்கள் அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லையாம். ஆனால், அதே சோதனை சாவடியில் புதன்கிழமை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதை தொடர்ந்து, சிறுவன் விடுத்த மிரட்டல் சர்ச்சையாகியுள்ளது. இது குறித்தும் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். அந்த சிறுவன் யார், அவனது மிரட்டலுக்கும் தாக்குதலுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தாக்குதல்
பயங்கரவாதிகள் பைக்கில் வந்து தாக்குதல் நடத்தியதாக முதலில் கூறப்பட்டது. ஆனால், ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினர் நடத்திய கள ஆய்வில் இருசக்கர வாகனம் பயன்படுத்தப்படவில்லை என்பது தெரியவந்தது. சுமார் 50 மீட்டர் தொலைவில் உள்ள மரங்கள் அடர்ந்த பகுதியில் இருந்து இரண்டு பயங்கரவாதிகளும் நடந்து வந்துள்ளனர். ஒருவன் வீரர்களை நோக்கி சுட்டபோது, மற்றொருவன் பாதுகாப்பு அளித்துள்ளான். பின்னர் இருவரும் நவ்பூர் பகுதியை நோக்கி தப்பி சென்றுள்ளனர்.
தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் உள்ளூர் தளபதியான முகமது லத்தீப் பட் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என பாதுகாப்பு அமைப்புகள் சந்தேகிக்கின்றன. கடந்த ஜூலை மாதம் ஷோபியானில் நடைபெற்ற பாதுகாப்பு படையினரின் தாக்குதலில் தப்பியவர் தான் இந்த லத்தீப் பட் என்பது குறிப்பிடத்தக்கது.
பதிலடி
பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலின்போது காயமடைந்த மூன்று வீரர்களும் சுமார் 22 கிமீ தொலைவில் உள்ள அனந்த்நாக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஒருவருக்கு வயிற்று பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்ற இருவருக்கும் கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் குண்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. காயமடைந்த நிலையிலும் மூன்று வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தியதுடன், பயங்கரவாதிகளை துரத்தியதாக சிஆர்பிஎஃப் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் பயங்கரவாதிகளால் அதிக உயிரிழப்புகளையும் சேதங்களையும் ஏற்படுத்த முடியாமல் பின்வாங்க வேண்டிய இருந்தது.
சம்பவ இடத்தில் இருந்து மோட்டோரோலா செல்போன் மற்றும் சிம் கார்டு மீட்கப்பட்டுள்ளன. அருகிலுள்ள கடைகளின் சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இப்போது அந்த பகுதி முழுவதும் பாதுகாப்பு படையினர் கண்ட்ரோலில் வந்துள்ள நிலையில், தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். கூடுதல் தடுப்புகள், கவச வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
