அலறல் சத்தம்.. தீப்பிழம்பு.. நடுவானில் வெடித்து சிதறிய நேபாள விமானம்! பயணி எடுத்த பரபர வீடியோ
காத்மண்டு: ஒட்டுமொத்த உலகையே நேபாளத்தில் நடந்த விமான விபத்து உறைய வைத்துள்ள நிலையில், விபத்து நடந்த போது விமானத்தில் இருந்து எடுத்த வீடியோ இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தில் அரங்கேறிய விமான விபத்து ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர வைத்துள்ளது. சமீப ஆண்டுகளில் உலகில் ஏற்பட்ட மிக மோசமான விபத்தாக இது இருக்கிறது. இதில் பயணித்த 72 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
எட்டி ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ஏடிஆர் 72 விமானம் தரையிறங்க சில நிமிடங்களே இருந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்து வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதில் பயணித்த 5 இந்தியர்களும் உயிரிழந்துவிட்டனர்.

விமானம்
இதற்கிடையே விபத்து சமயத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் பேஸ்புக்கில் லைவ் ஸ்டிரீம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு விமானம் விபத்தில் சிக்கப் போவது தெரியவில்லை. 2 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோதான் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. முதலில் அவர்கள் ஜாலியாக தங்கள் பயணத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக வீடியோவை எடுத்துள்ளனர். ஆனால், எதிர்பாராத விதமாக விமானம் விபத்தில் சிக்கவே அதுவும் கூட அந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது.

என்ன நடக்கிறது
விமானத்தில் ஜன்னல் சீட்டில் அமர்ந்த நபர் இந்த வீடியோவை எடுத்துள்ளார். முதலில் விமானம் தரையிறங்கும் முன்பு அவர்கள் நகரைச் சுற்றுவது தெரிகிறது. பயணிகள் உற்சாகமாக அந்த வீடியோவில் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு சில நொடிகளில் ஏற்படப்போகும் ஆபத்து குறித்துத் தெரியவில்லை. அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென ஒரு வெடிப்பு ஏற்படுகிறது. அப்போது மொபைல் பயணியின் கைகளில் இருந்து கீழே விழுந்துவிடுவதால், எதுவும் தெளிவாகத் தெரியவில்லை.

பயங்கர தீ விபத்து
இருப்பினும், அந்த வீடியோவில் கடைசி சில வினாடிகள் ஜன்னலுக்கு வெளியே ஏற்படும் பயங்கர நெருப்பும் பயணிகளின் அலறல் சத்தமும் தெளிவாகத் தெரிகிறது. நேற்று மாலை முதலே இணையத்தில் இந்த வீடியோ தான் வேகமாகப் பரவி வருகிறது. இந்த விமானத்தில் பயணித்த 5 இந்தியர்களும் பலியாகினர்.. இந்த விபத்தில் உயிரிழந்த இந்தியர்களில் ஒருவர் சோனு ஜெய்ஸ்வால்.. இவர் தான் விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு பேஸ்புக் லைவ் செய்துள்ளார். இதேபோல விபத்தைக் கீழே இருந்து ஒருவர் எடுத்த வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

கட்டுப்பாட்டை இழந்த விமானம்
இதில் தரையிறங்கத் தொடங்கும் போது, விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழப்பதும் விமானம் திடீரென இடது பக்கம் சாய்ந்து, தலைகீழாகத் திரும்பித் தீப்பற்றுவதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்த விபத்திற்குப் பிரதமர் மோடி தொடங்கி பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். நேபாளத்தில் நடந்த மிக மோசமான விமான விபத்தாக இது பார்க்கப்படுகிறது. எட்டி ஏர்லைன்ஸ் விமானத்திற்குச் சொந்தமான இந்த விமானம் 15 ஆண்டுகள் பழமையானதாகும். அதேபோல விபத்திற்கான காரணம் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

என்ன காரணம்
விபத்து நடந்த போது வானிலை சிறப்பாக இருந்ததால்.. வானிலை இந்த விபத்திற்குக் காரணமாக இருந்திருக்க வாய்ப்பில்லை. இதனால் தொழில்நுட்ப கோளாறால் விபத்து நடந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. மீட்புப் பணிகள் நேற்று முடிவடையாத நிலையில், அது இன்றும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காத்மாண்டுவில் இருந்து போகாரா செல்ல 25 நிமிடங்களே . விமானம் புறப்பட்டு 20 நிமிடங்கள் கழித்து விமானம் தரையிறங்கத் தொடங்கிய போது இந்த விபத்து நடந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

கருப்பு பெட்டி
விமானத்தின் கருப்பு பெட்டியைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் பின்னரே நமக்கு விபத்திற்கான காரணம் தெரிய வரும். நேபாளத்தில் விமான போக்குவரத்து 100% பாதுகாப்பானதாக இருப்பதில்லை. அங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டே வருகிறது. பாதுகாப்பு குளறுபடிகள் காரணமாகக் கடந்த 2013 முதல், ஐரோப்பிய ஒன்றியம் நேபாளத்தை விமானச் சேவையில் பிளாக் லிஸ்டில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது நேபாளத்தில் இருந்து வரும் அனைத்து விமானங்களும் ஐரோப்பிய ஒன்றிய வான்வெளியைப் பயன்படுத்த முடியாது.












Click it and Unblock the Notifications