உடலில் ஒரே ஒரு துணி.. கண், வாயில் ரத்தம்.. கை உடைந்திருந்தது.. கொல்கத்தா மருத்துவரின் தாய் கண்ணீர்
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று நடந்தவை குறித்து தாய் கூறியுள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.
மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் இரண்டாமாண்டு முதுநிலை மருத்துவம் பயின்று வந்தார். அவர், கடந்த 8 ம் தேதி இரவுப் பணியில் இருந்தபோது அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனையில் உள்ள கருத்தரங்கக் கூடத்தில் தூங்கச் சென்றுள்ளார். இந்நிலையில், அடுத்த நாள் காலையில் அவர் அரை நிர்வாணக் கோலத்தில் சடலமாக மீட்கப்பட்டார். மருத்துவ மாணவியின் உடற்கூறாய்வில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருத்துவரைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாகக் கூறப்படும் சஞ்சய் ராய் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நாட்டின் பல பகுதிகளிலும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து, பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பெண் பயிற்சி மருத்துவர் கொலைக்கு உரிய நீதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாட்டிலும் மருத்துவர்களின் போராட்டம் தொடங்கியுள்ளது. இதற்கிடையே கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கைச் செவ்வாய்க்கிழமை விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண் மருத்துவரின் தலை, முகம், கழுத்து, கைகள், பெண்ணுறுப்பு என 14 இடங்களில் கொடூர காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதிபயங்கர தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கழுத்து நெறிக்கப்பட்டதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பெண் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, அவரது தாய் கூறுகையில், எங்களுக்கு மருத்துவமனையில் இருந்து முதலில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது, உங்களுடைய மகளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறிவிட்டு கட் செய்தனர். நாங்கள் அந்த எண்ணுக்குத் தொடர்பு கொண்டு மீண்டும் பேசியபோது, மருத்துவமனைக்கு வாருங்கள் என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டனர். மீண்டும் அந்த எண்ணுக்கு அழைத்தபோது உங்கள் மகள் தற்கொலை செய்து கொண்டார் என உதவி கண்காணிப்பாளர் கூறினார்.
எங்கள் மகள் வியாழக்கிழமை இரவுப் பணிக்குச் சென்றார். வெள்ளிக்கிழமை 10.53 மணியளவில் எங்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. இதையடுத்து, உடனடியாக மருத்துவமனைக்கு நாங்கள் சென்ற நிலையில், எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. மகளைப் பார்க்கவே விடவில்லை. 3 மணியளவில் எங்களது மகளைப் பார்க்க அனுமதித்தார்கள். அப்போது அவளது உடம்பில் ஒரே ஒரு துணி மட்டும்தான் இருந்தது. கண்கள், வாயில் இருந்து ரத்தம் வடிந்திருந்தது. கை உடைக்கப்பட்டிருந்தது என்று கூறி வெடித்து அழுதார்.
அவரைப் பார்த்ததுமே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம். அங்கிருந்தவர்களிடமும் இதுகுறித்து கூறினோம். எங்களுடைய மகளை டாக்டராக்க வேண்டும் என பாடுபட்டோம். ஆனால், இப்படி கொலை செய்துவிட்டார்கள். இச்சம்பவத்தில் ஆரம்பத்தில் இருந்தே உரிய விசாரணை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை, மிகவும் அதிருப்திதான் எங்களுக்கு. இந்த கொடூர சம்பவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் சம்பந்தப்பட்டுள்ளனர் என நாங்கள் சந்தேகப்படுகிறோம்.
முதல்வர் மம்தா உண்மையான குற்றவாளியை உடனடியாக கைது செய்வோம் என்றார். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. ஒருவர் மட்டும்தான் கைது செய்யப்பட்டுள்ளார். நாங்கள் நிச்சயமாக சொல்கிறோம் இந்தப் பிரச்னையில் நிறைய பேருக்கு தொடர்பு உள்ளது. ஒட்டுமொத்த துறையும் இந்தச் சம்பவத்துக்கு பொறுப்பேற்க வேண்டும். போராட்டத்தை நிறுத்த வேண்டும் என்று மட்டும்தான் முதல்வர் நினைக்கிறார். காவல் துறை இதில் தீவிரமாக செயல்படவில்லை. எனது மகளின் உடலை அடக்கம் செய்வதில் மட்டும்தான் காவல் துறையினர் முனைப்பாக இருந்தார்கள்.
இதுகுறித்து பெண்ணின் தந்தை பேசுகையில், எனது மகளை இழந்துவிட்டேன். லட்சக்கணக்கான மகன், மகள்கள் கிடைத்திருக்கின்றனர். அதேநேரத்தில், என் மகளின் மோசமான புகைப்படங்களை பகிர்ந்து, தவறான சில தகவல்களையும் பரப்பி வருவது மேலும் வேதனையை அளிக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications