வரிசையாக செயலிழக்கும் உறுப்புகள்! பாக். முன்னாள் அதிபர் முஷாரஃப்பிற்கு அமிலாய்டோசிஸ்.. அறிகுறி என்ன
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரபிற்கு உடல் உறுப்புகள் வரிசையாகச் செயலிழந்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த 2001 முதல் 2008 வரை அதிபராக இருந்தவர் பர்வேஸ் முஷாரப். இவர் கடந்த 1999இல் ராணுவ முயற்சி மூலம் ஆட்சியைப் பிடித்தவர்
அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற இவரது உடல்நிலை கடந்த சில வாரங்களே மோசமடைந்து வந்தது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பர்வேஸ் முஷாரப்
78 வயதான பர்வேஸ் முஷாரபின் உடல்நிலை நேற்றைய தினம் உடல்நிலை மிகவும் மோசமானது, சில ஊடகங்களில் அவர் உயிரிழந்துவிட்டதாகவும் கூட செய்திகள் வெளியானது. இப்போது அவர் துபாயில் வசித்து வரும் நிலையில், இந்த தகவல்கள் பொய் என்பது சில நிமிடங்களில் தெரிய வந்தது. இருப்பினும், அமிலாய்டோசிஸ் (Amyloidosis) நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவரது உடல் உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கி உள்ளதாக அவரது குடும்பத்தினரே தெரிவித்துள்ளனர். முஷராப்பை முடக்கி உள்ள இந்த அமிலாய்டோசிஸ் நோய் என்றால் என்ன எனப் பார்க்கலாம்.

அமிலாய்டோசிஸ் என்றால் என்ன?
அமிலாய்டோசிஸ் என்பது உடல் முழுவதும் உள்ள உறுப்புகள் மற்றும் திசுக்களில் அமிலாய்டு எனப்படும் அசாதாரண புரதத்தின் கட்டமைப்பால் ஏற்படும் அரிய ஒரு நோயாகும். அமிலாய்டு என்பது ஒரு அசாதாரண புரதமாகும், இது எலும்பு மஜ்ஜையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இது எந்த உறுப்பிலும் கூட படியும் வாய்ப்புகள் உள்ளது. இந்த புரதம் திசுக்கள் சரியாக வேலை செய்வதைக் கடினமாக்கும். உரியச் சிகிச்சை இல்லையென்றால் வரிசையாக உடல் உறுப்புகளும் கூட செயலிழக்கத் தொடங்கும்.

அமிலாய்டோசிஸின் அறிகுறிகள்
அமிலாய்டோசிஸின் அறிகுறிகள் எந்த உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன என்பதைப் பொறுத்தும் மாறும். அமிலாய்டோசிஸ் உள்ள பெரும்பாலானோரின் சிறுநீரகங்களில் அமிலாய்டு புரதங்களைப் படியும்போது சிறுநீரக செயலிழக்கும் அபாயம் உள்ளது. சிறுநீரக செயலிழப்பு அறிகுறிகள் வீக்கம், சோர்வு, பலவீனம், பசியிழப்பு பாதிப்புகள் ஏற்படும்.

இதய செயலிழப்பு
அதேபோல இதயத்தில் உள்ள தசைகளில் அமிலாய்டின் படியும்போது இதய தசைகள் கடினமாகி, உடல் முழுவதும் ரத்தத்தை பம்ப் செய்வதைக் கடினமாக்கும். இதன் விளைவாக இதய செயலிழப்பு ஏற்படலாம். மூச்சுத் திணறல், எடிமா, அசாதாரண இதயத் துடிப்பு இதற்கான முக்கிய அறிகுறிகள் ஆகும். அமிலாய்டு புரதங்கள் கல்லீரல், மண்ணீரல், நரம்புகள் அல்லது செரிமான அமைப்பு போன்ற பிற பகுதிகளிலும் ஏற்படலாம்.

நினைவாற்றல் பிரச்சினை இருக்குமா
மயக்கம், உணர்வின்மை, கை மற்றும் கால்களில் கூச்ச உணர்வு, குமட்டல், வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல், உணர்வின்மை, கூச்ச உணர்வு மற்றும் மணிக்கட்டு, கை மற்றும் விரல்களில் வலி ஆகியவை ஏற்படும். அமிலாய்டோசிஸ் மூளையைப் பாதிக்காது, அதனால் நினைவாற்றல் அல்லது சிந்தனையில் எந்த பிரச்சனையும் ஏற்படாது. சில சந்தர்ப்பங்களில், அமிலாய்டோசிஸ் மைலோமா எனப்படும் ஒரு வகை எலும்பு புற்றுநோயையும் ஏற்படுத்தலாம்.

சிகிச்சை முறை
பிளாஸ்மா செல்கள் எனப்படும் எலும்பு மஜ்ஜையில் காணப்படும் சில உயிரணுக்களில் ஏற்படும் மாற்றத்தால் இந்த அமிலாய்டோசிஸ் பாதிப்பு ஏற்படுகிறது. இவை பிளாஸ்மா செல்களை பாதிக்கிறது. இது ரத்த ஓட்டத்தில் நுழைந்து அமிலாய்டு படிவுகளை உருவாக்குகின்றன. இதுபோன்ற படிவுகள் ஒரு கட்டத்தில் உடல் உறுப்பு பாதிப்பை ஏற்படுகிறது. துரதிருஷ்டவசமாக அமிலாய்டோசிஸுக்கு தற்போது சிகிச்சை இல்லை. அமிலாய்டு படிவுகளை நேரடியாக அகற்ற முடியாது. ஆனால் அசாதாரண புரதங்கள் உற்பத்தி செய்யப்படுவதை நிறுத்தலாம். அதேபோல அறிகுறிகளுக்குச் சிகிச்சை பெறலாம்.

சிகிச்சை
இந்த சிகிச்சைகள் உடல் படலங்கள் உருவாக்குவதற்கு முன் படிப்படியாகக் குறைக்க உதவும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், கீமோதெரபி சிகிச்சை இருக்கும். இதன் மூலம் அசாதாரண எலும்பு மஜ்ஜை சேதப்படுத்தும். கீமோதெரபி மருந்துகளின் விளைவைக் குறைக்க கீமோதெரபியுடன் ஸ்டெராய்டுகள் சேர்ந்து கொடுக்கப்படும். அதேபோல ஸ்டெம் செல் மாற்றுச் சிகிச்சையும் இதற்குப் பயன்படுத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications