ஒரே நேரத்தில் 36 சாட்டிலைட்கள்.. இஸ்ரோ இன்று அனுப்பும் ஒன்வெப் சாட்டிலைட்டில் இத்தனை சிறப்புகளா
ஸ்ரீஹரிக்கோட்டா: இஸ்ரோ தொடர்ச்சியாக பல்வேறு ராக்கெட்களை விண்வெளிக்கு அனுப்பி சாதனை படைத்து வருகிறது. இதற்கிடையே இன்று (மார்ச் 26) இஸ்ரோ ஒரே நேரத்தில் 36 ஒன்வெப் சாட்டிலைட்களை அனுப்பி புதிய மைல்கல்லை எட்ட உள்ளது.
இஸ்ரோ கடந்த பல காலமாகவே தொடர்ச்சியாக பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது. சந்திரயான், மங்கள்யான் என்று தொடர்ச்சியாக விண்வெளித்துறையில் பல சாதனைகளைப் படைத்து வருகிறது.
மற்றொரு மைல்கல்லாக இன்று (மார்ச் 26) இஸ்ரோ ஒரே நேரத்தில் 36 ஒன்வெப் சாட்டிலைட்களை அனுப்பி புதிய மைல்கல்லை எட்ட உள்ளது.

36 சாட்டிலைட்கள்
இஸ்ரோ சரியாக இன்று காலை 9 மணிக்கு இங்கிலாந்தைச் சேர்ந்த நெட்வொர்க் அக்சஸ் அசோசியேட்டட் லிமிடெட் (ஒன்வெப்) நிறுவனத்தின் 36 சாட்டிலைட்களை தனது LVM3 ராக்கெட் மூலம் விண்ணுக்குச் செலுத்துகிறது. இதற்கான கவுன்ட் டவுன் நேற்று காலை தொடங்கிய நிலையில், தற்போது வரை எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் போய்க் கொண்டிருப்பதாக இஸ்ரோ மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்தமாக இந்தாண்டு மூன்று முறை உட்பட 18 முறை ஒன்வெப் தனது சாட்டிலைட்களை அனுப்பியுள்ளது.

எதற்காக இஸ்ரோ செலுத்துகிறது
இதன் மூலம் முதல் தலைமுறை லியோ கான்ஸ்டலேஷன்களை நிறைவடைந்துள்ளது. இன்னும் சில மாதங்களில் இது உலகளவில் பயன்பாட்டிற்கு வரும். நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் உடனான வணிக ஒப்பந்தத்தின் கீழ், ஒன்வெப் நிறுவனத்தின் 72 சாட்டிலைட்களை புவி சுற்றுப்பாதையில் (Low-Earth Orbits) செலுத்துவதில் இரண்டாம் கட்ட நடவடிக்கையாகும். ஏற்கனவே 36 சாட்டிலைட்களை கொண்ட முதல் தொகுப்பு அக்டோபர் 23, 2022இல் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

என்ன ராக்கெட்
இன்று ஏவப்படும் LVM3 ராக்கெட் 5,805 கிலோ எடையுள்ள 36 ஒன்வெப் செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பும். இத்துடன் ஒன்வெப் நியூஸ்பேஸ் இந்தியா ஒப்பந்தம் நிறைவடையும். இந்த சாட்டிலைட்கள் 87.4 டிகிரியில் 450 கிமீ வட்ட சுற்றுப்பாதையில் செலுத்தப்படும். இதுவரை சந்திரயான் 2 உட்பட தொடர்ந்து ஐந்து முறை LVM3 ஏவுகணையை இஸ்ரோ வெற்றிகரமாகச் செலுத்தியுள்ளது. GSLVMkIII என்று முன்பு அழைக்கப்பட்ட ராக்கெட் தான் இப்போது LVM3 என்று அழைக்கப்படுகிறது.

எங்கே இருந்து ஏவப்படுகிறது
இஸ்ரோ ஆறாவது முறையாக இந்த மாடல் ஏவுகணையை இன்று பயன்படுத்துகிறது. இதில் மொத்தம் 36 சாட்டிலைட்களை விண்வெளிக்கு எடுத்துச் செல்கிறது. LVM3 43.5 மீட்டர் உயரமும் 643 டன் எடையும் கொண்டது. ஒன்வெப்பின் இந்த 5,805 கிலோ எடையுள்ள சாட்டிலைட்கள் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து ஏவப்படுகிறது.

மூன்று ஸ்டேஜ் ராக்கெட்
இஸ்ரோ அனுப்பும் இந்த ராக்கெட் மூன்று ஸ்டேஜ் ராக்கெட் ஆகும். கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த ராக்கெட்டால் அதிகபட்சம் 10 டன் எடை வரை சுமந்து செல்ல முடியும். ராக்கெட் ஏவப்பட்டு 19ஆவது நிமிடத்தில் இருந்து சாட்டிலைட்கள் அதன் இடங்களில் நிறுத்தப்படும். ஒன்வெப் என்பது விண்வெளியில் இருந்து இயங்கும் சர்வதேச தொடர்பு நெட்வொர்க் ஆகும்.. இது உலகின் பல்வேறு நாடுகள் மற்றும் நிறுவனங்களுக்குத் தொடர்பை வழங்கும்.

ஒன்வெப்
இது குறித்து ஒன்வெப் தரப்பில் கூறுகையில், "இதுவரை 17 முறை சாட்டிலைட் அனுப்பிவிட்டோம். இது 18ஆவது முறை. இஸ்ரோ மூலம் 36 சாட்டிலைட்களை அனுப்புகிறோம். இதன் மூலம் விண்ணில் இருக்கும் சாட்டிலைட் எண்ணிக்கை 616ஆக உயர்கிறது. சர்வதேச அளவில் சேவையைத் தொடங்க இதுவே போதும்" என்று கூறுகின்றனர். இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ யூடியூப் தளத்தில் ராக்கெட் லான்ச் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அங்கே இதை நேரடியாகப் பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications