விண்வெளியில் ரூ.56 ஆயிரம் கோடி இந்தியச் சொத்து! ஆதித்யா எல்-1 வேலை இதுதான்!
ஆதித்யா எல்-1 விண்கலம் சூரிய ஒளி வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விண்கலமானது பிஎஸ்எல்வி சி57 ராக்கெட் உதவியுடன் கடந்த செப். 2ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.
இதனைப் பூமியிலிருந்து 15 லட்சம் கி.மீட்டர்.தொலைவிலுள்ள Lagrangian Point One என்ற புள்ளியின் மிக அருகில் நிலைநிறுத்த இஸ்ரோ திட்டமிட்டிருந்தது.

அதன்படி, 127 நாட்கள் பலகட்ட தடைகளைக் கடந்து, சில தினங்கள் முன்னதாக எல்-1 புள்ளியை மையமாகக் கொண்ட சூரிய ஒளி வட்டப் பாதையில் இந்திய விஞ்ஞானிகள் மிகச் சரியாக நிலைநிறுத்தி நாட்டிற்கே பெருமை சேர்த்திருந்தனர்.
பிரதமர் மோடி இதற்காக விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு தெரிவித்திருந்தார். இந்த ஆதித்யா எல் 1 விண்கலத்தின் வேலை என்ன? இதன் மூலம் இந்தியா என்ன சாதிக்க உள்ளது? ஆகிய சந்தேகங்களுக்கு விடையளிக்க முன்வந்துள்ளார் விஞ்ஞானி வி.வெங்கடேஸ்வரன்.
அவர் விண்கலத்தை விண்வெளியில் ஏதாவது சவாலான வேலை இல்லை என்று தொடங்கும்போதே புதிருடன் பேச ஆரம்பித்தார்.

"விண்வெளியில் விண்கலத்தை ஏவுவது பெரிய சிக்கல் கிடையாது. சிக்கை எங்கே இருக்கிறது என்றால், அதன் இலக்கில் கொண்டுபோய் விண்கலத்தை நிறுத்துவதுதான்.
நாம் முன்பு அனுப்பிய சந்திரயான் 2 இல் தோல்வி எங்கே வந்தது? நிலாவில் இறங்கும்போதுதான். மங்கள்யான் தான் என்று செவ்வாய் கிரகணத்திற்குச் சென்றோம் இல்லையா?
அப்போது விஞ்ஞானிகள் எந்தத் தருணத்தில் பரபரப்பாக இருந்தார்கள் என்றால், செவ்வாய்க்குச் சென்று அதன் அருகில் விண்கலத்தைச் சுற்றிவருவதைப் போல நிலைநிறுத்திய போதுதான்.

இந்த மாதிரியான நேரங்கள்தான் முக்கியமானவை. கரணம் தப்பினால் மரணம் என்பார்களே அப்படி. வாகனத்தை பார்கிங் செய்யும் போது அங்கே போட்டுள்ள கோட்டைத் தாண்டி வாகனத்தைக் கொஞ்சம் தள்ளி நிறுத்தினால் ஒன்று ஆகிவிடாது.
ஆனால், விண்வெளியில் அப்படிச் செய்தால் அவ்வளவுதான். விண்கலங்கள் வெகு வேகமாகப் போய்க் கொண்டிருக்கும். அந்த நேரத்தில் ஒரு நொடி தவறினாலும் அவ்வளவுதான். விண்கலம் பல ஆயிரம் கிமீட்டர் தூரத்திற்குத் தள்ளிப் போய்விடும்.

இப்போது ஆதித்யா எல் 1 விண்கலத்தில் Thrusters உள்ளன. Thrusters என்பது 12 உந்துவிசை ராக்கெட்டுகளைக் கொண்டது. அதாவது பலர் சேர்ந்து குரூப் டான்ஸ் ஆடுவார்களே அதைப்போல.
இதைப்போல இந்த 12 உந்துவிசைகளையும் ஒன்றைப் போலவே பலதையும் ஒரே மாதிரி இயக்க வேண்டும். அப்படி இயக்கினால்தான் எல்1 என்ற அந்தப் புள்ளியைச் சுற்றி வட்டப்பாதையில் பயணிக்கும்.
அதைச் சரியாகச் செய்துள்ளார்கள் நம் விஞ்ஞானிகள். இதுதான் மிகச்சிறப்பான செயல். மிகமிக சவாலான செயலை நாம் செய்து முடித்துவிட்டோம் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஊர் பழமொழில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பார்கள். அதை மாதிரி இந்த விண்கலம் விண்வெளி தொலைநோக்கி. இது ஒரே நேரத்தில் இரண்டு பணிகளை மேற்கொள்ளும்படி வடிவமைத்திருக்கிறார்கள்.

ஒன்று, சூரியனைக் குறித்து ஆராய்ச்சி செய்யும். சூரியனைப் பற்றிய நிறைய மர்மங்கள் உள்ளன. ஆகவே அதைத் தொடர்ந்து கண்காணித்து இந்த விண்கலம் ஆராய்ச்சி செய்யும்.
இரண்டு, விண்கலம் நிலைநிறுத்தப்பட்டுள்ள அந்தப் பகுதியை சுற்றி விண்வெளி வானிலையை ஆய்வு செய்யும். விண்வெளி வானிலை என்றால் என்ன? எப்போதும் சூரியனிலிருந்து சூரியக் காற்று வெளியாகிக் கொண்டே இருக்கும்.
அப்படி என்றால் பல்வேறு விதமான மின்னேற்றம் கொண்ட துகள்கள். எளிமையாகச் சொன்னால், எலெக்ட்ரான், நியூட்ரான் எனப் படித்துள்ளோம் அல்லவா அவைபோல.
இவை எந்த வேலத்தில் வருகின்றன. அதனுள் உள்ள காந்தப்புலங்கள் என்ன? இவற்றை அளவிடுவதுதான் விண்வெளி வானிலை என்பது.

ஒருவேளை சூரிய புயல் போன்றவை ஏற்பட்டால் இது முன்கூட்டியே நமக்குத் தகவல் சொல்லும். இந்த சூரிய புயலால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை. மனிதனுக்கும் எந்த ஆபத்தும் இல்லை. நாம் அனுப்பி உள்ள விண்கலங்களில் உள்ள மின்னணுக் கருவிகளுக்கு நிச்சயம் ஆபத்து வரும்.
இந்தியாவின் 56 ஆயிரம் கோடி மதிப்புள்ள விண்வெளி சொத்துகள் அங்கே உள்ளன. அதைப் பாதுகாப்பதற்காகத்தான் இந்த ஆதித்யா எல்1 உதவும்.


Click it and Unblock the Notifications
