மாறிய அதிர்ஷ்டம்.. ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் சர்மா தேர்வு.. ஓரம்கட்டப்பட்ட வசுந்தரா ராஜே!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஆட்சியை பறித்துள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநில பாஜக புதிய முதல்வர் யார்? என்பதற்கு இன்று விடை கிடைத்தது. அதன்படி ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்தது. முதல்வராக அசோக் கெலாட் இருந்தார். காங்கிரஸின் 5 ஆண்டு ஆட்சி இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் கடந்த மாதம் 25ம் தேதி மாநிலத்தில் உள்ள 199 சட்டசபைக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த மாதம் 25ம் தேதி தேர்தல் நடந்தது. டிசம்பர் 3ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ராஜஸ்தானை பொறுத்தமட்டில் ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 101 தொகுதிகளில் வெல்ல வேண்டும்.
அந்த வகையில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஆட்சியை பறித்தது. அதாவது பாஜக மொத்தம் 115 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 69 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும், மற்றவர்கள் 13 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர். இதன்மூலம் ராஜஸ்தானில் 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாஜக ஆட்சியை கைப்பற்றி உள்ளது.
இந்நிலையில் தான் ராஜஸ்தானின் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் இழுபறி நிலவுகிறது. முதல்வர் பதவி மீது நிறைய தலைவர்கள் கண்வைத்துள்ளது தான் இதற்கு காரணமாக உள்ளது. அதன்படி முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, மத்திய அமைச்சர்களான அர்ஜூன் ராம் மேக்வால், கஜேந்திர சிங் ஷெகாவத், அஸ்வினி வைஷ்ணவ், எம்எல்ஏ பாபா பாலக்நாத் உள்ளிட்டோர் முன்னிலையில் இருப்பதாக கூறப்பட்டது.
இதற்கிடையே தான் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இன்று மாலை 4 மணிக்கு பாஜக எம்எல்ஏக்களின் கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருபம், பாஜக தேர்தல் பார்வையாளரான ராஜ்நாத் சிங், இணை பார்வையாளர்கள் சரோஜ் பாண்டே மற்றும் வினோத் தாவ்டே உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் புதிய முதல்வர் யார்? என்பது தேர்வு செய்யப்பட்டது.
அதன்படி ராஜஸ்தான் மாநில முதல்வராக பஜன்லால் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை அந்த மாநில முதல்வராக எம்எல்ஏக்கள் அனைவரும் சேர்ந்து தேர்வு செய்துள்ளதாக பாஜக மேலிட பார்வையாளர் ராஜ்நாத் சிங் அறிவித்தார். முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள பஜன்லால் சர்மாவுக்கு தற்போது 56 வயது ஆகிறது. நடந்து முடிந்த தேர்தலில் சங்கானீர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் புஷ்பேந்திர பரத்வாஜை 48,081 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தார். பாஜகவின் மாநில பொதுச்செயலாளராக 4 முறை பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அதோடு இவர் முதல் முறையாக எம்எல்ஏவாகி உள்ளார்.
முன்னதாக பாஜகவின் பல மூத்த தலைவர்களும், ‛‛ராஜஸ்தான் முதல்வராக புதியவர் ஒருவர் நியமனம் செய்யப்பட உள்ளார். இந்த நியமனம் என்பது அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருக்கும்'' என கூறியிருந்தனர். அதன்படி தற்போது முதல் முறையாக எம்எல்ஏவாக தேர்வாகி உள்ள பஜன்லால் சர்மா ராஜஸ்தான் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் பாஜக முன்னாள் முதல்வர் வசுந்தராராஜே சிந்தியா அக்கட்சியின் மேலிடத்தால் ஓரம்கட்டப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications