Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார்? அடுத்து என்ன நடக்கும்?

Subscribe to Oneindia Tamil
ஜனாதிபதி செயலகம்.
Getty Images
ஜனாதிபதி செயலகம்.

சுதந்திர இலங்கை வரலாற்றில் முதல் முறையாக, பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்னர், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவி வகித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது ராஜினாமா கடிதத்தை நேற்றைய தினம், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளித்திருந்தார்.

இலங்கையிலிருந்து சிங்கப்பூரை நோக்கி தப்பிச் சென்ற ஜனாதிபதி, சிங்கப்பூரிலுள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக, தனது ராஜினாமா கடிதத்தை மின்னஞ்சல் ஊடாக நேற்றைய தினம் (14) அனுப்பி வைத்திருந்தார்.

இதையடுத்து, ஜனாதிபதியின் பதவி விலகல் தொடர்பிலான கடிதத்தை சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து, சபாநாயகர் ஏற்றுக்கொண்டார்.

இதன்படி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று முதல் பதவி விலகியதாக கருதி அவரது விலகல் கடிதத்தை ஏற்றுக்கொண்டதாக இன்று சபாநாயகர் நாட்டு மக்களுக்கு அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

கடந்த 13ம் தேதி நாட்டை விட்டு மாலத்தீவு நோக்கி தப்பிச் சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அரசமைப்புச் சட்டப் பிரிவு 37(1)ன் கீழ் நியமித்திருந்தார். வர்த்தமானி அறிவித்தல் மூலமாக ரணில் பதில் பதில் ஜனாதிபதி ஆவது நடைமுறைக்கு வந்தது.

ஆனால், கோட்டாபய பதவி விலகல் அதிகாரபூர்வமாக ஏற்கப்பட்டுள்ள நிலையில், அவரால் பதில் ஜனாதிபதியாக நியமனம் செய்யப்பட்டது முடிவுக்கு வந்து, அரசமைப்புச் சட்டப் பிரிவு 38 (1)(ஆ) பிரிவின் கீழ் மீண்டும் பதில் ஜனாதிபதி ஆகியுள்ளார் ரணில் விக்கிரமசிங்க. ஆனால், இம்முறை, வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அவர் பதவி நடைமுறைக்கு வரவில்லை. நாட்டின் முதன்மை நீதிபதி ஜெயந்த ஜெயசூர்யா ரணிலுக்கு பதில் ஜனாதிபதியாக தற்போது பதவிப் பிரமானம் செய்து வைத்துள்ளார்.

ஏற்கெனவே பதில் ஜனாதிபதியாகி இருந்த ரணில் மீண்டும் வெள்ளிக்கிழமை பதில் ஜனாதிபதியாக பதவியேற்றதற்கான அரசமைப்புச் சட்டக் காரணம் இதுதான்.

இந்த சூழ்நிலையில், ரணிலை இடைக்கால ஜனாதிபதி என்று அழைப்பது பொருந்தாது.

புதிய ஜனாதிபதி தேர்வு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பை எதிர்வரும் 20ம் தேதி நடத்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தீர்மானித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போதே சபாநாயகர் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக நாடாளுமன்ற ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதன்படி, நாடாளுமன்றத்தை நாளைய தினம் (ஜூலை 16) கூட்டுவதற்கு சபாநாயகர் தீர்மானித்துள்ளார்.

ஜனாதிபதி பதவிக்கான வேட்பு மனுக்களை ஏற்பது 19ம் தேதி நடக்கும். நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு 20ம் தேதி நடக்கும்.

ஜனநாயக மரபுக்குள் இந்த நடவடிக்கைகளை எந்தவித தடையும் இன்றி உடனடியாக முன்னெடுப்பதற்கு அனைவரது ஒத்துழைப்புக்களையும் எதிர்பார்த்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பதவிக்கு யார் போட்டியிடக்கூடும்?

கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டை விட்டு தப்பிச் சென்ற நிலையில், ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.

ரணில்.
Getty Images
ரணில்.

புதிய ஜனாதிபதிக்கான தேர்வு, எதிர்வரும் 20ம் தேதி நடத்தப்படவுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ள நிலையில், எதிர்வரும் 5 நாட்களுக்கு பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவே பதவி வகிப்பார்.

புதிய ஜனாதிபதி தேர்வுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் போட்டியிடக்கூடும். ஆனால், இது தொடர்பாக அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ-வும் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட எதிர்பார்த்துள்ளதாக அந்த கட்சி தெரிவிக்கிறது.

அடுத்த ஜனாதிபதி தேர்வு எப்படி நடக்கும்?

ஜனாதிபதி தேர்வு தொடர்பிலான தகவல்களை நாடாளுமன்றத்தின் சட்டவாக்க சேவைகள் மற்றும் தொடர்பாடல் பிரிவில் பணிப்பாளர் எச்.ஈ.ஜனகாந்த் சில்வா இன்று வெளியிட்டார்.

அரசியலமைப்பின் 38வது சரத்தின் (1) உப சரத்துக்கு அமைய ஜனாதிபதிப் பதவி வெற்றிடமாகும் சந்தர்ப்பத்தில் அரசியலமைப்பின் 40வது சரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமைக்கு அமைய பதவியை காலியாகவிட்டுச் செல்லும் ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவுறாது எஞ்சியுள்ள காலத்துக்கு மட்டும், நாடாளுமன்ற உறுப்பினர்களில் தகுதி உள்ள ஒருவர் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

இந்தத் தெரிவு 1981ஆம் ஆண்டு 2-ம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் (சிறப்பேற்பாடுகள்) சட்டத்தைப் பின்பற்றியதாக அமைந்திருக்கும்.

விசேடமாக இந்த நடைமுறை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தின் தலைமையில் முன்னெடுக்கப்பட வேண்டும். வாக்கெடுப்பின் போது சபாநாயகரும் வாக்களிப்பார். இந்த நடைமுகைளுக்காக நாடாளுமன்றம் மூன்று நாட்கள் கூடும்.

அதன்படி, சட்ட விதிகளுக்கு உட்பட்டதாக இந்தத் தேர்தலை நடத்துவதற்குப் பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

01. இதில் ஜனாதிபதி பதவி வெற்றிடமான பின்னர் இயன்றளவு விரைவாகவும், எந்த சூழ்நிலையிலும் பதவி காலியான தேதியிலிருந்து ஒரு மாதத்திற்குப் பிந்தாமலும் இந்தத் தெரிவு நடத்தப்படவேண்டும்.

02. இதற்கமைய இந்த வெற்றிடம் ஏற்பட்டு மூன்று நாட்களுக்குள்ளாகப் நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும். நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அத்தகைய கூட்டத்துக்கு என நிர்ணயிக்கப்படும் தேதியையும், நேரத்தையும் நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களுக்கு அறிவிக்க வேண்டும்.

03. நாடாளுமன்றம் கூடும்போது ஜனாதிபதி பதவியில் வெற்றிடம் ஒன்று ஏற்பட்டுள்ளது எனச் செயலாளர் நாயகம் நாடாளுமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும். இதற்கமைய புதிய ஜனாதிபதியை நியமிப்பதற்கான தேதியையும் நேரத்தையும் அவர் நிர்ணயிக்க வேண்டும். அந்தக் கூட்டத் தேதியிலிருந்து குறைந்தது 48 மணி நேரங்களுக்குப் பிறகு, ஏழு நாட்களுக்கு மிகாமல் ஜனாதிபதி தேர்வுக்கான தேதி இருக்க வேண்டும்.

04. நியமனம் செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட தேதியன்று நாடாளுமன்றம் கூடவேண்டும். நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவத்தாட்சி அலுவலராகவும் செயலாற்றுவார். ஜனாதிபதிப் பதவிக்கு தேர்வு செய்ய ஏதாவது ஓர் உறுப்பினர் பெயரை முன்மொழிய விரும்பும் ஒவ்வோர் உறுப்பினரும், அவர் முன்மொழிய விரும்பும் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஜனாதிபதி பதவியில் அவர் சேவை செய்ய விரும்புவார் எனக் கூறும் எழுத்துப் பூர்வ சம்மதத்தை அளிக்கவேண்டும். அவ்வாறு சம்மதம் தெரிவித்த உறுப்பினர்கள் அன்றைய தினம் நாடாளுமன்றம் வந்திருக்கவேண்டும்.

போராட்டக்காரர்கள் பிடியில் ஜனாதிபதி மாளிகை
Getty Images
போராட்டக்காரர்கள் பிடியில் ஜனாதிபதி மாளிகை

05. ஜனாதிபதி பதவிக்கு ஒருவர் பெயர் மட்டுமே முன்மொழியப்பட்டு, வழிமொழியப்பட்டிருந்தால் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதை செயலாளர் நாயகம் நாடாளுமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் முன்மொழியப்பட்டு, வழிமொழியப்பட்டு இருப்பின் வாக்கெடுப்பு நடத்துவதற்கான தேதியும், நேரமும் நாடாளுமன்றத்தினால் நிர்ணயிக்கப்பட வேண்டும். அத்தகைய தேதி நியமனங்களைப் பெற்றுக் கொள்வதற்கான நேரத்திலிருந்து நாற்பத்தெட்டு மணித்தியாலங்களுக்குப் பிந்தாத ஒரு தேதியாக இருக்க வேண்டும்.

06. வாக்கெடுப்பை நடத்துவதற்கென நிர்யணிக்கப்பட்ட தேதியன்று செயலாளர் நாயகமே தெரிவத்தாட்சி அலுவராகச் செயற்படுவதுடன், வாக்களிப்பு தொடங்குவதற்கு முன்னர் வெற்று வாக்குச்சீட்டுப் பெட்டியை உறுப்பினர்களுக்குக் காண்பித்து அவர்கள் முன்னிலையில் இலச்சினையிடல் வேண்டும். இதற்கமைய வாக்களிப்பு தொடங்கியவுடன் நாடாளுமன்ற செயலாளர் நாயகம், சபாநாயகர் உள்ளிட்ட ஒவ்வொரு உறுப்பினரினதும் பெயரையும் அழைத்தல் வேண்டும். அவ்வாறு அழைக்கப்படும் போது உறுப்பினர்கள் செயலாளர் நாயகத்தின் மேசைக்கு சென்று வாக்குச்சீட்டொன்றைப் பெற்று தமது வாக்குகளை அடையாளமிட வேண்டும். அதன் பின்னர் தமது வாக்குகளை அளிக்க வேண்டும்.

07. உறுப்பினர் ஒருவர் வாக்குச்சீட்டினை தற்செயலாகப் பழுதாக்கினால், அதனை அவர் தெரிவத்தாட்சி அலுவலரிடம் திருப்பிக் கொடுத்து, தெரிவத்தாட்சி அலுவலர் அத்தகைய தற்செயல் பற்றித் திருப்தியுற்றால் அவருக்கு வேறொரு வாக்குச்சீட்டைக் கொடுக்கலாம். பழுதாக்கப்பட்ட வாக்குச்சீட்டு தெரிவத்தாட்சி அலுவலரால் உடனடியாக அழிக்கப்படும். பெயர் கூப்பிடும்போது வாக்களிக்காத உறுப்பினர் யாராவது இருந்தால், அவரது பெயரை இரண்டாவது முறையாக அழைத்தல் வேண்டும். அவ்வாறு அழைக்கப்பட்ட பின்னரும் வாக்களிக்காதிருந்தால் அவர் வாக்களிக்காது ஒதுங்கியிருந்தவராகக் கருதப்படுவார்.

08. ஒவ்வோர் உறுப்பினருக்கும் ஒரு வாக்கு உண்டு. எந்த வேட்பாளருக்கு வாக்களிக்க ஒருவர் விரும்புகிறாரோ, அந்த வேட்பாளரின் பெயருக்கு எதிரேயுள்ள சதுரத்தில் '1' எனும் எண்ணை இடுதல் வேண்டும். பல வேட்பாளர்கள் காணப்படும் சந்தர்ப்பத்தில் விருப்பத் தெரிவுகளை வழங்க முடியும். இதற்கமைய போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கைக்கு அமைய பெயர்களுக்கு எதிரேயுள்ள சதுரங்களில் 2, 3,எனும் விருப்பத் தெரிவுகளை வழங்க முடியும்.

09. இவ்வாறு வாக்களித்த பின்னர் வாக்கு எண்ணும் பணி முன்னெடுக்கப்படும். எவரேனும் வேட்பாளர் வாக்குகள் எண்ணப்படும் இடத்தில் இருக்க விரும்பினால் அதற்கு வாய்ப்புக் கிடைக்கும் அல்லது அவரது பிரதிநிதியாக அங்கே இருக்க வேறொரு உறுப்பினரை நியமிக்க முடியும்.

10. அளிக்கப்பட்ட செல்லுபடியாகும் வாக்குகளுள் எண்ணிக்கையில் பாதிக்கும் கூடுதலான வாக்குகளை ஒரு வேட்பாளர் பெற்றிருந்தால், தெரிவத்தாட்சி அலுவலர் அந்த வேட்பாளர் ஜனாதிபதி பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதை உடனடியாக அறிவிக்க வேண்டும்.

11. அதே நேரம், வேட்பாளர் எவரும் அளிக்கப்பட்ட செல்லுபடியான வாக்குகளில் பாதிக்கும் மேல் பெறாவிட்டால், இரண்டாவது, மூன்றாவது விருப்பத் தெரிவுகள் சரிபார்க்கப்படும். இதில் குறைந்த வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் நீக்கப்பட்டு அவருக்கு வழங்கப்பட்ட இரண்டாவது விருப்பத் தெரிவு எண்ணப்படும்.

12. வாக்கு எண்ணுகையின் முடிவில் வேட்பாளர் எவருமே செல்லுபடியான வாக்குகளில் பாதிக்கும் மேல் வாக்குகளைப் பெறாவிட்டால், அந்த எண்ணிக்கையின்போது பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ள வேட்பாளர் ஜனாதிபதி பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதை தெரிவத்தாட்சி அலுவலர் நாடாளுமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும்.

13. அத்துடன், இரு வேட்பாளர்கள் அல்லது பலருக்கிடையிலான வாக்குகள் சரிசமமாக இருந்தால், திருவுளச்சீட்டு போடப்படும்.

https://www.youtube.com/watch?v=I4DMoQxjxqc

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+