இரட்டை இலை சின்னம் வழக்கு- தேர்தல் ஆணையம் அக் 13ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
இரட்டை இலை சின்னத்தை யாருக்கு வழங்குவது என்பது குறித்த விசாரணையை அக்டோபர் 13ஆம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது.
டெல்லி: இரட்டை இலை சின்னத்தை யாருக்கு வழங்குவது என்பது குறித்து தேர்தல் ஆணையத்தில் இன்று இறுதி விசாரணை நடைபெற்றது. ஓபிஎஸ், ஈபிஎஸ், தினகரன் தரப்பு வாதங்களை கேட்ட தேர்தல் ஆணையம் அக்டோபர் 13ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தது.
அதிமுகவின் வெற்றி சின்னமான இரட்டை இலைச்சின்னத்தைப் பெற ஈபிஎஸ், ஓபிஎஸ்,தினகரன் ஆகியோரின் தரப்பு தீவிரமாக போராடி வருகிறது. இதற்காக இரு அணிகளும் போட்டி போட்டுக்கொண்டு மூட்டை மூட்டையாக பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்தன.
அதிமுகவில் இரண்டு அணிகளாக பிரிந்து செயல்பட்ட எடப்பாடி, ஓபிஎஸ் அணிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் இணைந்தன. இதைனையடுத்து டிடிவி தினகரன் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை வரும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் முடிவு செய்யவேண்டுமென தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையம் கெடு விதித்தது.

சின்னம் யாருக்கு கிடைக்கும்
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று மாலை 3 மணிக்கு இறுதி விசாரணை நடத்த உள்ளது. இதனால் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இரு அணியினரும் ஆஜராகின்றனர்
இதற்காக எடப்பாடி, ஓபிஎஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி, சி.எஸ் வைத்தியநாதன் ஆஜராகியுள்ளனர். டி.டி.வி.தினகரன் அணி சார்பில் வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா ஆஜராகி வாதாடி வருகிறார்.

எதிர்பார்ப்பு அதிகரிப்பு
இரட்டை இலை சின்னத்தை மீட்கும் முயற்சியில் இரு அணிகளும் ஈடுபட்டுள்ளன. இதனால் அதிமுகவின் வெற்றி சின்னமான இரட்டை இலை யார் வசம் வரும் என்ற எதிர்பார்ப்பு அதிமுக தொண்டர்களிடையே அதிகரித்துள்ளது.

பெரும் பின்னடைவு
இரட்டை இலைச்சின்னம் யாருக்கு கிடைத்தாலும் எஞ்சிய ஒரு தரப்புக்கு பெரும் பின்னடைவாக இருக்கும். சின்னம் கிடைக்காவிட்டால் எஞ்சியுள்ள ஆதரவாளர்களும் ஓபிஎஸ், ஈபிஎஸ் பக்கம் சென்றுவிடுவார்கள் என சசிகலா தரப்பு அஞ்சுவதாக கூறப்படுகிறது.

தீர்மான நகலும் ஒப்படைப்பு
கடந்த செப்டம்பர் மாதம் 12ம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு நடந்தது. அதில் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் ரத்து செய்யப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பான தீர்மான நகலும் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் ஆணையம் ஒத்திவைப்பு
ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பினர் இன்றே வழக்கு விசாரணையை முடித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்று கோரினர். அதே நேரத்தில் தினகரன் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இந்த நிலையில் அணிகளின் தரப்பு வாதங்களைக் கேட்ட தேர்தல் ஆணைய அதிகாரிகள் விசாரணையை அக்டோபர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications