வருடம் 193 நாட்கள் மட்டுமே சுப்ரீம் கோர்ட் செயல்படுவதா.. விடுமுறை காலத்தை குறைக்க பொது நல வழக்கு!
டெல்லி: சுப்ரீம் கோர்ட்டின் விடுமுறை காலத்தை குறைக்க வேண்டும் என்று பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுபோன்ற வழக்கு தொடரப்பட்டுள்ளது இதுதான் முதல் முறையாகும்.
இந்தியா முழுக்க தீர்க்கப்படாமல் இருக்கும் வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. 3.3 கோடி அளவுக்கு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
இதில் சுப்ரீம் கோர்ட்டில் மட்டும் 60,000 அளவுக்கு நிலுவையில் உள்ளன. ஆனால், உச்சநீதிமன்றம் ஆண்டுக்கு 193 நாட்கள் மட்டுமே இயங்குகிறது. மற்ற நாட்கள் பல்வேறு விடுமுறை காலகட்டங்களால் கோர்ட்டுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

5 முறை விடுமுறை
ஆண்டுக்கு 5 முறை உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. கோடை கால விடுமுறை 45 நாட்கள், குளிர்காலத்தில் 15 நாட்கள், ஹோலிக்கு ஒரு வாரம், தசரா மற்றும் தீபாவளிக்கு தலா 5 நாட்கள் என விடுமுறை வழங்கப்படுகிறது. எனவே ஆண்டுக்கு 193 நாட்கள் மட்டுமே சுப்ரீம் கோர்ட் இயங்குகிறது. இந்த நிலையில், பாஜக செய்தித்தொடர்பாளரும் சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாயி பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

225 நாட்கள் தேவை
அந்த மனுவில், "நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 6 மணி நேரம் கோர்ட் நடைபெற வேண்டும், வருடத்திற்கு குறைந்தபட்சம் 225 நாட்கள், இயங்க வேண்டும். சட்ட கமிஷன் பரிந்துரை செய்துள்ள இந்த விஷயங்களை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

வேகமான நீதி தேவை
நாட்டு அரசியல் சாசனத்தின் 21வது பிரிவில், வேகமாக நீதி கிடைப்பது என்பது அடிப்படை உரிமை என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விடுமுறை காலத்தை குறைக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. நீண்ட கால விடுமுறை என்பது, பிரிட்டீஷ் காலத்தில், கொண்டுவரப்பட்ட நடைமுறையாகும். அவர்கள் சொந்த நாட்டுக்கு சென்று திரும்பும் அளவுக்கு இந்த விடுமுறை காலம் வழங்கப்பட்டிருந்தது.

முதல் முறை
காலணி ஆதிக்கம் முடிந்து 70 வருட காலம் ஆன பிறகும் பழைய நடைமுறை இப்போதும் தேவையில்லை என்பது வாதமாக உள்ளது. இதுபோன்ற ஒரு வழக்கு இப்போதுதான் முதல் முறையாக தொடரப்பட்டுள்ளது. இதனால், வழக்கு மீது சட்டத்துறை வட்டாரத்தில் கடும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications