முன்ஜாமீன் மனு தள்ளுபடி.. குஜராத் சமூக சேவகர் டீஸ்டா கைதாகிறார்
டெல்லி: நிதி மோசடி தொடர்பான வழக்கில், சமூக சேவகர் டீஸ்டா சேடல்வாடின் முன்ஜாமீன் மனுவை குஜராத் உயர்நீதி்மன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இதனால் அவரை போலீஸார் கைது செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட டீஸ்டா உள்ளிட்டோர் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவை விசாரித்த குஜராத் நீதிபதிகள் பரித்வாலா பெஞ்ச் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.
இந்த வழக்கு நிலவையின் காரணமாக டீஸ்டா உள்ளிட்டோரைக் கைது செய்ய முடியாத நிலை இருந்து வந்தது. தற்போது அவர்களைப் போலீஸார் கைது செய்யக் கூடிய வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.
என்ன பிரச்சினை?
கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது இந்து அமைப்புகள் முஸ்லீம்களுக்கு எதிராக ரத்த வெறித் தாக்குதலை நடத்தின. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
குல்பர்க் சொசைட்டி படுகொலை அதில் ஒன்று. பலரை குடும்பம் குடும்பமாக உயிரோடு தீவைத்து எரித்துக் கொன்றனர் வெறியர்கள். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு உதவுவதற்காக நிதி திரட்டப்பட்டது. அநத நிதியில் டீஸ்டாவும் அவருடன் இருந்த பிறரும் ரூ. 1.51 கோடி அளவுக்கு முறைகேடு செய்து விட்டதாக சர்ச்சை எழுந்தது.
இதையடுத்து குஜராத் குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். டீஸ்டா உள்ளிட்டோர் மோசடி செய்து விட்டதாக சொசைட்டியைச் சேர்ந்த 12 உறுப்பினர்கள் புகார் செய்ததன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
குல்பர்க் சொசைட்டியில் மியூசியம் அமைக்கப் போவதா கூறி டீஸ்டா நிதி திரட்டியதாகவும், ஆனால் அதை அதற்குப் பயன்படுத்தாமல் சொந்த நலனுக்காக பயன்படுத்தி விட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் தன் மீதான புகார்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று டீஸ்டா மறுத்திருந்தார்.
இந்த நிலையில்தான் 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் வழக்குப் பதிவானது. இதையடுத்து டீஸ்டா உள்ளிட்டோர் முன்ஜாமீன் கோரி மனு செய்தனர். அந்த மனுவை தற்போது நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால் டீஸ்டா கைதாகும் நிலை ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
