காங்கிரசுடன் கைகோர்த்து களம் காணும் சமாஜ்வாதி! ராஜ்நாத் சிங்கின் லக்னோ தொகுதி இந்த முறை யாருக்கு?
லக்னோ: லோக்சபா தேர்தலை பொறுத்த அளவில் உத்தரப் பிரதேசம் மிக முக்கியமானதாகும். எனவே, வழக்கம் போல இந்த முறையும் இம்மாநிலத்தை யார் கைப்பற்றுவது என்கிற போட்டி தீவிரமடைந்துள்ளது. இந்த செய்தி உ.பி தலைநகர் லக்னோ குறித்து விரிவாக அலசுகிறது.
லோக்சபா தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என நினைப்பவர்கள் உத்தரப் பிரதேசத்தை முழுமையாக வெற்றி கொள்ள வேண்டும். ஏனெனில் நாட்டில் அதிக லோக்சபா தொகுதிகளை கொண்டது உத்தரப் பிரதேசம்தான். மொத்தம் 80 தொகுதிகள் இருக்கின்றன. இந்த 8 தொகுதிகளில் மிக முக்கியமான தொகுதிகளில் லக்னோவும் ஒன்று. இந்த தொகுதியில் கடந்த 1952ம் ஆண்டிலிருந்து 2019 வரை 18 முறை தேர்தல் நடைபெற்றிருக்கிறது. இதில் 8 முறை காங்கிரசும், 8 முறை பாஜகவும் வெற்றி பெற்றிருக்கின்றன. எனவே இந்த தொகுதியை கைப்பற்ற இந்த முறையும் தீவிரமான முயற்சிகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டிருக்கின்றன.

தொகுதிக்கான பிரச்னை: லக்னோ உத்தரப் பிரதேசத்தின் தலைநகர் என்பதால் இந்த தொகுதிக்கு என நீண்ட நாள் கோரிக்கையாக ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. குறிப்பாக வேலைக்காக புலம் பெயர் தொழிலாளர்கள் ஏராளமானோர் லக்னோவில் குவிகின்றனர். அவர்களுக்கான வேலையும், தங்குமிடமும் பிரதான கோரிக்கையாக இருக்கின்றன. சாலை வசதி, போக்குவரத்து நெரிசல், லக்னோவிலிருந்து உ.பியின் உள் மாநிலங்களை எளிதாக இணைக்கும் வகையில் பேருந்து ரயில் வசதி, மருத்துவத்திற்காக வரும் மக்களுக்கு தங்குவதற்கான வசதி, பெண்களின் பாதுகாப்பு, சுகாதாரம், குழந்தைகளின் கல்வி, மக்கள் தொகைக்கு ஏற்ப பள்ளி, கல்லூரிகள் ஆகியவை தொகுதிக்கான முக்கியமான கோரிக்கையாக இருக்கிறது.
கடந்த 2 தேர்தல்கள்: 2014ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இந்த தொகுதியில் பாஜக vs காங்கிரஸ் vs பகுஜன் சமாஜ் கட்சி vs சமாஜ்வாதி vs ஆம் ஆத்மி என 5 முணை போட்டி நிலவியது. ஆனாலும் இதில் பாஜகவின் ராஜ்நாத்சிங் 54.27% வாக்குகளுடன் வெற்றி பெற்றார். காங்கிரஸ், பிஎஸ்பி, எஸ்பி, ஆம் ஆத்மி ஆகிய வேட்பாளர்கள் முறையே 27.89%, 6.23%, 5.49%, 4.01% என வாக்குகளை பெற்றிருந்தனர்.
2019 தேர்தல் முடிவுகள்: இதே ரிசல்ட்தான் 2019லும் பதிவானது. ஆனால் இந்த முறை பாஜக vs சமாஜ்வாதி கட்சி vs காங்கிரஸ் என மூன்று முனை போட்டிதான் நிலவியது. இதில் பாஜகவின் வாக்கு வங்கி கணிசமாக அதிகரித்து. அதாவது இரண்டாவது முறை போட்டியிட்ட ராஜ்நாத் சிங் 56.70% வாக்குகளை பெற்றிருந்தார். சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ் காட்சியின் வேட்பாளர்கள் முறையே 25.59%, 16.12% வாக்குகளை பெற்றிருக்கின்றனர்.
2024 வேட்பாளர்: இந்த ஆண்டும் லக்னோ தொகுதியில் 3 முனை போட்டி நிலவுகிறது. இந்த முறை பாஜகவிலிருந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மீண்டும் களமிறங்குகிறார். அதேபோல சமாஜ்வாதி கட்சியிலிருந்து ரவிதாஸ் மெஹ்ரோத்ரா களமிறக்கப்பட்டிருக்கிறார். இவர் சமாஜ்வாதி ஆட்சியில் அமைச்சராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். மறுபுறம் பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து சர்வார் மாலிக் களமிறக்கப்பட்டிருக்கிறார். இவர் மாயாவதிக்கு மிகவும் நெருக்கமானவர். கடந்த 2022ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் லக்னோ வடக்கு தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் தோல்வியடைந்தார்.
வெற்றி வாய்ப்பு: இந்த முறையும் லக்னோவை பாஜக தக்கவைக்கும் என்று தேர்தல் கருத்துகணிப்புகள் தெரிவிக்கின்றன. உத்தரப் பிரதேசத்தில் பாஜக கடந்த 2 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறது. எனவே, இந்த வெற்றி லோக்சபா தேர்தல் வெற்றிக்கும் கை கொடுக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால், இந்த முறை காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் சமாஜ்வாதி கட்சி இணைந்திருப்பதால் கடந்த முறையை விட இடந்த முறை ராஜ்நாத் சிங்குக்கு ஓட்டுகள் குறையும் என்றும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications