10 வயது சிறுமியை பலாத்காரம் செய்த ஊர்த் தலைவர்... கருணைக் கொலை செய்ய மிரட்டும் ஆப்கன் கிராமத்தார்
காபூல்: ஆப்கானிஸ்தானில் கிராமத் தலைவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 10 வயது சிறுமியை கருணைக் கொலை செய்யக் கூறி பெற்றோரை கிராமத்து மக்கள் மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான், குண்டுஷ் மாகாணத்தில் உள்ள அல்டிகும்பாட் என்ற கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர், அதே கிராமத்தைச் சேர்ந்த 45 வயது தலைவரால் சமீபத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அச்சிறுமி, சிகிச்சைக்குப் பின் தற்போது பெண்கள் பாதுகாப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டார். பின்னர், அச்சிறுமியை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க முடிவெடுக்கப்பட்டது.
ஆனால், சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதால் தங்களது கிராமத்திற்கு அவமானம் நேர்ந்து விட்டதாகக் கூறுகின்றனர் சிறுமி வசித்து வந்த கிராமத்து மக்கள். மேலும், அச்சிறுமியை கருணைக் கொலை செய்து விடும்படி அவர்கள் சிறுமியின் பெற்றோரை நிர்ப்பந்தித்துள்ளனர்.
இதனால், பயந்து போன அச்சிறுமியின் பெற்றோர், காப்பகத்திலிருந்த சிறுமியை அழைத்துக் கொண்டு ஆப்கானிஸ்தானின் வேறு பகுதிக்கு சென்று விட்டனர்.
இதற்கிடையே, தான் பாலியல் பலாத்காரம் செய்த சிறுமிக்கு வயது 10 இல்லை என்றும், அவருக்கு 17 வயதாகிறது என்றும் பலாத்காரம் செய்த தலைவர் கூறியுள்ளார். மேலும், பலாத்காரம் செய்த சிறுமியை தானே திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால், குற்றவாளிக்கு தங்களது மகளை திருமணம் செய்து வைக்க அச்சிறுமியின் பெற்றோர் மறுத்து விட்டனர். அதோடு தங்களது மகளுக்கு 10 வயது தான் ஆகிறது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களும் அச்சிறுமி வயது குறைந்தவர் என்றே மருத்துவ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். மேலும், அச்சிறுமி மிகக் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டிருந்ததாகவும், மிகவும் சிரமப் பட்டு சிகிச்சை அளித்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications