24 சதவீத பெண்கள் கணவனைவிட அதிகம் சம்பாதிக்கிறார்கள்: அமெரிக்க அரசின் ஆய்வு சொல்கிறது
வாஷிங்டன்: கணவனைவிட அதிகம் சம்பாதிக்கும் மனைவிகளின் எண்ணிக்கை 24 சதவீதமாக உள்ளதாக அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது. இந்த நிலை 1970களில் வெறும் 10 சதவீதமாக இருந்துள்ளது. அமெரிக்க அரசின் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வீட்டை கவனிப்பதில் தந்தைக்கு ஈடாக தாய்மார்களும் வளர்ந்து வருவது தெரியவந்துள்ளது.

முன்னேற்றம்
அமெரிக்காவில் தற்போது 24 சதவீத மனைவிமார்கள் தங்கள் கணவன்களைவிட அதிகம் சம்பாதிக்கிறார்கள். 1970ம் ஆண்டு கணவன்களைவிட மனைவிகள் அதிகம் சம்பாதிப்பது என்பது வெறும் 7 சதவீதமாகத்தான் இருந்துள்ளது. அந்த வகையில் இது ஓரளவுக்கு வளர்ச்சிதான்.

காரணம் இதுதான்
அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு ஈடான எண்ணிக்கையில் பெண்கள் பணியாற்றுகிறார்கள். பெண்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டுள்ளனர், உயர் கல்வி பயில்கின்றனர், பணி அனுபவத்திலும் ஆண்களுக்கு ஈடாக மாறியுள்ளனர். இதுதான் சம்பள அதிகரிப்புக்கு காரணமாக கூறப்படுகிறது.

ஊதியத்தில் பாலின பாகுபாடு
"ஒரே மாதிரி வேலை பார்த்தாலும், ஆண்களைவிட பெண்களுக்கு சம்பளம் குறைவாக கொடுக்கப்படுகிறது" என தெற்கு ஒரேஜான் பல்கலைக்கழக உதவி பேராசிரியர், எக்கோ பீல்ட்ஸ் குற்றம்சாட்டுகிறார். சில முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், பாலினம் சார்ந்து ஊதியம் நிர்ணயிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

எரிச்சலூட்டுகிறது
குழந்தைக்கு தாயாகவும், முழு நேர பணியாளராகவும் இருக்கும், ரேஜ்செக் ஜக்கிள்ஸ் என்ற பெண் கூறுகையில், "பெண்கள் அனைத்து வகையான பணிகளையும் செய்ய வல்லமை உள்ளவர்கள். அப்படியிருக்கும்போது ஒரே வேலைக்கு, பெண்களுக்கு வேறுமாதிரியும், ஆண்களுக்கு மற்றொரு மாதிரியும் சம்பளம் தருவது எரிச்சலூட்டுகிறது" என்றார்.

பெண்களுக்கு இழப்பு அதிகம்
அமெரிக்க அரசின் ஆய்வு அறிக்கைப்படி 65 வயதாகி பணி ஓய்வு பெறும்போது, ஆண்கள் பார்க்கும் அதேபோன்ற வேலையை செய்த பெண் ஒப்பீட்டளவில் 431000 அமெரிக்க டாலர்களை இழந்துவிடுகிறார் என்று கூறப்பட்டுள்ளது.

ஹாயாக இருக்கும் ஆண்கள்
பெண்கள் வேலைக்கு போய் சம்பாதிக்கும் சதவீதம் அதிகரிக்க தொடங்கியபிறகு, வீட்டிலேயே சோம்பி கிடக்கும் ஆண்கள் எண்ணிக்கை கணிசமாக உயரத்தொடங்கியுள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கை எச்சரிக்கை மணி அடிக்கிறது. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் வீட்டில் உட்கார்ந்து காலாட்டிக்கொண்டிருக்கும் தந்தைமார்கள் எண்ணிக்கை, இரட்டிப்பாகியுள்ளதாம்.












Click it and Unblock the Notifications