தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவு.. 2022 இல் மூன்றாவது முறை!
தைபே: தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நள்ளிரவு 1.41 மணிக்கு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகியுள்ளது. இந்த ஆண்டில் 3 நிலநடுக்கங்களால் தைவானில் மக்கள் அச்சமடைந்துள்ளார்கள்.
தைவான் தலைநகர் தைபேயில் இருந்து 182 கி.மீ தெற்கே நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 15 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கட்டடங்கள் குலுங்கின. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 5.7 என பதிவாகியுள்ளது. இரண்டாவது முறையாக ஏற்பட்டதுதான் சக்திவாய்ந்த நிலநடுக்கமாக பதிவாகியுள்ளது.

நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகளை விட்டு அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்தனர். இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு கிட்டதட்ட முக்கால் மணி நேரம் கழித்து கடுமையான அதிர்வுகளை உணர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுவரை உயிர்சேதம் குறித்தோ பொருட் சேதம் குறித்தோ எந்த தகவலும் கிடைக்கவில்லை. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. கடந்த 3 மாதங்களாக தைவானில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் தைவானின் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள ஹூயலியென் நகரத்தின் கிழக்கே 56 கி.மீ தூரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் நிலப்பரப்பிலிருந்து 19 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

19 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததால் கட்டடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் 20 வினாடிகள் நீடித்திருந்தன. அது போல் கடந்த பிப்ரவரி மாதம் ஹுவாலியன் கவுண்டி என்ற இடத்தில் நள்ளிரவு 12.45 மணிக்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.4 ஆக பதிவாகி இருந்தது.
இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை. நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டு இருந்ததாக சீன நில நடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமும் தைவானில் 5.0 ரிக்டர் அளவில் நில அதிர்வு உணரப்பட்டது. 2018 ஆம் ஆண்டு ஹூயலியென் நகரில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 17 பேர் உயிரிழந்தனர். 300 பேர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications