மனைவியை கர்ப்பமாக்க.. தந்தையின் விந்தணுவை பயன்படுத்திய கணவர்! பின்னணியில் ஷாக் காரணம்
லண்டன்: இங்கிலாந்தில் குழந்தை பேறு பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர், ஐவிஎஃப் சிகிச்சைக்கு பணம் இல்லாததால், தனது தந்தையின் விந்தணுவை பயன்படுத்தி மனைவியை கர்ப்பமாக்கியுள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாறி வரும் வாழ்வியல் சூழல்கள், அதிகரிக்கும் நெருக்கடி, பரவும் நோய்கள் என தற்போதைய காலத்தில் குழந்தைகள் பிறப்பு விகிதம் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. உலக மக்கள் தொகையில் முதல் இடத்தில் இருந்த சீனா, இந்த பிரச்னைகளால் தற்போது பின்னுக்கு தள்ளப்பட்டிருக்கிறது. அதேபோல, ரஷ்யாவிலும் குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாக சரிந்து வருகிறது. பிரிட்டனிலும் இந்த பிரச்னை தலைதூக்க தொடங்கியுள்ளது.

ஆனால், மறுபுறம் இந்த பிரச்னைகளை பயன்படுத்தி மகப்பேறு மருத்துவமனைகள், ஐவிஎஃப் சென்டர்கள் கொள்ளை லாபம் பார்த்து வருகின்றன. பெருநகரங்களில் உள்ள சிறிய ஐவிஎஃப் மருத்துவமனைகளில் கூட சாதாரண ஆலோசனைக்கே சில ஆயிரம் கணக்கில் பணம் பிடுங்கப்படுகிறது. இந்தியாவில் இப்படியெனில் இங்கிலாந்தில் சொல்லவா வேண்டும்? அங்கு இதைவிட அதிக அளவில் பணம் பிடுங்கப்படுகிறது.
எனவே இந்த சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாத நபர் ஒருவர், தனது மனைவியை கர்ப்பமாக்க, தனது தந்தையின் விந்தணுவை பயன்படுத்தியுள்ளார். அதாவது, இங்கிலாந்தின் தெற்கு யார்க்ஷயர் பகுதியில் PQ(பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) எனும் நபர் ஒருவர் வசித்து வந்திருக்கிறார். இவர் சமீபத்தில் JK எனும் பெண்ணை திருமணம் செய்திருக்கிறார். இவர்களுக்கு D எனும் குழந்தை பிறந்திருக்கிறது. சமீபத்தில் தெற்கு யார்க்ஷயர் பகுதியின் நகராட்சி நிர்வாகமான பார்ன்ஸ்லி மெட்ரோபாலிட்டன் போரோ கவுன்சில் கவனத்திற்கு, குழந்தையின் தந்தை குறித்த சந்தேகம் எழுந்திருக்கிறது.
எனவே நகராட்சி கவுன்சில் உயர் நீதிமன்றத்தை நாடி D எனும் குழந்தையின் உண்மையான தந்தையை கண்டறிய டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்று வழக்கு தொடுத்திருந்தது. வழக்கு விசாரணையில் தனது தந்தையின் விந்தணுவை பயன்படுத்தியதை PQ ஒப்புக்கொண்டிருக்கிறார். அதாவது மனைவியை கர்ப்பமாக்க வேறு ஒருவரின் விந்தணுவை வாங்க வேண்டும். அதற்கு பெருமளவில் தொகை செலவாகும். எனவே, அந்த தொகை இல்லாததால் தனது தந்தையின் விந்தணுவுடன், தனது விந்தணுவையும் கலந்து மனைவியின் கருமுட்டைக்குள் செலுத்தியுள்ளார். இப்படித்தான் D எனும் குழந்தை பிறந்திருக்கிறது.
வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம். குழந்தையின் உண்மையான தந்தை யார் என்பதை கண்டறிய டிஎன்ஏ சோதனை நடத்த வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளது. இந்த வழக்கை பொறுத்த வரை, குழந்தையின் தந்தை யார் என கேட்டு நகராட்சி கவுன்சில்தான் மனு தாக்கல் செய்திருக்கிறது. இது நகராட்சி கவுன்சிலுக்கு தேவையில்லாத வேலை. குழந்தையின் பெற்றோர்கள் வழக்கு தொடுத்திருந்தால், டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தலாம். மற்றபடி கவுன்சிலின் பேச்சை கேட்டு உத்தரவிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
ஒருபுறம் பிறப்பு விகிதம் சரிந்துக்கொண்டே போவதும், இதனை சரி கட்ட அரசு முயற்சி எடுக்காமல் தனியார் கிளினிக்குகள் கொள்ளை லாபம் பார்ப்பதும் தொடர்ந்து வரும் நிலையில், மனைவியை கர்ப்பமாக்க தனது தந்தையின் விந்தணுவை ஒருவர் பயன்படுத்தியுள்ளது பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications