“திமுகவுடன் கூட்டணியா? ஒரே பொய்யை திரும்பத் திரும்ப சொல்கிறார்கள்!” டென்ஷனான அதிமுக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக, திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயன்றது என்று தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் அதிமுக கொறடா அக்ரிகிருஷ்ண மூர்த்தி இந்த விமர்சனத்தை மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்திருக்கும் அறிக்கையில், "'ஒரே பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகிவிடும்' என்ற தத்துவத்தை கடைபிடித்தவன் 'கோயபல்ஸ்'.

AIADMK

வேதனைக்குரிய செயல்

தமிழக அரசியலிலும், அகில இந்திய அரசியலிலும் பல்வேறு காலக்கட்டங்களில் ஒருசில அரசியல்வாதிகள் கோயபல்ஸ் வேடம் பூண்டு, அவர்கள் முயற்சியில் தோல்வியும் கண்டதுண்டு. இன்றைய சூழ்நிலையில், தமிழக அரசியல் வானில் பல கோயபல்ஸ்கள் வட்டமிட்டு வருகின்றனர். அவர்கள் நம்முடைய இயக்கத்தில் இதுநாள்வரை சார்ந்திருந்தனர் என்பதுதான் வேதனைக்குரியதாகும்.

சோதனை காலம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவிக்கப்பட்ட பின்பு, நம்மையெல்லாம் ஆளாக்கிய 'பொன்மனச் செம்மல்' புரட்சித் தலைவர் அவர்களும், அவருக்குப் பின்னால் நம்மைக் காத்து நின்ற இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களும், பல்வேறு சோதனைகளையும், தேர்தல் களத்தில் பின்னடைவுகளையும் சந்தித்துள்ளனர். அப்போதும்கூட இந்த இயக்கத்தில் இருந்து பலர் வெளியேறியதுண்டு.

எந்த கவலையும் இல்லை

ஆனால், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு சோதனை ஏற்படும்போதெல்லாம், 'இனிமேல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிர்காலமே இல்லை என்று தாங்களாகவே முடிவெடுத்துவிட்டு, சிலர் ஆளுங்கட்சியில் அடைக்கலம் தேடி ஓடுகிறார்கள். இதுநாள்வரை இந்த இயக்கத்தால் அனுபவித்த தங்களுடைய சுகபோக வாழ்விற்கு பங்கம் வந்துவிடக்கூடாது என்பதற்காக, அவர்கள் யாரிடம் போய் கையேந்தி நின்றாலும் உண்மையான ஒன்றரை கோடி அஇஅதிமுக தொண்டர்களுக்கு எந்த கவலையும் இல்லை.

சென்ற இடத்தில் தற்போது இவர்கள் ஏற்றுக்கொண்டுள்ள தலைமைக்கு நாமாவளி பாடுவது பற்றியும் கவலையில்லை. எங்களைத் தூற்றுவதால் உங்களுக்கொரு வாழ்வு கிடைக்கிறது என்று சொன்னால், 'வாழ்க வசவாளர்கள்' என்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் சொற்களையே அவர்களுக்கு காணிக்கையாக்குகிறேன்.

திமுக-வோடு சேர்ந்து ஆட்சி

சென்ற இடத்தில் மரியாதை கிடைக்க வேண்டும்; மதிப்பு உயர வேண்டும் என்பதற்காக, இல்லாத ஒன்றை கழகத் தொண்டன் எவனும் நினைத்துப் பார்க்காத ஒன்றை, புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித் தலைவி வழியில் தீய சக்திகளை ஒழிக்க அல்லும் பகலும் பாடுபட்டு வரும், எங்கள் கழகப் பொதுச் செயலாளர் 'புரட்சித் தமிழர்' அண்ணன் எடப்பாடியார் அவர்களும், ஒன்றரை கோடித் தொண்டர்களும் நினைக்காத ஒன்றை; திமுக-வோடு சேர்ந்து ஆட்சி அமைக்க, எங்கள் கழகப் பொதுச் செயலாளர் அவர்கள் முயன்றதாக இந்த மகானுபாவர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

திட்டமிட்ட பொய்

'ஒரே பொய்யை திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மையாகிவிடும்' என்று செயல்பட்ட கோயபல்ஸ் என்றோ மறைந்துவிட்டான். ஆனால், அவனை நினைவுபடுத்துவதற்கென்றே பல கோயபல்ஸ்கள் இப்போது நம்மிடம் இருந்தே புறப்பட்டிருப்பது எண்ணிப் பார்க்க முடியாத ஒன்றாகும். இவர்கள் அனைவரும் இந்தப் பேரியக்கத்தைக் காப்பதில் உறுதுணையாக இருப்பார்கள் என்று நம்பித்தான் இவர்களோடு இதுநாள்வரை பயணித்தோம்.

ஆனால், தங்கள் சுயநலத்திற்காக இயக்கத்தைக் காட்டிக் கொடுப்பது மட்டுமல்லாமல், மனசாட்சிக்கு விரோதமாக அபாண்டமானதொரு குற்றச்சாட்டை எங்கள் கழகப் பொதுச் செயலாளர் மீது சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தீர்மானம் நிறைவேற்றம்

நடந்து முடிந்த தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 47 பேர் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு, அனைவரும் ஒன்றுகூடி கழகப் பொதுச் செயலாளர் அவர்களை சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுத்து தீர்மானம் நிறைவேற்றி கையெழுத்திட்டோம்.

அன்றில் இருந்து, 25 பேர் ஒன்றுகூடி மைனாரிட்டி த.வெ.க. அரசுக்கு ஆதரவாக வாக்களித்த நாள்வரை, இவர்கள் யாரிடமாவது திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நாம் ஆட்சி அமைக்க முயற்சிக்கலாம் என்று கழகப் பொதுச் செயலாளர் தெரிவித்தார் எனக் கூறமுடியுமா?

விசுவாசமில்லை

இல்லாத ஒரு குற்றச்சாட்டை நம் இயக்கத்தின்மீது சுமத்திவிட்டுச் சென்று, கொறடா உத்தரவை மீறி வாக்களித்தவர்கள் திரும்ப வந்து வருத்தம் தெரிவித்து கடிதம் கொடுத்தபோது, கழகப் பொதுச் செயலாளர் 'புரட்சித் தமிழர்' அண்ணன் எடப்பாடியார் அவர்கள் மீது சுமத்திய பழி தவறு என்று உணரவில்லையா?

இப்போது, தங்களின் நல்வாழ்விற்காக சொன்ன ஒரே பொய்யையே திரும்பத் திரும்பச் சொல்லி கழகத் தொண்டர்களின் நெஞ்சில் நஞ்சை விதைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. வாழவைத்த இந்த இயக்கத்திற்கு விசுவாசமில்லாமல் , தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் மாற்றுக் கட்சியை நோக்கி ஓடுபவர்களுக்கு தமிழக மக்களும், கழகத் தோழர்களும் நேரம் வரும்போது தக்க பாடம் புகட்டுவார்கள்.

இந்த இயக்கத்தில் இருந்து ஓடிப்போக வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு செயல்படுபவர்களை தடுக்க முடியாது என்றாலும், பொய்யை பரப்பி ஆகாயத்தில் கோட்டை கட்ட முயற்சிப்பவர்களின் எண்ணம் கானல் நீராகத்தான் போகும்." என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+