தவெக ஆட்சியை கவிழ்க்க எம்எல்ஏவிடம் பேரம்! அதிமுக பிரமுகரும் சிக்கினார்! வெளியான பரபர தகவல்!
சென்னை: விஜய் ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், அதிமுக பிரமுகரும், நாடார் பாதுகாப்பு பேரவைத் தலைவருமான சீனிவாசன் என்பவரும், குமரியை சேர்ந்த செல்வின் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சீனிவாசன் சுபாஷ் பண்ணையாரின் கூட்டாளியாக இருந்து வருவதும், இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ இளையராஜா அளித்த புகாரின் பேரில், யூடியூபரும், கருத்துக்கணிப்பு வெளியிடுபவருமான திருநாவுக்கரசு மற்றும் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களான ரமேஷ், கார்த்திக் உள்பட மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

நாடார் பாதுகாப்பு பேரவைத் தலைவர்
செந்தில் பாலாஜியையும் பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களில் அதிமுக பிரமுகரும், நாடார் பாதுகாப்பு பேரவைத் தலைவருமான சீனிவாசன் என்பவரும் ஒருவர் என தகவல் வெளிவந்துள்ளது. யூடியூபர் திருநாவுக்கரசு உள்ளிட்டோருடன் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், சீனிவாசனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்து இருக்கிறது.
இதையடுத்து இன்று காலையில் சென்னையில் தங்கியிருந்த சீனிவாசனை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்தனர். அவருடன் இருந்த குமரியை சேர்ந்த செல்வின் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் திருநாவுக்கரசு மற்றும் நரேஷ் உடன் கூட்டு சதியில் ஈடுபட்டு இவரும் குதிரை பேரத்தில் ஈடுபட்டது தெரியவந்து இருக்கிறது. இதையடுத்து போலீசார் அவர்களை மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து சென்றனர்.
யார் இந்த சீனிவாசன்?
நாடார் பாதுகாப்புப் பேரவைத் தலைவராக இருந்து வரும் சீனிவாசன், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளார். தொடர்ந்து அதிமுகவின் பிரமுகராக இருந்து வரும் இவர் இந்த பேரத்தில் ஈடுபட்டது தெரியவந்திருக்கிறது. இவர் சுபாஷ் பண்ணையாரின் கூட்டாளியாக இருந்து வருகிறார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.
இவருடன் கைதான சதீஷ் என்பவர் குமரியை சேர்ந்தவர். இவர் சென்னை பள்ளிக்கரணை பகுதியில் வசித்து வந்துள்ளார். இவர் கட்டப்பஞ்சாயத்து செய்து வந்ததாகவும் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது.














Click it and Unblock the Notifications