மூளையில் 38 ஒட்டுண்ணிகள்.. இந்தியாவில் பிரிட்டன் பெண்ணுக்கு அதிர்ச்சி.. 11 ஆண்டுகள் நரக வேதனை
லண்டன்: பிரிட்டனை சேர்ந்த 42 வயதான பெண் ஒருவர் இந்தியாவை சுற்றிப் பார்க்க வந்துள்ளார். ஆனால், அந்த பயணம் அவரது வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது. இந்தியப் பயணத்தில் அவர் செய்த ஒரு சிறு தவறால் மூளையில் ஒட்டுண்ணி பரவியிருக்கிறது. இதில் இருந்து அவர் மீண்டு வரவே சுமார் 11 ஆண்டுகள் அவர் சிகிச்சை பெற வேண்டி இருந்திருக்கிறது.
இங்கிலாந்தைச் சேர்ந்த 42 வயதான லோரி டென்மன் என்ற பெண்ணுக்கு ஏற்பட்ட ஒரு விசித்திரமான உடல்நலப் பாதிப்பு, ஒட்டுமொத்த மருத்துவ உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர் ஒரு உணவகத்தின் டாய்லெட்டை பயன்படுத்தியபோது, அவரது உடலிலிருந்து ஒரு மீட்டர் நீளமுள்ள நாடாப்புழு வெளியேறியது.

வலிப்பு
இதனால் பதறிப்போன அவர் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். முதலில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என்றே சொல்லியுள்ளனர். இதனால் அவரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், காலப்போக்கில் அவரது உடல்நிலை மோசமடைந்தது. 2011ல ஆம் ஆண்டில் அவருக்கு முதல் முறையாக வலிப்பு நோய் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விரிவான மருத்துவப் பரிசோதனையில், அவரது மூளையில் 38 ஒட்டுண்ணிகள் லார்வா வடிவில் குடியேறியிருப்பது கண்டறியப்பட்டது. இந்த பாதிப்பிற்கு 'நியூரோசிஸ்டிசெர்கோசிஸ்' (Neurocysticercosis) என்று பெயர். அவருக்கு மோசமான பாதிப்பு இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.
மருத்துவர்கள்
லோரி கடந்த 2007ல் மூன்று மாத பயணமாக இந்தியாவிற்கு வந்துள்ளார். அந்தப் பயணத்தின் போதுதான் அவருக்கு இந்த தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் கருதுகின்றனர். அவர் இந்தியா வந்தபோது வயிற்றுப்போக்கு அல்லது புட் பாய்சனிங்கை தவிர்க்க இறைச்சியைத் தவிர்த்துள்ளார். இருப்பினும், நாடாப்புழுவின் முட்டைகள் இருக்கும் பன்றி இறைச்சியை அவர் அறியாமல் சாப்பிட்டுள்ளார். இதுவே ஒட்டுண்ணித் தொற்றுக்குக் காரணமாக அமைந்தது. இதனால் அவரது மூளையில் 38 ஒட்டுண்ணிகள் உருவாகி, கடுமையான தலைவலி, வலிப்பு மற்றும் மனநலப் பாதிப்புகளைக் கூட ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுக் கணக்கில் அவர் இதனால் அவதிப்பட்டார்.
தனது மூளையில் 38 ஒட்டுண்ணிகள் இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தபோது லோரிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்துகள் மற்றும் ஸ்டெராய்டுகள் மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், அது பலன் தரவில்லை. ஸ்கேன் எடுத்து பார்த்த போது ஒட்டுண்ணிகளைச் சுற்றி மூளையில் கடுமையான வீக்கம் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அவரது அறிகுறிகள் மோசமானது.
12 ஆண்டு சிகிச்சை
இந்த பாதிப்பால் லேரி தனது வேலையை இழந்து, தந்தையுடன் தங்கி சிகிச்சை பெற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார்.. அப்போது அதீத பயம், சித்தப்பிரமை, மனநோய், கவலை உள்ளிட்ட பல மனநலப் பிரச்சினைகளும் அவருக்கு ஏற்பட்டது. நரம்பியல் மனநல மருத்துவமனையில் ஆறு மாதங்கள் தீவிர சிகிச்சை பெற வேண்டியிருந்தது. பல வருட சிகிச்சைக்கு பிறகு, 2022ல் தான் அவர் இந்த பாதிப்பில் இருந்து முழுமையாகக் குணமடைந்தார்.
நியூரோசிஸ்டிசெர்கோசிஸ்
நியூரோசிஸ்டிசெர்கோசிஸ் என்பது எளிதில் தடுக்கக்கூடிய ஒரு ஒட்டுண்ணித் தொற்றாகும். இது பன்றி நாடாப்புழுவான 'டீனியா சோலியம்' மூலம் மத்திய நரம்பு மண்டலத்தைத் தாக்கும் தீவிர பாதிப்பு ஆகும். உலகம் முழுவதும் ஏற்படும் வலிப்பு நோய்களுக்கு இது ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. இந்த நாடாப்புழுவின் லார்வாக்கள் ரத்த ஓட்டத்தின் வழியாக மூளையைச் சென்றடைந்து, அங்கு ஒட்டி கொள்கிறது.
அறிகுறிகள்
இவை முதலில் குடலில் தங்குவதால் ஏற்படும் தொடக்கத்தில் வயிற்று வலி ஏற்பட்டு, மலத்தில் நாடா புழு வெளியேறும். அப்போதே சரியாகக் கவனித்து சிகிச்சை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அந்த லார்வாக்கள் உடலின் தசை, தோல், கண்கள் மற்றும் மத்திய நரம்பு மண்டலத்தில் பரவி நியூரோசிஸ்டிசெர்கோசிஸ் நோயாக மாறுகின்றன.
முறையாகச் சமைக்கப்படாத பன்றி இறைச்சி, சுத்தப்படுத்தப்படாத நீர் மூலம் இவை பரவுகிறது. மூளைக்கு எவ்வளவு ஒட்டுண்ணி செல்கின்றன.. அவை எந்த மாதிரியான கட்டியை உருவாக்குகின்றன என்பதைப் பொறுத்தே பாதிப்பு இருக்கும். இவை முதலில் பல மாதங்கள் அல்லது வருடங்கள் வரை எந்த அறிகுறியும் தெரியாமல் இருக்கலாம். ஆனால், பாதிப்பு தீவிரமடையும்போது கடுமையான வலிப்பு, தலைவலி, நினைவாற்றல் குறைபாடு ஏற்படும்.














Click it and Unblock the Notifications