லஞ்சம் பெற்றுக்கொண்டு அரசு வழக்கறிஞர் பணி நியமனம்? தவெக வக்கீல் சென்னை ஐகோர்ட்டில் மனு
சென்னை: ரூ.5 முதல் 30 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு அரசு வழக்கறிஞர்களை நியமனம் செய்வதாக தவெக விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் ஞானசௌந்தரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தனது ஆட்சியில் லஞ்சம், ஊழல், விதிமீறல் ஆகியவற்றை அனுமதிக்க மாட்டேன் என்று கட்சித் தலைவர் விஜய் கூறிவரும் நிலையில், சட்டத்துறை செயலாளர், மாவட்ட செயலாளர், பொதுச் செயலாளர் ஆனந்த் ஆகியோர் அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர் என தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில், தமிழ்நாடு முழுவதும் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அரசு வழக்கறிஞர் பதவிகளை பெற தவெகவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் போட்டி போட்டு வருகின்றனர்.
அதோடு, பலரும், தவெக நிர்வாகிகளிடம் லட்சக் கணக்கில் பணம் கொடுத்து அரசு வழக்கறிஞர் பதவிகளைப் பெற முயல்வதாக கூறப்படுகிறது. தவெக பொதுச் செயலாளர் அமைச்சர் என். ஆனந்த் பரிந்துரையிலேயே வழக்கறிஞர் நியமனம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், ரூ.5 முதல் 30 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு அரசு வழக்கறிஞர்களை நியமனம் செய்வதாக தவெக விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் ஞானசௌந்தரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவரது மனுவில், "பட்டியலின நடுத்தர வகுப்பைச் சேர்ந்த நான், தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் அறிவுறுத்தலின் பேரில் மகளிர் நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பணிக்கும், மாவட்ட முதன்மை மற்றும் சார்பு நீதிமன்றங்களில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பணிக்கும் விண்ணப்பித்திருந்தேன்.
தமிழக அரசு கடந்த ஜூன் 5ஆம் வெளியிட்ட அறிவிப்பில், வழக்கறிஞர்கள் பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 29 மாலை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அன்றைய தினம் மாலையே நியமனப்பட்டியல் என்று ஒரு தகவல் வாட்ஸ் அப்பில் பரவியது.
இதுகுறித்து மாவட்ட செயலாளரிடம் நான் விசாரித்த போது, இதுதான் இறுதிப் பட்டியல் என்று அவர் கூறினார். ஒரு அரசு வழக்கறிஞர் நியமனத்துக்கு 5 லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றுள்ளனர். பிற கட்சிகளை சேர்ந்த வழக்கறிஞர்களை, லஞ்சம் பெற்றுக்கொண்டு அரசு வழக்கறிஞர்களாக நியமித்துள்ளனர்.
தனது ஆட்சியில் லஞ்சம், ஊழல், விதிமீறல் ஆகியவற்றை அனுமதிக்க மாட்டேன் என்று கட்சி தலைவர் விஜய் கூறிவரும் நிலையில், அமைச்சரும் பொதுச் செயலாளருமான புஸ்ஸி ஆனந்த், மாவட்டச் செயலாளர், சட்டத்துறை செயலாளர் ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் ஆனந்த் பரிந்துரையிலேயே வழக்கறிஞர் நியமனம் செய்யப்படுகிறது.
எனவே, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு முதல்வர் விஜய்க்கு இருக்கிறது. எனவே அரசு வழக்கறிஞர் நியமனத்தில் தனக்கு வாய்ப்பளித்து நியமனங்களை மேற்கொள்ள உத்தரவிடவும், அதுவரை அறிவிப்பாணைக்கு தடை விதிக்க வேண்டும்" என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
லஞ்சம், ஊழல், விதிமீறலை அனுமதிக்க மாட்டேன் என தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் கூறி வரும் நிலையில் வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.













Click it and Unblock the Notifications