குதிரை பேரம், நம்பர் 1 குற்றவாளியே முதல்வர் விஜய் தான்.. திருவல்லிக்கேணி கைது குறித்து திமுக கேள்வி
சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் பேச்சின் அடிப்படையில் நம்பர் ஒன் குற்றவாளி தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் அவர்கள் தான்.. ஏன் இதுவரை இந்த விவகாரத்தில் மௌனமாக இருக்கிறார்கள். இதை எல்லாம் மூடி மறைப்பதற்காக திராவிட முன்னேற்ற கழகத்தின் மீது சேற்றை வாரி வீசுகிறார்கள்" இவ்வாறு திமுக முன்னாள் எம்.எல்.ஏ பரந்தாமன் கூறியுள்ளார்.
சென்னையில் திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ பரந்தாமன் செய்தியாளர்களை சந்தித்து திமுக மீது தவெக வைத்துள்ள குதிரை பேர புகார் தொடர்பாக விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "கரூரிலேயே இருக்கக்கூடி எம்ஆர் விஜயபாஸ்கர் 30ம் தேதி ராஜினாமா செய்கிறார். 29ம் தேதி ஒரு சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா செய்கிறார்.. இதற்கு முன்பு 3 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்கிறார்கள்.

இதற்கு எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக, தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில், இன்னும் சொல்லப்போனால், இந்திய அரசியல் உலகில், மிக நம்பிக்கைக்கு பாத்திரமான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் அண்ணன் வைகோ அவர்கள் வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். நான் ஜூன் 27ம் தேதி முதல்வரை சந்தித்தேன்..
நாங்கள் இருவரும் தனியாக ஒரு மணி நேரம் பேசினோம்.. திராவிட முன்னேற்ற கழகத்தின் உதயசூரியன் சின்னத்தில் நின்று வென்ற அந்த இரண்டு பேரை ராஜினாமா செய்ய சொல்லுங்கள்.. தேர்தல் வரும்.. நான் வந்து பிரச்சாரம் செய்து வெற்றி பெற செய்கிறேன் என்று முதல்வர் விஜய் சொன்னதாக வைகோ அவர்கள் பகிரங்கமாக சொல்லியிருக்கிறார்.
இது என்ன குதிரை பேரம்.. இதற்கு விலை போனது என்ன.. எவ்வளவு பணம் கைமாறியது.. இதனை எல்லாம் தவெக கட்சியில் இருப்பவர்கள் மறந்துவிட்டு, இன்று திராவிட முன்னேற்ற கழகத்தை பார்த்து குற்றம்சாட்டுகிறார்கள்.. ஜூன் 29ம் தேதி தவெகவினுடைய ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாக சொல்கிறார்கள்.. ஆனால் காவல்துறையின் செய்திக்குறிப்பில் தொலைப்பேசி தொடர்புகள் எந்த தேதியில் ஏற்பட்டது என்பதை இதுநாள் வரை சொல்லவில்லை.. ஆனால் 29ம் தேதி புகார் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
இந்த புகாரை பெறுவதற்கு முன்பே, திராவிட முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிற நபர்களுடைய வீடுகளுக்கு சென்று ரெய்டு செய்ததாக சொல்கிறார்கள். புகார் வாங்குவதற்கு முன்பே எப்படி இவர்கள் ரெய்டு போகிறார்கள்.. எங்கிருந்து இவர்களுக்கு தகவல் கிடைத்தது.. 29ம் தேதி புகாரை வாங்கி அன்றே திருவல்லிக்கேணியில் கைது செய்கிறீர்கள் என்று சொன்னால், வைகோ அவர்கள் சொன்ன குற்றச்சாட்டு பற்றி நாங்கள் திராவிட முன்னேற்ற கழகம் கொடுத்த புகார் மனுவை இதுவரை லஞ்ச ஒழிப்புத்துறை இதுவரை வைகோவை விசாரிக்கவில்லை..
இப்போது திராவிட முன்னேற்றக்கழகம் கொடுத்திருக்கின்ற புகாரின் அடிப்படையில் , வைகோ அவர்களின் பேச்சின் அடிப்படையில் நம்பர் ஒன் குற்றவாளி தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் தான். ஏன் இதுவரை இந்த விவகாரத்தில் மௌனமாக இருக்கிறார்கள். இதை எல்லாம் மூடி மறைப்பதற்காக திராவிட முன்னேற்ற கழகத்தின் மீது சேற்றை வாரி வீசுகிறார்கள்" இவ்வாறு திமுக முன்னாள் எம்.எல்.ஏ பரந்தாமன் கூறியுள்ளார்.














Click it and Unblock the Notifications