திருப்பூரில் மூட்டை மூட்டையாக தபால்... நாய்களை கட்டி வைத்து மறைத்தவர்.. சிக்கியது எப்படி?
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கோவை சாலையில் உள்ளது தட்டாந்தோட்டம் இங்கு குடும்பத்துடன் குடியிருந்து வருபவர் செந்தில்குமார். வெள்ளகோவில் பகுதியில் போஸ்ட் மேனாக வேலைசெய்து வருகின்றார். பொதுமக்களுக்கு வரும் தபால்களை வீடுகளுக்கு கொண்டு சென்று கொடுக்காமல் இவரின் வீட்டிலேயே பதுக்கி வைத்துள்ளார் . இதுகுறித்து வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், மூட்டை தபால்களை டெலிவரி செய்யாமல் பதுக்கி வைத்திருந்த போஸ்ட்மேன் ஒரு நாயை பிடிக்க நடந்த பிரச்சனையால் சிக்கியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தலைமை தபால் நிலையத்திற்கு கட்டுப்பட்டது வெள்ளகோவில் தபால் நிலையம். இங்கு பணிபுரிந்து வருபவர் செந்தில்குமார் (47). இவர் மீது வெள்ளகோவில் பகுதி பொதுமக்களுக்கு வரும் தபால்கள், ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமை ஆட்டை, வங்கிகள் மூலம் வரும் ஏடிஎம் கார்டு,பாஸ் புக்,செக் புக், பேன் கார்டு இவைகளை முறையாக டெலிவரி செய்யாமல் வீட்டின் பின்புறம் பதுக்கி வைத்துள்ளார்.

இதனிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்னர் செந்தில்குமார் வீட்டில் 5 நாய்கள் வளர்த்துக் கொண்டுள்ளார். இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்களை கடிக்க துரத்திக்கொண்டு சென்றுள்ளது. இந்த தட்டாந்தோட்டம் பகுதியில் உள்ள 40 வீட்டு பொதுமக்களும் செந்தில்குமாரின் குடும்பத்தினரிடம் பேசிக்கொள்வது இல்லை. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் அருகே வீட்டில் வசிக்கும் பழனியம்மாளை (64) செந்தில்குமாரின் நாய் துரத்திக்கொண்டு சென்றதுடன் காலை கொடூரமாக கடித்துள்ளது.
இதனால் பழனியம்மாள் கூச்சலிடவே பொதுமக்கள் ஓடிவந்து நாயை துரத்திவிட்டனர். பழனியம்மாளின் மகள் சிவகாமி மற்றும் கணவர் கருப்புசாமியும் ஏன் நாயை கட்டிவைக்காமல் விட்டீர்கள் என்று கேள்வி கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார் மனைவி வசந்தி மற்றும் மகன் ஆகியோர் தகாத வார்த்தைகள் பேசியுள்ளனர். இதையடுத்து பொதுமக்கள் காயமடைந்த பழனியம்மாளை காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துவிட்டு காவல்துறையில் புகார் கொடுத்துவிட்டு நாயை பிடித்து அப்புறப்படுத்த நகராட்சியிடம் புகார் கொடுத்திருந்தனர்.
மேலும் அடுத்த நாள் காலை நகராட்சி நிர்வாகத்தினர் நாயை பிடிக்க வாகனத்துடன் வந்துள்ளனர். இதை அறிந்த செந்தில்குமார் குடும்பத்தினர் விலங்குகள் நலத்துறை பெண் நிர்வாகிக்கு போன் செய்து கூறியுள்ளனர். அந்த பெண் நிர்வாகி நாய்களை பிடித்தால் நகராட்சி மீது வழக்கு போடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் நகராட்சி நிர்வாகமும் நாயை பிடிக்காமல் சென்றுவிட்டாரக்ள். இதையடுத்து, அதிகாரிகள் பழனியம்மாளின் இடத்தை சுத்தப்படுத்த சென்றபோது அந்த இடத்தின் அருகே பொதுமக்களுக்கும் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்லவேண்டிய கவர்கள், 200க்கும் மேற்பட்டோரின் ஆதார் அட்டைகள், மாணவ மாணவியர்களின் கல்லூரி சான்றுகள், வழக்கறிஞர்களுக்கு செல்லவேண்டிய தபால்கள் உட்பட கீழே கிடந்துள்ளது. இதை அடுத்து திருப்பூர் தலைமை தபால் நிலையத்திற்கு புகார் கொடுத்துள்ளனர்.
புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் அந்த தபால்களை ஆய்வுசெய்து 7 சாக்கு மூட்டைகளளில் எடுத்து சென்றுள்ளனர். இந்த தபால்கள் 2022 முதல் 2026 வரை டெலிவரி செய்யவேண்டிய தபால்கள் என தெரிவிக்கின்றனர். மேலும் அதே இடத்தில் தபால்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். அதிகாரிகள் 7 மூட்டைகளில் தபால்களை எடுத்தது செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. தபால்களை டெலிவரி செய்யாமல் அதை மறைத்து வைத்துவிட்டு அதை பொதுமக்கள் தெரிந்துவிட கூடாது என்பதற்காகவே நாய்களை அந்த பகுதியில் கட்டி வைத்துள்ளது தெரியவந்துள்ளது.














Click it and Unblock the Notifications