விஜய்யின் ஜனநாயகன் படத்தை 1.2 கோடி பேர் பார்த்துள்ளனர்.. நீதிமன்றத்தில் சொன்ன காவல்துறை!
சென்னை: சட்டவிரோதமாக இணையத்தில் வெளியான ஜனநாயகன் திரைப்படத்தை 1.20 கோடி பேர் பார்த்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவநாயகன் படம் இணையத்தில் வெளியான வழக்கில் 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், 2 பேர் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தனர். ஆனால் ஜாமீன் கொடுத்தால் ஆதாரங்களை கலைக்க வாய்ப்புள்ளது என்று காவல்துறை வாதிட்டதால், ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அரசியலுக்கு வந்த பின் விஜய் நடித்த கடைசி படம் ஜனநாயகன். அ.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரகாஷ்ராஜ், பிரியாமணி, நாசர், பாபி டியோல் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர். இந்தப் படம் ஜனவரி 2வது வாரத்தில் ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக ஜனநாயகன் படம் ரிலீஸாகவில்லை.

இதனை எதிர்த்து தயாரிப்பு தரப்பு நீதிமன்றத்தை நாடியது. ஆனால் தயாரிப்பு நிறுவனத்தின் நடவடிக்கைகள் ஜனநாயகன் படத்தை மேலும் தாமதம் செய்வதாகவே அமைந்தது. இதனிடையே சட்டசபைத் தேர்தலுக்கு 2 வாரங்களுக்கு முன் ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் கசிந்தது. இதற்கும் தவெகவினர் திமுக மற்றும் பாஜக மீது பழிபோட்டனர்.
ஆனால் ஜனநாயகன் படக்குழுவில் இருந்தவர்கள் செய்த தவறால் படம் இணையத்தில் கசிந்தது தெரிய வந்தது. இந்த விவகாரத்தில் மொத்தமாக 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் 2 பேர் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அப்போது காவல்துறை தரப்பில், சட்டவிரோதமாக இணையத்தில் வெளியான ஜனநாயகன் படத்தை 1.20 கோடி பேர் பார்த்துள்ளனர்.
ஜாமின் வழங்கினால் ஆதாரங்களை கலைக்க வாய்ப்புள்ளது என்று காவல்துறை தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. காவல்துறையின் வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 2 பேரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தனர். இதனிடையே ஜனநாயகன் திரைப்படம் விரைவில் ரிலீஸாகும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
அண்மையில் ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளரான வெங்கட் நாராயணாவுக்கு தமிழக அரசுக்கான டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவியை முதல்வர் விஜய் வழங்கினார். இதன்பின் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் பணிகள் வேகம் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் தவெகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications