வன்முறை நாடான வங்கதேசம்.. போராட்டம் தொடங்கியது எப்படி? முழு டைம்லைன் இதோ
டாக்கா: வங்கதேசத்தில் மாணவர்கள் தொடங்கிய போராட்டம் தற்போது அந்நாட்டின் அரசியலையே புரட்டிப்போட்டிருக்கிறது. பிரதமர் ஹசீனா தப்பியோடியுள்ளார். ராணுவம் முழு கண்ட்ரோலையும் கையில் எடுத்திருக்கிறது. இந்நிலையில் இந்த போராட்டத்திற்கான தொடக்கப்புள்ளி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் பக்கத்து நாடான வங்கதேசத்தில், இந்தியாவில் இருப்பதை போன்றே இட ஒதுக்கீடு முறை இருக்கிறது. குறிப்பாக வங்கதேச சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று உயிர் நீத்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணிகளில் 30 சதவிகிதம் வரை இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

இது தவிர சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள், பெண்களுக்கு 10 சதவிகிதம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுபான்மையினர் என மொத்த இடஒதுக்கீடு 56%ஐ கடந்திருக்கிறது. வங்க தேசத்தை பொறுத்த வரையில் ஒவ்வொரு ஆண்டும் அரசு துறையில் 3,000 காலிப்பணியிடங்கள் உருவாகின்றன. இதற்கு 4,00,000 பேர் விண்ணப்பிக்கின்றனர். எனவே, வேலை வாய்ப்புக்கு அதிக போட்டி ஏற்பட்டு வருகிறது.
இந்த போட்டிக்கு மத்தியில் 56% பணியிடங்கள் இடஒதுக்கீடு மூலமாக நிரப்பப்பட்டுவிடுகிறது. இது அந்நாட்டு மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய துறைகளில் திறமையானவர்கள் வருவதில்லை என்று புலம்பி வந்திருக்கின்றனர். இதற்காக தொடர் போராட்டங்கள் நடந்து வந்திருக்கிறது. போராட்டங்கள் உச்சக்கட்டத்தை எட்டும்போது அந்நாட்டு அரசு இடஒதுக்கீட்டில் சில மாற்றங்களை ஏற்படுத்தும். இப்படியாக கடந்த 2018ல் இந்த இடஒதுக்கீட்டை அந்நாட்டு அரசு ரத்து செய்திருந்தது.
இதற்கு பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேநேரம், இடஒதுக்கீடு ரத்துக்கு மற்ற மாணவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இப்படி இருக்கையில் அந்நாட்டின் உயர்நீதிமன்றம் இடஒதுக்கீடு ரத்து செல்லாது என்று அறிவித்தது. இது இந்த இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையேயான போராட்டத்தை தீவிரப்படுத்தியது.
இந்த போராட்டம் வன்முறையாக வெடித்து நூற்றுக்கணக்காண உயிர்களை பலி கொண்டிருக்கிறது. இந்நிலையில் வன்முறைக்கான தொடக்கப்புள்ளி எது? என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
16 ஜூலை 2024: வங்தேசத்தின் உயர்நீதிமன்றம், அந்நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதாக அறிவித்ததையடுத்து, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் தொடங்கியது. பல்கலைக்கழகங்கள் முற்றுகையிடப்பட்டன. ரயில்பாதைகள் மறிக்கப்பட்டு அத்தியாவசிய போக்குவரத்து அனைத்தும் தடை செய்யப்பட்டது. இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக ஹசீனாவின் கட்சியை சேர்ந்த மாணவர்கள் போராடினர்.
இரு மாணவர் குழுக்களுக்கும் இடையே டாக்கா, சட்டோகிராம் மற்றும் ரங்பூர் ஆகிய பகுதிகளில் கடும் மோதல் வெடித்தது. இதில் 6 மாணவர்கள் கொல்லப்பட்டனர். கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
17 ஜூலை 2024: கல்வி நிலையங்கள் மூடப்பட்டாலும், மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் தங்கியிருந்து முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தனர். நாட்டு மக்களிடையே உரையாற்றிய ஹசீனா, மாணவர்கள் கொலை குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்தார்.
18 ஜூலை 2024: ப்ராக் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல கல்வி நிலையங்களில் தங்கியிருந்த மாணவர்களை ஆளும் கட்சியின் குண்டர்கள் தாக்கினர். இதற்கு எதிராக மாணவர்கள் எதிர் போராட்டங்களை நடத்தினர். இந்த போராட்டங்கள் 19 மாவட்டங்களில் வன்முறையாக வெடித்தது. இதில் 29 பேர் கொல்லப்பட்டனர். அதேபோல கிளர்ச்சியாளர்கள் பிடிவி பாபன், சேது பாபன் என பல அரசு நிறுவனங்களின் கட்டிடங்களை அடித்து நொறுக்கினர். நாடு முழுவதும் இணைய சேவை முடக்கப்பட்டது. மெட்ரோ ரயில் சேவை காலவரையின்றி நிறுத்தப்பட்டது.
19 ஜூலை 2024: சிறைச்சாலைக்குள் புகுந்த கிளர்ச்சியாளர்கள், அங்கிருந்து கைதிகளை விடுவிக்கின்றனர். இப்படியாக ராணுவத்திற்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் அதிகரித்தது. அன்றைய தினம் சுமார் 66 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து அன்று முதல் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்படுகிறது.
20 ஜூலை 2024: ஊரடங்கு அமலுக்கு வந்த முதல் நாளில் ராணுவம் நடத்திய தாக்குதலில் போராட்டக்காரர்கள் 21 பேர் கொல்லப்பட்டனர். ஊரடங்கு நீடிக்கப்படும் என அரசு அறிவித்தது. அதேபோல 2 நாட்கள் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டது.
21 ஜூலை 2024: ஊரடங்கின் இரண்டாவது நாளிலும் போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டங்களை கைவிடாமல் தொடர்ந்தனர். இதனால், ராணுவம் பதிலடி கொடுத்தது. இதில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த சர்ச்சைக்கு மத்தியில் அந்நாட்டின் உயர்நீதிமன்றம், இடஒதுக்கீட்டை 7 சதவிகிதமாக குறைத்தது. ஐரோப்பிய நாடுகளும் ஐநாவும் வங்கதேசத்தில் நடக்கும் சம்பவம் குறித்து கவலை தெரிவித்திருந்தன.
22 ஜூலை 2024: உயிரிழப்புகளுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்தன. மீண்டும் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதுநாள் வரை மொத்தமாக 146 பேர் உயிரிழந்தனர். விரைவில் நாடு அமைதி நிலைக்கு திரும்பும் என ராணுவ தளபதி அறிவிக்கிறார்.
23 ஜூலை 2024: வங்கேதேச அரசு திருத்தப்பட்ட இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பை வெளியிடுகிறது. ஆனால், எதிர்க்கட்சியினரும், போராட்டக்காரர்களும் இதை ஏற்க மறுக்கின்றனர். எனவே அவர்களை குறி வைத்து கைது நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுகின்றன.
24 ஜூலை 2024: நாட்டின் ஒரு சில பகுதிகளில் இயல்பு நிலை திரும்புகிறது. பேருந்து போக்குவரத்து குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் தொடங்கியது.
25 ஜூலை 2024: சர்வதேச நாடுகள் வங்கதேசத்தின் நிலை குறித்து கவலை தெரவித்தன. இயல்பு நிலை மீண்டும் திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தின. பிரதமர் ஹசீனா ராணுவ உதவியுடன் வன்முறை சேதங்களை நேரில் பார்வையிட்டார்.
28 ஜூலை 2024: எல்லாம் இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருந்தது என்று நினைத்துக்கொண்டிருக்கையில், போராட்டங்களில் ஈடுபட்டதாக 2.13 லட்சம் பேர் குற்றம்சாட்டப்பட்டு அவர்கள் மீது அடக்குமுறை தொடர்கிறது.
29 ஜூலை 2024: இதெல்லாம் வேலைக்கு ஆகாது என்று மீண்டும் போராட்டக்காரர்கள் தெருவில் இறங்குகின்றனர். போராட்டம் மீண்டும் சூடுபிடிக்கிறது.
30 ஜூலை 2024: போராட்டங்களில் உயிரிழந்தவர்களுக்கு அரசுதான் காரணம் என மாணவர்களும், ஆசிரியர்களும் வீதியில் பேரணியை நடத்தினர்.
01 ஆகஸ்ட் 2024: போராட்டங்களுக்கு தலைமை தாங்கியவர்களை போலீசார் கைது செய்ததை கண்டித்து, நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைகின்றன. இப்படி தொடங்கிய போராட்டம் இன்று வன்முறையாக வெடித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications